சேச்சா டேவிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேச்சா டேவிஸ்
பிறப்புசேச்சா ஜார்ஜ்ஜ்
1898
கேரளம், இந்தியா
இறப்பு1979 செப்டம்பர் 2
சிங்கப்பூர்
தேசியம்சிங்கப்பூரியன்
மற்ற பெயர்கள்திருமதி ஈ.வி. டேவிஸ்
பணிகல்வியாளர், சமூக சேவகர், பெண்கள் உரிமை ஆர்வலர்
செயற்பாட்டுக்
காலம்
1916–1979
அறியப்படுவதுசிங்கப்பூரின் இளம் பெண்கள் கிருத்துவ சங்கத்திற்காக பெண்கள் விடுதி கட்ட தனது எடையை தங்கத்தில் நன்கொடையாக வழங்கினார்

சேச்சா டேவிஸ் (Checha Davies) (பெரும்பாலும் திருமதி ஈ.வி. டேவிஸ் என்று குறிப்பிடப்படுகிறார்) (1898-1979) இவர் ஓர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூரிய சமூக சேவகரும் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலரும் ஆவார். இவரது சிறுவயது நாட்களில், இவர் ஒரு கல்வியாளராக இருந்தார். ஆனால் இவர் சிங்கப்பூர் சென்ற பிறகு தேவாலயப் பணிகள் மற்றும் சமூக சேவை அமைப்புகளில் தீவிரமாக இருந்தார். இரண்டு தனித்தனியான சந்தர்ப்பங்களில் இளம் பெண்கள் கிறிஸ்தவ சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். சிங்கப்பூர் மகளிர் அமைப்பிற்கான விதிகளை உருவாக்கி அதன் நிர்வாகக் குழுவில் பணியாற்றிய குழுவில் டேவிஸ் முக்கிய பங்கு வகித்தார். டேவிஸ் 1970 ஆம் ஆண்டில் பொது சேவை நட்சத்திரத்தைப் பெற்றார். அதன் தொடக்க ஆண்டில், 2014 இல் சிங்கப்பூரில் புகழ் பெற்ற மகளிர் என்ற கௌரவத்தைப் பெற்றார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சேச்சா ஜார்ஜ் 1898 ஆம் ஆண்டில் இந்தியாவின் கேரளாவில் மெதடிஸ்ட் லே போதகரான டி.டி.ஜார்ஜ் என்பவருக்குப் பிறந்தார். [1] பிரித்தானிய இந்திய ஆட்சியின் போது தனது கல்வியைப் பெற்ற இவர், சென்னையில் உள்ள பள்ளியில் பயின்றார். [2] பின்னர், பொருளாதாரம் மற்றும் ஆங்கில வரலாற்றைப் படித்து, இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். [1] [3] ஜார்ஜ் டென்னிஸ் விளையாடியதற்காக ஒரு பதக்கத்தையும் பெற்றார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து விளையாடி சிங்கப்பூர் சென்றார். விளையாடுமிடங்களில் புடவையை அணிந்து விளையாடினார். [4] இவர் 1916 ஆம் ஆண்டில் இளம் பெண்கள் கிறிஸ்தவ சங்கத்தில் சேர்ந்தார். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான அவர்களின் பணியை ஏற்றுக்கொண்டார். [5] மெதடிஸ்ட் தேவாலயத்திற்கு ஒரு சாதாரண போதகராகவும் பணியாற்றினார். [1] பின்னர் ,ஜார்ஜ் பள்ளி ஆசிரியரானார். மேலும் மெட்ராஸில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் பணிபுரிந்தார். 1925 ஏப்ரல் 3, அன்று சென்னையில், சிங்கப்பூரின் அட்ராம் சாலை பள்ளியைச் சேர்ந்த ஈ.வி. டேவிஸ் என்பவரை (எட்வர்ட் வேதநாயகம்) திருமணம் செய்து கொண்டார். அவருடன் சிங்கப்பூருக்குத் திரும்பினார். [1] [3] [6]

சமூக செயல்பாடு[தொகு]

இவர் சிங்கப்பூர் வந்தபோது, டேவிஸ் தமிழ் மெதடிஸ்ட் தேவாலயத்தில் சேர்ந்து ஒரு போதகர் மற்றும் விரிவுரையாளராக பணியாற்றினார். கிறிஸ்தவ சேவை மகளிர் சங்கத்தின் தலைவராக ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் [1] பல்வேறு இடங்களுக்கு இவர் பயணம் செய்தார். [7] ஆதரவற்ற இந்தியப் பெண்ணாகப் பயணம் செய்வது 1930 களில் கேள்விப்படாதது என்றாலும், அவர் இளம் பெண்கள் கிறிஸ்தவ சங்கதின் ஒரு தூதராகப் பயணம் செய்தார். [5] [4] 1931 ஆம் ஆண்டில், டேவிஸ் இந்தியன்-சிலோனீய சங்கத்தை நிறுவினார். பின்னர் இது லோட்டஸ் சஙகம் என்று அழைக்கப்பட்டது. இது சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்களுக்கான முதல் பெண்கள் அமைப்பாகும். [1] ஜவகர்லால் நேருவுடன் இரவு உணவிற்குப் பிறகு, தாமரை சங்க மகளில் ஒன்றியம் என்று அழைக்கப்படும் மற்றொரு அமைப்புடன் ஒன்றிணைக்க வேண்டும் என்று இவர் பரிந்துரைத்தார், இரண்டு சங்கங்களும் கமலா சங்கமாக மாறியது. இந்த சஙகம் ஒரு சமூக மற்றும் கலாச்சார அமைப்பாக பணியாற்றியது. மேலும் தொண்டு பணிகளின் அடையாளமாகவும் இருந்தது. [4] இவர் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவு செய்வதில் பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பெண்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச மகளிர் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார். [4] தனது முயற்சிகளில், "பேசுவதை விடச் செயலில் ஈடுபடுவது" என்பது விசுவாசத்தின் நிரூபணம் என்ற எண்ணத்தால் டேவிஸ் உந்தப்பட்டார். [8]

