தொழில்நுட்ப வரைதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேலையில் ஈடுபட்டிருக்கும் ஒரு படவரைஞர்.
தொழில்நுட்ப வரைபடம் படியெடுக்கப்படுகின்றது. 1973

தொழில்நுட்ப வரைதல் (Technical drawing) என்பது, கட்டிடக்கலை, பல்வேறு பொறியியல் துறைகள், உள்ளக வடிவமைப்புத் துறை போன்ற துறைகளில் பயன்படும், வரைபடங்களை வரைவதாகும். பொதுவாக இவ்வரைபடங்களை வரையும்போது, அவற்றின் அமைப்பு, கோட்டுத் தடிப்பு, எழுத்துக்களில் அளவு, குறியீடுகள், அளவு குறித்தல் போன்ற பல அம்சங்கள் தொடர்பில் தரப்பாடுகளும் மரபுமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. இதன்மூலம், மேற்படி தரப்பாடுகளைப் பின்பற்றி வரையப்படும் வரைபடங்களை எல்லோரும் இலகுவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இவ்வரைபடங்களை வரைபவர் படவரைஞர் என அழைக்கப்படுகின்றார். தொழில்நுட்ப வரைதல் ஒரு சிறப்பு வகையான படம்சார் தகவல் பரிமாற்றம் எனலாம். ஒரு பொதுவான வரைதலின் மூலம் பெறப்படும் படங்கள் பல நோக்கங்களைக் கொண்டவையாகவும், பல விளக்கங்களைக் கொடுக்கக் கூடியவையாகவும் இருக்கலாம். ஆனால், தொழில்நுட்ப வரைதலில் பெறப்படும் வரைபடங்கள் ஒரு குறித்த எண்ணத்தை இயற்பிய வடிவமாக மாற்றத் தேவையான எல்லாத் தகவல்களையும் துல்லியமாகவும் மயக்கங்களுக்கு இடமின்றியும் தருதல் வேண்டும்.

வரைதல் முறைகள்[தொகு]

கையால் வரைதல்[தொகு]

ஒரு பொறிமுறை வரைதற்பலகை.

கையால் தொழில்நுட்ப வரைபடங்களை வரைவதற்குப் பல கருவிகள் பயன்படுகின்றன. இவற்றுள் வரைதற்பலகை, வரைசட்டம், மூலைமட்டம் என்பவையும், பேனா, பென்சில் என்பனவும் அடிப்படையானவை. வரைதற்பலகை அழுத்தமானதும், மட்டமானதுமான மேற்பரப்பைக் கொண்டிருக்கும். படங்களை வரைவதற்கான தாள் இதன் மேல் பொருத்தப்படும். "T" வடிவம் கொண்ட வரைசட்டத்தை இதன் மீது வைத்து, வரைதற்பலகையின் ஒரு பக்க விளிம்புடன் அழுத்தியபடியே மேலும் கீழும் அசைப்பதன் மூலம் ஒன்றுக்கொன்று இணையான கிடைக் கோடுகளை வரையலாம். செங்கோண முக்கோண வடிவம் கொண்ட மூலைமட்டத்தை வரைசட்டத்தின் மேல் விளிம்போடு பொருந்தியிருக்கும்படி வைத்து ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு அசைப்பதன் மூலம் ஒன்றுக்கொன்று இணையான நிலைக்குத்துக் கோடுகளை வரைய முடியும். பிற்காலத்தில் இக் கருவிகள் மேம்படுத்தப்பட்டுப் பல வடிவமைப்புக்களில் அமைக்கப்பட்டன. தனியான வரைசட்டம், மூலைமட்டம் என்பவற்றுக்குப் பதிலாக எல்லாக் கோணங்களிலும் இணைக் கோடுகளை இலகுவாக வரையக் கூடிய வகையிலான கூறுகள் பொருத்தப்பட்ட வரைபலகைகளும் உருவாக்கப்பட்டன. இவை பொறிமுறை வரைதற்பலகைகள் அல்லது வரைதற்பொறிகள் என அழைக்கப்பட்டன. மேற்படி அடிப்படையான கருவிகள் தவிர, வட்டங்களையும், வட்டத்துண்டுகளையும் வரைவதற்கான கவராயம், வளைகோடுகளை வரைவதற்கான கருவிகள், பல்வேறு குறியீடுகளுக்கும் எழுத்துக்களுக்குமான உருவரைதகடுகள் என்பனவும் கையால் வரைபடங்களை வரையும்போது பயன்பட்டன. கையால் வரையும்போது வெவ்வேறு தடிப்புக் கொண்ட கோடுகளை வரைவதற்குத் தனித்தனியான பேனாக்கள் பயன்படுகின்றன. இவை வரைதல் பேனாக்கள் எனப்படுகின்றன.

கணினி உதவு வரைதல் முறை[தொகு]

இது கணினிகளைப் பயன்படுத்தி வரைபடங்களை வரையும் ஒரு முறை. இம்முறை அறிமுகமான பின்னர் வரைபடங்களை வரைதலில் பெருமளவு அடிப்படையான மாற்றங்கள் ஏற்பட்டன. அலுவலகங்களிலும் பெரிய வரைபலகைகளை வைப்பதற்குத் தேவையாக இருந்த இடம் மீதமானது. தற்காலத்தில் பெரும்பாலும் கையால் வரையும் முறை கைவிடப்பட்டுக் கணினி உதவு வரைதல் முறை பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. கணினியில் வரைபடங்களை வரைவதற்கு உதவுவதற்காகப் பல மென்பொருட்களை உருவாக்கியுள்ளனர். கணினியில் உருவாக்கப்படும் வரைபடங்கள் மின்னணுக் கோப்புக்களாகச் சேமிக்கப்படுகின்றன. இவை பின்னர் வரைபொறிகளினால் தாள்களில் அச்சிடப்படுகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழில்நுட்ப_வரைதல்&oldid=3691449" இலிருந்து மீள்விக்கப்பட்டது