உள்ளடக்கத்துக்குச் செல்

நுரையீரல் இண்டியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுரையீரல் இண்டியம் (Indium lung) என்பது ஓர் அரிய தொழில்சார் நுரையீரல் நோயாகும். இண்டியம் வெள்ளீய ஆக்சைடு வடிவத்தில் உள்ள சுவாசிக்கக்கூடிய இண்டியம் வெளிப்படுவதால் இந்நோய் ஏற்படுகிறது. ஓர் இடைநிலை நுரையீரல் நோய் எனவும் பரந்த சோற்றுத்திசு நுரையீரல் நோய் எனவும் இந்நோய் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அறிகுறிகள்[தொகு]

நுரையீரல் மூச்சுச்சிற்றறை புரதம் மிகுதல், நுரையீரல் இணைப்புத்தசையழற்சி போன்றவை நுரையீரல் இண்டியம் நோயின் பிரதானமான முக்கிய அறிகுறிகளாகும். மூச்சுத் திணறல், இருமல் மற்றும் அதிகரித்த சளி உற்பத்தி ஆகியவைகளும் மேலும் சில அறிகுறிகளாகும். நுரையீரல் இண்டியம் நோய் உள்ளவர்களிடம் இருமலின்போது சுவாசக் குழாயிலிருந்து இரத்தம் வருவதையும் காணமுடியும். [1] இருமலின்போது இரத்தம் வெளியேறுவது பொதுவாக மூச்சுக்குழாய் அல்லது நுரையீரலின் கடுமையான தொற்றுநோய்க்கு அடையாளமாகும். விரல்நுனிப் பெருக்கம், சிற்றறையிலிருந்து ஆக்சிசனை இரத்தத்திற்கு நகர்த்தும் திறனைக் குறைக்கும் கார்பன் மோனாக்சைடு பரவும் திறன் பெருக்கம், நுரையீரல் உள்ளிழுக்கும் மற்றும் வெளியிடும் மூச்சுக்காற்றின் அளவை குறைக்க கட்டாயமாக்குவது போன்ற சில அறிகுறிகள் எல்லா நுரையீரல் இண்டியம் நோயாளிகளுக்கும் இருப்பதில்லை என்றாலும் சில நோயாளிகளிடத்தில் காணப்படுகிறது. நுரையீரல் இண்டியம் நோயுடன் திசுக்களின் அதீத வீக்கமும் தொடர்புடையதாகும். ஆனால் நோயறிகுறியின் ஒரு பகுதியாக இது இருக்காது.

நோய்ப் பின்னல்[தொகு]

இண்டியம் உலோகம் ஒரு புற்றுநோய் உண்டாக்கும் காரணியாக அறியப்படவில்லை என்றாலும் நுரையீரல் இண்டியம் நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

காரணங்கள்[தொகு]

இண்டியம் உலோகத்தை உற்பத்தி செய்யும் மற்றும் மீட்டெடுக்கும் பல்வேறு தொழில் சூழல்களில் இண்டியம் வெள்ளீயம் ஆக்சைடு என்ற வேதிப்பொருளுக்கு உடல் வெளிப்படுவதால் நுரையீரல் இண்டியம் நோய் ஏற்படுகிறது. [1] இந்நிகழ்வுக்கு உட்படும்போது ஒருவருடைய உடல் மற்றும் உறுப்புகள் இண்டியம் உலோகம், இண்டியம் ஐதராக்சைடு, இண்டியம் ஆக்சைடு போன்ற வேதிப்பொருட்களுக்கும் வெளிப்படுகிறது.

நோய்க்கிருமி[தொகு]

இண்டியம் நோய்க்கிருமியை எவ்வாறு உருவாகிறது என்பதற்கான சரியான வழிமுறை தெரியவில்லை. ஆனால் இண்டியம் நோயெதிர்ப்பு சக்தியின் அளவை குறைவாக்கி நோய் தாக்கக் கோளாறுகளை அதிகப்படுத்தலாம். அல்லது நுரையீரல் சிற்றறையின் நோய் தடுக்கும் வெள்ளையணுக்களை விழுங்கி நுரையீரல் செயலிழப்பை ஏற்படுத்தலாம் என்ற முடிவு அனுமானிக்கப்படுகிறது. [2]

நோயறிதல்[தொகு]

சி.டி.இசுகேன் எனப்படும் கணிப்பொறி பருவரைவியல், கதிர்வீச்சு வரைவியல் போன்ற மருத்துவ நுட்பங்கள் நுரையீரல் இண்டியம் நோயைக் கண்டறிய உதவலாம். நுரையீரலில் மங்கலான ஒளி புகாபகுதி, மடல்களுக்கிடையிலான இடைச்சுவர் வீக்கம், இணைப்புத்தசையின் தேன்கூட்டுத் தோற்றம், மூச்சுக்குழல் விரிவு உள்ளிட்டவை கணிப்பொறி பருவரைவியல் அசாதரணங்கள் எனக்கருதப்படுகின்றன. [1][2] .

