திரோசிரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரோசிரா
திரோசிரா
உயிரியல் வகைப்பாடு
திணை: நிலைத்திணை
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இரு வித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Core eudicots
வரிசை: Caryophyllales
குடும்பம்: திரோநிரோசியீ
பேரினம்: திரோசிரோ
கார்லஸ் லியோன்னஸ்
இனங்கள்

See separate list.

திரோசிரோ (Drosera)என்பது ஒருபூச்சி உண்ணும் தாவரம் ஆகும். இது திரோசிராசீயீ என்னும் இரட்டை விதையிலைத் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதில் 194 வகைச் செடிகள் உள்ளன[1]. இக்குடும்பத்தில் திரோசிரோ வகையே அதிகச் செடிகளைக் கொண்டது. இவை வெப்ப மண்டல மற்றும் குளிர் மண்டலத்திலும் உள்ள சதுப்பு நிலங்களிலும் நீர்க்கசிவு உள்ள பாறை சந்துகளிலும் வாழும். இவை பலபருவச் சிறு செடிகளாகும். தான் வாழும் நிலத்தில்ல் உள்ள சத்துப்பற்றாக்குறைக்காக இவை அங்குள்ள பூச்சியினங்களை உண்கின்றன. இச்செடிகள் அண்டார்ட்டிகா கண்டம் தவிர்த்து பொதுவாக எல்லாக் கண்டங்களிலும் இயற்கையில் காணப்படுகின்றன.[2] இந்தியாவில் திரோசிரா இனத்தில் மிகச்சிறிய திரோசிரா ஆமில்டோனி, மிகப்பெரிய செடியான திரோசிரா ஜைஜாண்டியா, திரோசிரா பில்லிபார்மிஸ் ஆகிய மூன்று வ்கை மட்டுமே காணப்படுகின்றன. தமிழ் நாட்டிலும் இவை காணப்படுகின்றன.

அமைப்பு[தொகு]

இச்செடியின் தண்டு தரையில் ஊர்ந்து வளரும் மட்டத் தண்டுக் கிழங்காக இருக்கும்.[3] இலைகள் அடித்தண்டின் இலைகளாக பூவிதழ் அடுக்கு போல இருக்கும். ஒவ்வொரு இலையும் ஒரு கரண்டியை ஒத்திருக்கும். சில நீளமாக இருக்கும். இலைகளின் முடிகளில் காம்பு இருக்கும். இவை சுரப்பிகளுள்ள முடிகள் ஆகும். இவற்றில் சிவப்பு அல்லது சிவப்பு கலந்து ஊதா நிறமான திரவம் நிறைந்து காணப்படும். அலகின் நடுவிலுள்ள ரோமங்கள் குட்டையானவை விளிம்பை அணுக அணுக அவை நீண்டு கொண்டே போகும். ஒவ்வொரு முடியின் தலையிலும் பிசுபிசுப்பான பசை சுரக்கும். இது இனிப்பாகவும் இருக்கும். காலை வெயிலில் இப்பசையானது பனித்துளிபோல பிரகாசிக்கும். இதை வைத்து சூரியனின் பனி(Sundew) அல்லது பனிச்செடி(Dew plant) என இதனை அழைப்பார்கள். பூச்சியுணவு இல்லா நிலத்திலும் இவை உயிர் வாழ முடியும். ஆனால் செடி நைட்ரேட் இல்லாத நிலத்திலும் வாழ்வதற்கு இவை உதவுகின்றன.

திரோசிராவின் பூக்கள் ஒரு கதிர்போல் உண்டாகும். பூக்கள் வெண்மை, வெளுப்பான சிவப்பு நிறத்திலும் இருக்கும். புறவிதழ்கள் 4,5,8 பிரிவுகளாக இருக்கும்.[4] அகவிதழ்களும், கேசரங்களும் அதே எண்ணிக்கையில் இருக்கும். சூலகம் ஓரறை உடையது. கனி வெடிகனி வகையைச் சேர்ந்ததாகும்.

பூச்சிகளைப் பிடித்தல்[தொகு]

