பச்சடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பச்சடி(Pachadi) என்பது ஒரு பாரம்பரிய தென்னிந்திய வகை புதிய ஊறுகாய் வகை உணவாகும். இது உணவின் போது தொட்டுக் கொள்ள உதவும் பக்க உணவாக பரிமாறப்படுகிறது. பரவலாக தென்னிந்திய மொழிகளில் பச்சடி ஒரு துரித உணவைக் குறிப்பதாகவும் உள்ளது. கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் வட இந்திய ராய்தாவைப் போன்ற ஒரு காய்கறி உணவாக பச்சடியை கருதுகிறார்கள். இது காய்கறி, தயிர், தேங்காய், இஞ்சி மற்றும் கறி வேப்பிலை இலைகளுடன் கடுகு சேர்த்து சமைக்கப்படுகிறது. பச்சடி பொதுவாக பருவகால காய்கறிகள் அல்லது பழங்கள் கொண்டு இலேசான மசாலாவுடன் தேங்காய் மற்றும் தயிர் கொண்டு தயாரிக்கப்படும் உணவாகும்.[1].

பச்சடி பெரும்பாலும் அன்று பறிக்கப்பட்ட புதிய காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சோறு மற்றும் இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிகளுக்கு ஒரு துணை உணவாக வழங்கப்படுகிறது. பச்சடி பல வகையான காய்கறிகள் சேர்க்கப்பட்ட ஓர் உணவாகும். சில நேரங்களில் பீர்கங்காயின் மேல்தோலைக் கொண்டு தயாரிக்கப்படும் பச்சடி தெலுங்கில் பீரபொட்டு பச்சடி என அழைக்கப்படுகிறது.[2] .

பச்சடி வகைகள்[தொகு]

ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானா[தொகு]

சுரைக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற பலவகையான புதிய காய்களைக் கொண்டு ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் பச்சடி தயாரிக்கப்படுகிறது. பின்னர் வேகவைத்த காய்கறிகளுடன் காய்ந்த அல்லது பச்சை மிளகாய் சேர்த்து கடுகு சேர்த்து தாளிக்கப்படுகிறது.

கீரை பச்சடி: புளிச்சக்கீரை எனப்படும் கோங்குரா பச்சடி இங்கு மிகவும் பிரபலமான ஒரு பச்சடி வகையாகும். சிவந்த கோங்குரா இலைகளை வதக்கி அதனுடன் வறுத்த சிவப்பு மிளகாய் சேர்த்து இப்பச்சடி சமைக்கப்படுகிறது. ஆந்திர உணவு வகைகளில் தனித்தனிமை பெற்ற இப்பச்சடி வகை சுவையிலும் தனித்தன்மை மிக்கதாகும். இப்பச்சடி ஆந்திராவில் எல்லா வகையான உணவுகளுக்கு அவசியமாக பரிமாறப்படுவதுண்டு. இதை தவிற சுக்கா கூரா எனப்படும் பச்சடி புளிப்பு கீரை வகையிலிருந்து தயாரிக்கப்படும் பிரபலமான ஓர் உணவு வகையாகும். மேலும் இங்கு கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை இலைகளைக் கொண்டு சட்னி எனப்படும் ஊறுகாய் வகை உணவும் தயாரிக்கப்படுகிறது. முக்கிய உணவாகவும் இங்கு உண்ணப்படுகிறது.

மென்மையான கிச்சடிக் காய் தளிர் இலைகளை மோருடன் கலந்து அருந்தினால் வெப்பமான கோடை மாதங்களில் கடுமையான தாகத்தை தணிக்கும் உணவாகப் இம்மாநிலங்களில் பயன்படுகிறது.

கர்நாடகாவில்[தொகு]