ஆய்வகக் கண்டுபிடிப்புகள்[தொகு]

நுரையீரல் இண்டியம் நோயில் பல அசாதாரண ஆய்வக கண்டுபிடிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நுரையீரல் இண்டியம் நோயாளிகள் அனைவரின் குருதி நீரிலும் அதிக அளவு இண்டியம் கண்டறியப்பட்டுள்ளது. அலானின் டிரான்சமினேசு, ஆசுபர்டேட்டு டிரான்சமினேசு போன்ற நொதிகளின் உயர் அளவு, பெண்டாமெரிக் புரதத்தின் உயர் அளவு, உயர்த்தப்பட்ட நுரையீரல் இடைத்திசு நோய் குறிப்பான்கள், இரத்த குறுமணி வெள்ளணு-பெருவிழுங்கி அணுத்தூண்டல் போன்றவையும் நுரையீரல் இண்டியம் நோயாளிகளின் ஆய்வுக்கூட அறிக்கைகளில் இடம்பெறுகின்றன. [2]

பாதுகாப்பு[தொகு]

நுரையீரல் இண்டியம் நோய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, சப்பான் நாட்டின் தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொள்ளக்கூடிய இண்டியம் வெளிப்பாட்டிற்கான வரம்புகளை 0.0003 மி.கி/மீ3 என நிர்ணயித்துள்ளது. [2][3] இண்டியம் வெளிப்பாட்டைக் குறைப்பதற்கான முறைகளே சிறந்த பாதுகாப்பு முறையாகக் கருதப்படுகிறது. இண்டிய தொழிற்சாலைத் தொழிலாளர்களின் மருத்துவக் கண்காணிப்பும் ஒரு தடுப்பு முறையாகும். [2]

சிகிச்சை[தொகு]

நுரையீரல் இண்டியம் நோய்க்கு தரப்படுத்தப்பட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை. நுரையீரல் கழுவுதல் மற்றும் இயக்க ஊக்கி மருந்து சிகிச்சை ஆகியவை மட்டுமே இப்போதைக்கு உள்ள சிகிச்சை வாய்ப்புகள் ஆகும். [1][2]

முன்கணிப்பு[தொகு]

2012 ஆம் ஆண்டு வரை முன்கணிப்பு காரணிகள் ஆராய்ச்சிக்கு உட்பட்டவையாக இருந்தன. வேலையின் காலம் மற்றும் சுவாசப் பாதுகாப்பைப் பயன்படுத்துதல் ஆகியவை முன்கணிப்பு காரணிகளுக்கான பூர்வாங்க சான்றுகள் அல்ல. ஆனால் குருதி நீரில் இண்டியத்தின் அளவை கூறுதல் ஒரு முன்கணிப்பு காரணியாக இருக்கலாம் - அதிக அளவு குருதிநீர் இண்டியம் அளவு மோசமான முன்கணிப்புகளுடன் தொடர்புடையது. நுரையீரல் இண்டியம் நோய் பல சந்தர்ப்பங்களில் உயிருக்கு ஆபத்தானதாகியுள்ளது. [2]

வரலாறு[தொகு]

நுரையீரல் இண்டியம் நோய் முதன்முதலில் 2003 ஆம் ஆண்டு சப்பானிய ஆராய்ச்சியாளர்களின் குழுவால் விவரிக்கப்பட்டது [1][4]

தொற்றுநோயியல்[தொகு]

சப்பான், அமெரிக்கா மற்றும் சீனாவில் நுரையீரல் இண்டியம் நோய்கள் பதிவாகியுள்ளன. [1][2][5] இண்டியம் தொழில்துறை முக்கியமாக சப்பானை அடிப்படையாகக் கொண்டது, அங்கு பெரும்பாலான நுரையீரல் இண்டியம் நோயாளிகள் அறியப்பட்டுள்ளனர், இண்டியம் தொழில் அமெரிக்கா, சீனா, தைவான் மற்றும் தென் கொரியா நாடுகளிலும் நடைபெறுகிறது. [4] 2010 ஆம் ஆண்டு வரை, 10 நுரையீரல் இண்டியம் நோயாளிகள் அறியப்பட்டுள்ளனர். இருப்பினும் நூற்றுக்கும் மேற்பட்ட இண்டிய தொழிற்சாலை தொழிலாளர்கள் சுவாசக் கோளாறுகளை ஆவணப்படுத்தியுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Sauler, Maor; Gulati, Mridu (December 2012). "Newly Recognized Occupational and Environmental Causes of Chronic Terminal Airways and Parenchymal Lung Disease". Clinics in Chest Medicine 33 (4): 667–680. doi:10.1016/j.ccm.2012.09.002. பப்மெட்:23153608. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Cummings, Kristin J.; Nakano, Makiko; Omae, Kazuyuki; Takeuchi, Koichiro; Chonan, Tatsuya; Xiao, Yong-long; Harley, Russell A.; Roggli, Victor L. et al. (June 2012). "Indium Lung Disease". Chest 141 (6): 1512–1521. doi:10.1378/chest.11-1880. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-3692. பப்மெட்:22207675. 
  3. The Technical Guideline for Preventing Health Impairment of Workers Engaged in the Indium Tin Oxide Handling Processes (PDF). JNIOSH. 2010.
  4. 4.0 4.1 Homma, Toshiaki; Ueno, Takahiro; Sekizawa, Kiyohisa; Tanaka, Akiyo; Hirata, Miyuki (May 2003). "Interstitial pneumonia developed in a worker dealing with particles containing indium-tin oxide". Journal of Occupational Health 45 (3): 137–139. doi:10.1539/joh.45.137. பன்னாட்டுத் தர தொடர் எண்:1341-9145. பப்மெட்:14646287. 
  5. Cummings, Kristin J.; Donat, Walter E.; Ettensohn, David B.; Roggli, Victor L.; Ingram, Peter; Kreiss, Kathleen (March 1, 2010). "Pulmonary alveolar proteinosis in workers at an indium processing facility". American Journal of Respiratory and Critical Care Medicine 181 (5): 458–464. doi:10.1164/rccm.200907-1022CR. பன்னாட்டுத் தர தொடர் எண்:1535-4970. பப்மெட்:20019344. 

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுரையீரல்_இண்டியம்&oldid=3321880" இலிருந்து மீள்விக்கப்பட்டது