தென்னிந்திய பழுப்பு பாறு ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்னிந்திய பழுப்பு பாறு ஆந்தை (South Indian brown hawk-owl, உயிரியல் பெயர்: Ninox scutulata hirsuta) என்பது பழுப்பு பாறு ஆந்தையின், கிளை இனம் ஆகும்.[1] இது தென்னிந்தியா, இலங்கை போன்ற பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து வாழ்கிறது.

விளக்கம்[தொகு]

புறா அளவுள்ள இப்பறவை சுமார் 32 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு கறுப்பு நிறத்திலும், விழிப்படலம் நல்ல மஞ்சள் நிறத்திலும், கால்கள் மஞ்சள் தோய்ந்த பச்சை நிறத்திலும் இருக்கும். இப்பறவையின் உடலின் மேற்பகுதி ஆழ்ந்த கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும். நெற்றியிலும் தோள்பட்டையிலும் வெண்மை நிறம் காணப்படும். தொண்டையும் முன் கழுத்தும் சிவப்புக் கலந்த மஞ்சள் நிறமாக பழுப்புக் கோடுகளோடு காணப்படும். உடலின் பிற கீழ்ப்பகுதிகள் வெண்மையாகச் சிவப்புக் கலந்த பழுப்புப் புள்ளிகளோடு காணப்படும். வால் கறுப்புப் பட்டைகளோடும், வெள்ளை விளிம்புகளோடும் இருக்கும். இது பார்வைக்கு பாறு போன்ற வடிவம் கொண்டதாக உள்ளது. பாலின இருமை இல்லை.[2]

பரவலும் வாழ்விடமும்[தொகு]

இப்பறவை தென்னிந்தியாவில் கருநாடக மாநிலம், மேற்குத் தமிழ்நாடு, கேரளப் பகுதிகளில் ஆங்காங்கே சமவெளிகளிலும், மலைகளிலும் 1300 மீட்டர் உயரம் வரை காணப்படும். இது இலங்கையிலும் இனப்பெருக்கம் செய்து வாழ்கிறது. இப்பறவை மரங்கள் அடர்ந்த காடுகளிலும், தோப்புகளிலும் சிறப்பாக காணப்படுகிறது.[2]

நடத்தை[தொகு]

இப்பறவை காலை மாலை அந்தியிலும், இரவு நேரத்திலும் தன் மறைவிடத்தில் இருந்து வெளிவந்து இரை தேடும். பகல் நேரத்தை தனித்தோ, இணையாகவோ மரப் பொந்தில் நேரத்தைக் கழிக்கும். பகல் வெளிச்சத்திலும் தேவைப்பட்டால் பறக்கக்கூடியது. பறந்து சென்று மரக் கிளையில் அமரும்போது, பாறுகளைப் போல மேல் நோக்கித் தாவியே மரக்கிளையில் அமரும். மாலை நேரத்தில் மரக் கிளையில் அமர்ந்து தாவித் தாவிப் பறந்து, பறந்துவரும் பூச்சிகளைக் கால் விரல்களால் பிடித்து கொண்டு மீண்டும் பழைய இடத்திற்கை வந்து சேரும். அந்திக் குருவியைப் போல மாலை அந்தியிலும் சுற்றிச் சுற்றிப் பறந்து வண்டுகளைப் பிடிக்கும் பழக்கம் இப்பறவைக்கு உண்டு. பூச்சிகள், வண்டுகள், தத்துக்கிளி போன்றவை இதன் உணவில் முதன்மை இடத்தைப் பெற்றுள்ளன. தவளை, ஓணான், சிறு பறவைகள், சுண்டெலி போன்றவற்றையும் வேட்டையாடி உண்ணக்கூடியது.[2]

சற்று இனிமையான மென்மையான குரலில் ஊ...உக், ஊ...உக், ஊ...உக் என நொடிக்கு ஒருமுறை என தொடர்ந்து பதிமூன்று முறை வகை கத்தும். ஒன்றுக்கொன்று குரல் கொடுப்பதும் உண்டு.

இப்பறவைகள் சனவரி முதல் மே வரை இனப்பெருக்கம் செய்கின்றன. மரப் பொந்தில் கூடு அமைக்கின்றன. இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடுகின்றன. முட்டை வெள்ளையாக இருக்கும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2021). "Owls". IOC World Bird List Version 11.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 May 2021.
  2. 2.0 2.1 2.2 2.3 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 267-268.