இந்திய மாநிலமான கர்நாடகாவில் தம்புளி எனப்படும் ஒரு தயிர் சார்ந்த புதியவகை ஊறுகாய் உணவு உண்ணப்படுகிறது. வழக்கமாக உண்ணப்படும் சாம்பார் சாதத்துடன் இதுவும் உண்ணப்படுகிறது. தம்புலியென்பது குளிர்ச்சியென்ற பொருள் கொண்ட தம்பு (அதாவது, "தணுப்பு" என்ற சொல்லின் வேறுவடிவம்) என்ற கன்னட சொல்லிலிருந்து உருவானதாகும். எனவே தம்புளி உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் உணவு வகையாகும். பலவகையான கீரைகள், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகள் கொண்டு தம்புளி தயாரிக்கப்படுகிறது. பச்சைக் காய்கறிகளுடன் மசாலாப் பொருட்களையும் தயிரையும் சேர்த்து தம்புளியைத் தயாரிக்கிறார்கள். தம்புளியில் சேர்க்கப்படும் அனைத்தும் சமைக்கப்படாமல் பச்சையாகவே பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தம்புளி என்பது புத்தம் புதிய ஓர் ஊறுகாய் வகையாகும். தம்புளியில் பல்வேறு வகைகள் உள்ளன: அவை மெந்தே தம்புளி, இஞ்சி தம்புளி மற்றும் பல்வேறு வகையான மூலிகைத் தம்புளிகள் உள்ளன. கொடிபசலி தம்புளி ,கற்பூரவல்லி தம்புளி, புதினா தம்புளி போன்ற இலைகளுடன் மூலிகை தம்புளிகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இம்மூலிகைகள் அனைத்தும் கர்நாடகா முழுவதும் வளர்க்கப்படுகின்றன.

தம்புளி தயாரிப்பில் பல பருவகால காய்கறிகள் மற்றும் மூலிகைகள் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மூலிகைகளான கற்பூரவல்லி இலைகள் ,கொத்தமல்லி இலைகள், கசகசா விதைகள், கறிவேப்பிலை போன்ற பலவகையான பொருட்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது பல்வேறு தம்புளி வகைகள் அவை தயாரிக்கும் பொருட்களில் சிறிய மாறுபாடுகள் இருக்கும். தம்புளி பொதுவாக குறைவான மசாலா பொருட்களைக் கொண்டு காரமற்றதாக செய்யப்படுகின்றன. தம்புளியில் ஒரு சில எளிய முழு மசாலாப் பொருட்கள் வறுத்து பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுடன் பருவகால காய்கறிகள் அல்லது மூலிகைகள் கொண்டு தேங்காயுடன் மோர் அல்லது தயிர் சேர்த்து பரிமாறப்படுகிறது. தம்புளி என்பது ஓர் உண்மையான கர்நாடக செய்முறை உணவாகும்,

கேரளா மற்றும் தமிழ்நாடு[தொகு]

ஓணம் பண்டிகையின் போது பரிமாறப்படும் சாதையா எனப்படும் கேரள சிறப்பு உணவுடன் பச்சடி

தமிழ்நாட்டிலும் பச்சடி புதியதாகவே உண்ணப்படுகிறது. பொதுவாக பச்சடி வெள்ளரிக்காய் அல்லது சாம்பல் பூசணிக்காய் போன்ற நறுக்கப்பட்ட மற்றும் வேகவைத்த காய்கறிகளால் தயாரிக்கப்படுகிறது. மேலும் இவற்றுடன் தேங்காய், பச்சை அல்லது சிவப்பு மிளகாய் இஞ்சி மற்றும் கறிவேப்பிலை இலைகளுடன் கடுகு விதைகளை எண்ணெயில் பொறித்து மென்மையாக தயாரிக்கப் படுகிறது. பொதுவாக அரிசி மற்றும் துவரம்பருப்பு கறியுடன் பரிமாறப்படுகிறது.

கேரளாவில் பச்சடி என்பது தமிழ்நாட்டைப் போலவே தயிரில் தயாரிக்கப்படும் உணவாகும். இங்கு புளிப்பு பச்சடியுடன் அன்னாசிப்பழம், திராட்சை அல்லது பூசணிக்காயைக் கொண்டு தயாரிக்கப்படும் பச்சடி இனிப்பு சுவையுடன் இருக்கும். இந்த வகைப் பச்சடி செய்முறை கேரளாவின் பல்வேறு பகுதிகளில் செய்யப்பட்டு பறிமாறப் படுகிறது. இது உணவகங்களில் காய்கறி தாளிப்பு மற்றும் சாதத்துடன் பரிமாறப்படுகிறது. பிரபலமான கேரள உணவு சாதையாவிலும் பச்சடி பரிமாறப்படுகிறது. மேலும் விருந்துகளில் குறிப்பாக ஓணம் மற்றும் விச்சுணு பண்டிகைகளின் போதும் பச்சடி சேர்க்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Onam special: Here's what a traditional Onam sadhya consists of". The Indian Express. 2016-09-13. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
  2. "Beera Pottu Kura". Ptitchef- Women's era. பார்க்கப்பட்ட நாள் 17 May 2012.

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பச்சடி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சடி&oldid=3841007" இலிருந்து மீள்விக்கப்பட்டது