இலையின் நிறத்தாலும் மினுமினுக்கும் தன்மையாலும் இத்துளிகளைத் தேன் என நினைத்து சிறு பூச்சிகள் வந்து உட்காரும்போது பூச்சியின் கால்கள் அந்தப் பசையில் ஒட்டிக்கொள்ளும்.அப்பூச்சிகள் தப்பியோட முயற்சிக்கும் போது மற்ற சுவாரனைக்கொம்புகளும் இதன் உதவிக்கு வரும் . முடிகளின் தலைகள் அலகினுள்முகமாகவும் கீழ்நோக்கியும் வளையும் இதனால் நுனியில் அகப்பட்டுக்கொண்ட பூச்சி இலையின் நடு பரப்பிலே இடப்படும். அதே சமயத்தில் பூச்சி விழுந்தால் ஏற்பட்ட தூண்டலானது பக்கத்திலே சூழ்ந்திருக்கும் உணர்கொம்புகளுக்கும் செல்லும். அவையும் கீழ்நோக்கி பூச்சி இடம்பெற்றுள்ள இடத்திற்கே வளைந்து வரும். இவ்வாறு இரையான பூச்சி முற்றிலும் மூச்சு விட முடியாமல் மூடப்பெறும். இச்சமயத்தில் உணர்கொம்புகளின் தலைகளிலுள்ள சுரப்பிகளிலிருந்து புரதப் பொருள்களைச் சீரணிக்கக்கூடிய என்சைம்கள் சுரக்கும். சீரண நீரின் உதவியால் பூச்சியின் உடலிலுள்ள புரதம் மிருதுவான பகுதிகளில் சீரணிக்கப்படும். பூச்சியின் உடல் முழுவதும் செரிக்கப்படும்வரை சுவாரணைக் கொம்புகள் மூடியே இருக்கும். பிறகு சுரப்பு நின்று விடும். இதன் பின்னரே உள்நோக்கி வலைந்துள்ள உணர்கொம்புகள் மெல்ல நீண்டு பழைய நிலையை அடைகின்றன. செரிக்கப்படாத பூச்சியின் இறகு மற்றும் பிறபகுதிகள் கீழே விழுந்தவுடன் இலைகள் மீண்டும் அதிகப்படியான பிசுபிசுப்பான ஒட்டுத் திரவத்தைச் சுரக்கின்றன. மீண்டும் அடுத்த வேளை உணவுக்காக மற்றோர் பூச்சியை எதிர்பாத்துக் காத்துக் கொண்டிருக்கும். அதிகமாகக் கிடைக்கும் உணவுகளை இவை விதை உண்டாக்கப் பயன்படுத்திக் கொள்கின்றன. பூச்சிக்குப் பதிலாக சிறு கல்லோ, சடப்பொருளோ இலையின் மேல் விழுந்தால் ஒன்றும் நடப்பதில்லை.

இச்செடிகள் பசுமைக் காப்பகங்களில் வளர்க்கப்படுகின்றன. உப்பில்லாத நீரில் இவை நன்கு வளர்கின்றன. உப்பு செடிக்கு வெறுப்பூட்டும் பொருளாகும். இச்செடிகளை ஜாடியில் வளர்க்கும் போது இத்துடன் பாசிச் செடிகளும் வைக்க வேண்டும். விதைகள் மூலமும் மட்டத்தண்டு கிழங்கைப் பிரித்தும் இதை இனப்பெருக்கம் செய்யலாம்.

ஊனுண்ணித் தாவரங்கள் பகுப்பு[தொகு]

வரிசைஎண் குடும்பம் பேரினம் வகைகள்
1 பிப்ளிடேசியீ பிப்ளிஸ் 2
ரோரிடுலா 1
2 செப்பலோடேசியீ செபலோட்டசு 1
3 திரோசிரேசியீ ஆல்ட்ரோவாண்டா 1
டயோனியா 1+1
திரோசிரா 90
திரொசோபில்லம் 2
4 லண்டிபுளோரேசியீ பிங்குவிக்குலா 40
ஜென்லிசியா 1
பயோவுலேரியா 1
யூட்ரிக்குளோரியா 275
பாலிபாம்போலிக்ஸ் 2
5 நெப்பந்தேசியீ நெப்பந்திசு 70
6 சாரசீனியேசியீ டார்லிங்டோனியா 1+1
ஹிலியாம்போரா 3
சாரசீனியா 6

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. McPherson, S.R. 2010. Carnivorous Plants and their Habitats. 2 volumes. Redfern Natural History Productions Ltd., Poole.
  2. McPherson, S.R. 2008. Glistening Carnivores. Redfern Natural History Productions Ltd., Poole.
  3. B. Wang and Y.-L. Qiu (2006). "Phylogenetic distribution and evolution of mycorrhizas in land plants". Mycorrhiza 16 (5): 299–363. doi:10.1007/s00572-005-0033-6. பப்மெட்:16845554. http://www.springerlink.com/content/x7151p60502078u1/. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. Murza, Gillian L; Heaver, Joanne R; Davis, Arthur R (2006). "Minor pollinator-prey conflict in the carnivorous plant, Drosera anglica". Plant Ecology. Vol. 184 (1): 43–52. doi:10.1007/s11258-005-9050-y. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரோசிரா&oldid=3843005" இலிருந்து மீள்விக்கப்பட்டது