செய்யுள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்காப்பியர் எழுத்து வடிவம் பெற்ற அனைத்து நூல்களையும் செய்யுள் என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். செய்யுள் ஏழு நிலைகளில் அமையும் [1] அவை பாட்டு, உரை, நூல், பிசி, முதுமொழி, மந்திரம், பண்ணத்தி என்பன.

செய்யுள் என்னும் சொல் பயிர்செய்யும் விளை நிலத்தைக் குறிக்கும். இதில் பயிர் விளைந்து உணவுப்பொருளைத் தரும். மொழியில் வரும் செய்யுளில் வாழ்வியல் விளைந்து மக்களைப் பண்படுத்தும்.

காரிகை காலம் தொட்டே செய்யுளை, யாப்பு, உரைநடை எனப் பகுத்துக் காணும் நிலை தோன்றிவிட்டது.

செய்யுள் என்பது எடுத்துக்கொண்ட பொருள் விளங்கச் சுருக்கமாகச் செய்யப்படுவது. செய்யப்படுவதனால் இது செய்யுள் எனப்படுகின்றது. செய்யுள்கள் ஓர் இலக்கண வரம்புக்கு உட்பட்டே அமையவேண்டும். உரைநடைகளைப் போல் விரும்பியவாறு விரிவாகவும், வரையறை இல்லாமலும் எழுதக்கூடிய தன்மை செய்யுள்களுக்கு இல்லாவிட்டாலும், செய்யுள்கள் ஓசை நயம் விளங்கச் செய்யப்படுகின்றன. இதனால் செய்யுள்கள் மனப்பாடம் செய்வதற்கு இலகுவானவை. எழுத்துமூல நூல்கள் பரவலாகக் கிடைப்பதற்கு அரிதாக இருந்த பழங்காலத்தில் அரிய நூல்களில் சொல்லப்பட்டவற்றைத் தேவையானபோது நினைவுக்குக் கொண்டு வரவும், அவை பல தலைமுறைகள் நிலைத்து நிற்பதற்கும் மனப்பாடம் செய்வது இன்றியமையாததாக இருந்தது. இதனால் அக்காலத்து நூல்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே இயற்றப்பட்டன.

செய்யுள் என்னும் சொல் நன்செய் வயலைக் குறிக்கும். மருதம் சான்ற மலர்தலை விளைவயல் செய்யுள் நாரை ஒய்யும் மகளிர் - பதிற்றுப்பத்து 73. தொல்காப்பியர் செய்யுள் என்னும் சொல்லை நன்செய் வயல் போலப் பண்படுத்தப்பட்ட மொழியாக்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளார். இஃது ஆகுபெயர். உடல் உழைத்துச் செய்யப்படும் செய்யுள் வயல். மனம் உழைத்துச் செய்யப்படும் செய்யுள் தொல்காப்பியர் காட்டும் செய்யுள்.

செய்யுளியல்[தொகு]

தமிழ் இலக்கணத்திலே செய்யுள்களுக்கான இலக்கணங்களை விளக்கும் பகுதி செய்யுளியல் எனப்படுகின்றது. இன்று நமக்குக் கிடைப்பவற்றுள் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் செய்யுள் இலக்கணம் பற்றி அதன் பொருளதிகாரத்தில் விரிவாகப் பேசுகிறது. தொல்காப்பியம் பின்வரும் 26+8=34 செய்யுள் உறுப்புக்களைப் பற்றி விளக்குகிறது.

1. மாத்திரை, 2. எழுத்து, 3. அசை, 4. சீர், 5. அடி, 6. யாப்பு, 7. மரபு, 8. தூக்கு, 9. தொடை, 10. நோக்கு, 11. பா, 12. அளவியல், 13. திணை, 14. கைகோள், 15. கண்டோர், 16. கேட்போர், 17. இடம், 18. காலம், 19, பயன், 20. மெய்ப்பாடு, 21. எச்சம், 22. முன்னம், 23. பொருள், 24. துறை, 25. மாட்டு, 26. வண்ணம்,

27. அம்மை, 28. அழகு, 29. தொன்மை, 30. தோல், 31. விருந்து, 32. இயைபு, 33. புலன், 34. இழை.

நாற்பாவும், இனமும்[தொகு]

யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய நூல்கள் பிற்காலத்தில் தோன்றிய பாடல்களைத் தொகுத்துப் பார்த்து பாடல்கள் நான்கு எனவும், தாழிசை, துறை, விருத்தம் என்னும் நாற்பா இனங்களையும் குறிப்பிடுகின்றன.

பொருத்தம்[தொகு]

பாட்டியல் நூல்கள் பாட்டுடைத் தலைவனுக்கும் எழுத்துக் கற்பிக்கப்பட்ட இனங்களுக்கும் பொருத்தம் பார்க்கின்றன. அத்துடன் காப்பியம், பிரபந்தம் என்னும் சிற்றிலக்கியம் எனப் பாகுபடுத்திக் கொள்கின்றன.


செய்யுள் வகைகள்[தொகு]

செய்யுள், பா என்னும் சொல்லாலும் வழங்கப்படுகின்றது. பாக்கள் நான்கு வகைகளாக உள்ளன. அவை,

  1. வெண்பா
  2. ஆசிரியப்பா
  3. கலிப்பா
  4. வஞ்சிப்பா

என்பனவாகும். சிறப்பானதாகக் கருதப்படாத மருட்பா என்னும் பாவகையையும் சேர்த்து பாக்கள் ஐந்து வகை எனக் கொள்வாரும் உள்ளனர்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. தொல்காப்பியம் செய்யுளியல் 157.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்யுள்&oldid=3289003" இலிருந்து மீள்விக்கப்பட்டது