சிங்கப்பூரில் ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்குப் பிறகு, டேவிஸ் மற்றும் பிற பெண்கள் பல பெண்களின் வாழ்க்கையை பாதிக்கும் மோசமான நிலைமைகளை மேம்படுத்த பணியாற்றினர். மகளிர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு பெண்கள் அமைப்பிற்கு ஒரு அரசியலமைப்பை உருவாக்க 1951 இல் மகளிர் உரிமை ஆர்வலரான ஷிரின் ஃபோஸ்டரை சந்தித்தார். [1] சிங்கப்பூர் மகளிர் அமைப்பு 1952 இல் நிறுவப்பட்டபோது, [9] டேவிஸ், ஃபோஸ்டார் மற்றும் டான் செங் ஹியோங் லீ ஆகியோருடன் அதன் நிர்வாகக் குழுவில் பணியாற்றினார். [8] டேவிஸ் உறுப்பினர் குழுவின் தலைவராகவும் இருந்தார். 1955 ம் ஆண்டில் உறுப்பினர்களை 2000க்கும் மேற்பட்ட பெண்களாக அதிகரிக்கச் செய்தார். [8] சிங்கப்பூரில் பெண்களின் அரசியல் மற்றும் சமூக-பொருளாதார சமத்துவத்தை அதிகரிப்பதே இந்த அமைப்பின் நோக்கம் என்றாலும், டேவிஸ் தேவைப்படும் பெண்களுக்கான சமூக திட்டங்களில் பணியாற்ற விரும்பினார்; [8] இருப்பினும், இவர் சிங்கப்பூர் மகளிர் அமைப்பின் பலதார மணம் எதிர்ப்பு பிரச்சாரத்தின் தீவிர ஆதரவாளராகவும் இருந்தார். மேலும் ஆண்களின் ஆதரவிற்காக அழுத்தம் கொடுத்தார். 1961ஆம் ஆண்டில் மகளிர் சாசனம் சிங்கப்பூர் பாராளுமன்றத்தை நிறைவேற்றியபோது, பலதார மணம் மீதான தடை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன் டேவிஸ் மற்றும் சிங்கப்பூர் மகளிர் அமைப்பு அழுத்தம் கொடுத்த பல சட்டப் பாதுகாப்புகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. [4] சாசனம் நிறைவேற்றப்பட்ட பின்னர், டேவிஸ் தனது கவனத்தை இளம் பெண்கள் கிறிஸ்தவ சங்கம் உடனான சமூகத் திட்டங்களுக்குத் திருப்பினார். மேலும் சிங்கப்பூர் மகளிர் அமைப்பில் தனது பங்களிப்பைக் குறைத்தார். [8]

சிங்கப்பூரின் இளம் பெண்கள் கிறிஸ்தவ சங்க உடனான தனது பணியில், டேவிஸ் வயது வந்தோருக்கான பெண்கள் கல்வி மற்றும் குழந்தைகள் திட்டங்களுக்கு அழுத்தம் கொடுத்தார். இவர் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளுடன் கூடிய பெண்களுக்கான விடுதிகளுக்கு வக்கீலாக இருந்தார். [5] [4] 1960 முதல் 1964 வரை, மீண்டும் 1966 முதல் 1968 வரை, டேவிஸ் சிங்கப்பூர் இளம் பெண்கள் கிறிஸ்தவ சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். [1] 1967 ஆம் ஆண்டில், இவரது சேவைக்காக இளம் பெண்கள் கிறிஸ்தவ சங்கத்திலிருந்து தங்க கேடயம் வழங்கப்பட்டது. ஃபோர்ட் கேனிங் சாலையில் 6 மாடி பெண்கள் விடுதி கட்ட 1969 திட்டத்தில், டேவிஸ் பெண்கள் தங்கள் எடையை டாலர்களில் நன்கொடையாக வழங்க முன்வந்தார். தனது சொந்த நன்கொடை இலக்கை அடைய, டேவிஸ் தனது வீட்டையும் விற்றார் [5] [4] [10] கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது, இது இளம் பெண்கள் கிறிஸ்தவ சங்கத்தின் வாடகைக்கு மற்ற திட்டங்களுக்கு வருமானத்தை ஈட்ட அனுமதித்தது. இதற்காகவும், சமூகத்திற்கான பிற சேவைகளுக்காகவும், 1970 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் தேசிய தினத்தன்று, டேவிஸுக்கு பிந்தாங் பக்தி மஸ்யாரகத் (பொது சேவை நட்சத்திரம்) என்ற கௌரவம் வழங்கப்பட்டது. [5]

இறப்பு[தொகு]

டேவிஸ் 1979 செப்டம்பர் 2, அன்று டான் டோக் செங் மருத்துவமனையில் ஒரு குறுகிய நோயால் இறந்தார். [11] 2014 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் புகழ் பெற்ற மகளிர் குழுவில் இவர் மரணத்திற்குப் பின் சேர்க்கப்பட்டார். [10] [9]

குறிப்புகள்[தொகு]

நூலியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேச்சா_டேவிஸ்&oldid=2946551" இலிருந்து மீள்விக்கப்பட்டது