சேரன் செங்குட்டுவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

சேரன் செங்குட்டுவன் பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சேரலாதன் என்னும் மன்னனுக்கும், சோழன் மணக்கிள்ளிக்கும் பிறந்த மகன். பதிற்றுப்பத்து, பதிகம் இவனது தாயின் தந்தை பெயரை ஞாயிற்றுச் சோழன் எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. மணக்கிள்ளி என்பது இவன் தாயின் பெயர். இப் பெயர் 'சோழன் மணக்கிள்ளி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. [1]. மணக்கிள்ளி என்னும் தாயின் பெயரை 'நற்சோணை' என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.

சிறுபாணாற்றுப்படை தரும் செய்தி[தொகு]

இயல்தேர்க் குட்டுவன் (சேரன் செங்குட்டுவன்) வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்தான் என்றும், வஞ்சியில் இருந்துகொண்டு ஆண்டவன் என்றும் குறிப்பிடுகிறது.

காலம்[தொகு]

இவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும், அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது துணிபு. முதலாம் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில் இருந்து தெரிய வருவதால், செங்குட்டுவனும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று கூற முடியும். சாதவாகன மன்னன் சிறீசதகர்ணியும் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் வாழ்ந்தவனே.

தமிழ் இலக்கியங்களில், சிலப்பதிகாரம் அதன் வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான். அதற்காகப் பொதிய மலையில் கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகது என்று எண்ணிய அவன், ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய வடநாட்டு வேந்தரான கனக விசயரை வென்று, இமயமலையில் கல்லெடுத்து, அவர்கள் தலையிலேயே கற்களைச் சுமப்பித்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவன் முடிவு செய்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

இதன்படியே வட நாட்டுக்குப் படை நடத்திச் சென்று, எண்ணியபடியே கனக விசயர் தலையில் கல் சுமப்பித்துக் கண்ணகிக்குச் சிலை எடுத்ததாகவும், மாடலன் என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் தணிந்து கனக விசயரைச் சிறையினின்றும் விடுவித்து, அறச் செயல்களில் ஈடுபடச் செங்குட்டுவன் முடிவு செய்தான் என்பதும், கண்ணகிக்குக் கோயில் எடுத்த விழாவில் கனக விசயர், இலங்கை மன்னன், மாழுவ மன்னன், குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர் என்பதும் சிலப்பதிகாரம் தரும் தகவல்கள்.

குறிப்புகள்[தொகு]

  1. 'திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள்' என்னும் தொடர் ஞாயிறு குலத்துச் சோழன் என்பதை விளக்குவதாகும். இதனைச் சோழன் பெயர் 'ஞாயிற்றுச் சோழன்' எனச் சிலர் குறிப்பிடுவர். சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம், வாழ்த்துக்காதை, உரைப்பாட்டு மடை 1

"திகழ் ஒளி ஞாயிற்றுச்சோழன்" என்பது கரிகால்சோழனின் தந்தை இளஞ்சேத்சென்னியைக் குறிக்கும்; அகநாநூறு -13ல் இளஞ்சேத் சென்னியே "கோடைப் பொருநன்" எனப்படுகிறான்; சிலப்பதிகாரத்திலும் சேத்சென்னியின் மகன் கரிகால்சோழன் "வெய்யோன்" எனக் குறிக்கப்படுகிறான். "காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன்?" எனக் கேட்டபோது; "கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய் ஒல்லெரி உண்ணும் இவ்வூர்" என்றது ஓர்குரள் என்றனன் வெய்யோன்" எனக் குறிப்பிடுகிறது. கருங்கயற்கண்- மீனாட்சியே கண்ணகியாக சிலப்பதிகாரத்தில் மாற்றப்பட்டாள். கண்ணகி காப்பியம் உண்மையான வரலாற்றை மறைத்து எழுதப்பட்டது. 'தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்; தாயைப் பழித்தவன் தந்தாய்யானாலும் விடேன்' என்று வெஞ்சினமுறைத்தவன் செங்குட்டுவன். கரிகால்சோழனின் தங்கைமகனே செங்குட்டுவன். செங்குட்டுவனின் தாயை நல்லியற்பாவை என நற்றிணைப் பாடல் குறிப்பிடுகிறது. செங்குட்டுவனை "நல்லியற்கோடன் என மலைபடுகடாம் குறிப்பிடுகிறது. சோழனுக்குப் பிறந்த நல்லியற்பாவை; முசுகுந்தனால் புணரப்பட்டுக் கருவுற்றதால் பிறந்தவனே செங்குட்டுவன். அகநாநூறு- 13ஆம் பாடலின்படி வேள்வியில் நிகழ்ந்த கொடிய கொலைகளால் சோழர்கள் நாட்டை இழந்து நாடுகடத்தப்பட்டனர். முசுகுந்தன் தனக்கு முடிசூட்டும்படி தில்லைவாழ் அந்தணர் தமைவெண்ட அவரும் செம்பியர்தம் தொல்லைநீடும் குலமுதலோர்க்கன்றிச் சூட்டோம் முடி என்று மறுத்துத் தில்லியான புலியூரைவிட்டு நீங்கினர் என்பதைப் பெரியபுராணத்திலும் காணலாம். பாவை தனது தாயின் தாய்வழிப்பங்கான சேரநாட்டின் ஒருபகுதியில் திருக்குறுங்குடியில் வாழ்ந்தாள். தனது மகனை மாபெரும் வீரனாக வளர்த்து; தன்னை ஏமாற்றிக்கெடுத்த முசுகுந்தன் மீது பொர்தொடுக்கச்செய்தாள். செங்குட்டுவனும் அவனது தாய்மாமன் கரிகால்சோழனும் முசுகுந்தனை இமையம்வரை துரத்திச்சென்று சிறைப்பிடித்தனர். தங்களது சின்னங்களையும் பொறித்தனர். சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற தலையாலங்கானத்துச்செரு வென்ற நெடுஞ்செழியன் முசுகுந்தனுடன் சேர்ந்ததனாலேயே அனைத்துத் துயரங்களும் நேர்ந்தன. அவனும் அடக்கப்பட்டான். ஆரியப்படைகடந்த மற்றொரு நெடுஞ்செழியனும் இமையம் வரை கரிகால்சோழன் மற்றும் செங்குட்டுவனுடன் சென்று வெற்றிபெற்றுத் தனது சின்னத்தைப் பொறித்தான். இந்த வரலாறு குறித்த தகவல் எவராலும் வெளிப்படுத்தப்படவில்லை. அகநாநூறு -13ஆம் பாடலுக்கான பொருளையோ வரலாற்றையோ இன்றுவரை எவரும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உசாத்துணை[தொகு]

  • ஸ்ரீசந்திரன், ஜெ., சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2001 (ஒன்பதாம் பதிப்பு).
"http://ta.wikipedia.org/w/index.php?title=சேரன்_செங்குட்டுவன்&oldid=1512874" இருந்து மீள்விக்கப்பட்டது