சின்ன நீர்க்காகம்
நீர்க்காகம் | |
---|---|
அக்கறை வேண்டாதவை LC (iucn.1)
| |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Microcarbo
|
இனம்: | M. niger
|
இருசொற் பெயரீடு | |
Microcarbo niger லூயி ழான் பியர் வியிலோ (Louis Jean Pierre Vieillot), 1817 |
சிறிய நீர்க்காகம் (Microcarbo niger, little cormorant), கரண்டம், அர்க்கம்[1] என்றழைக்கப்படும் பறவை தெற்காசியாவில் இனப்பெருக்கம் செய்கின்றது. தெற்கு பாகிஸ்தானில் தொடங்கி இந்தியா, இலங்கை வழியே கிழக்கு இந்தோனேசியா வரை இதன் இனப்பெருக்க வாழ்விடங்கள் அமைந்துள்ளன. நன்னீர் ஈரநிலங்கள், கடற்கரையோரங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்றிலிருந்து ஐந்து முட்டைகள் வரை இடும். 55 செ.மீ வரை வளரும் இவை நீர்க்காக வகைகளில் மிகச்சிறியவை. செவ்வக வடிவத்தலை, சிறிய அலகு ஆகிய குணநலன்கள் இப்பறவையை கொண்டை நீர்க்காகத்திலிருந்து (Indian Cormorant or Shag) வேறுபடுத்திக் காட்டுகின்றன.
இயல்பு குறிப்புகள்
[தொகு]- ஏறக்குறைய 20 அங்குலம் (53 செ.மீ) நீளமுடையது; ஆண், பெண் பறவைகள் ஒரே மாதிரி இருக்கும்.
- உடல் முழுவதும் கருப்பாக, ஒருவித பச்சை நிற மினுமினுப்புடன் காணப்படும். தொண்டைப்பை பகுதியைச் சுற்றி வெண்ணிறத் திட்டு இருக்கும். இனப்பெருக்க காலத்தில் இவ்வெண்ணிறத் திட்டு மறைந்து விடும். அதே சமயம், இங்கொன்றும் அங்கொன்றுமாக வெண்சிறகுகள் தலைப்பகுதியிலும் கழுத்தைச் சுற்றியும் குஞ்சங்களைப் போல வெள்ளை முடிகளும் காலத்தில் தோன்றும்.
- கருவிழித்திரை பச்சை கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். கண்ணிமைகள் கருப்பு நிறம்.
- அலகு பழுப்பு நிறம்; இனப்பெருக்க காலத்தில் வெளிர் ஊதா நிறத்திலிருக்கும். அலகு மெலிதாகவும் அழுந்தியது போலும் ஓரத்தில் கொக்கி உள்ளது போன்றும் இருக்கும். அலகின் கீழே தொண்டைப் பை இருக்கும்.
- வால் ஆப்பு வடிவத்திலிருக்கும். பாதங்கள் அழுந்தியும் மெல்லிய தோலால் இணைக்கப்பட்டு வலைப்பின்னல் போலத் தோற்றமளிக்கும்.[2]
கள குறிப்புகள்
[தொகு]- அடர்கரு நிறம், நேரான உடலிருக்கை நிலை, மரக்கொம்புகள், அடிமரங்களின் மேல் இறக்கைகளை விரித்தவாறு நிற்பது.
- நன்றாக நீந்தும், மூழ்கும்; நன்றாகப் பறக்கும்.
- மற்ற நீர்க்காக வகைகளை விடச் சிறியதாயிருக்கும்.
பரவல்
[தொகு]- தெற்கு பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, மியான்மார், மலேயத் தீபகற்பம், சுமத்ரா, போர்னியோ முழுவதிலும் காணப்படுகின்றது.
- இந்தியாவில் இமயமலைத் தொடர்கள், பிற மலைத்தொடர்கள், பலுசிஸ்தானம், பஞ்சாபின் வடமேற்கு எல்லை ஆகிய பகுதிகளில் காண முடியாது.
- நீர்க்காகங்கள் உள்ளுர் பறவைகள். இவை குடிபெயர்வதில்லை (வலசை போவதில்லை)
சிவப்புப் பட்டியல் நிலை
[தொகு]அதிக எண்ணிக்கையில் காணப்படும் சிறிய நீர்க்காகங்கள் சிவப்புப் பட்டியலில் அக்கறை வேண்டாதவை பிரிவில் வைக்கப்பட்டுள்ளன.
பழக்கங்கள்
[தொகு]- ஆறுகள், கடற்கரைப் பகுதிகளில் எப்போதேனும் தென்பட்டாலும் நன்னீர் ஏரிகள், குளங்கள் ஆகிய இடங்களிலேயே இவை பெரிதும் காணப்படும்.
- தனியாகவோ கூட்டமாகவோ காணப்படும். தகுந்த இடங்களில் (பறவை சரணாலயங்கள்) பெருங்கூட்டமாக இவை இருக்கும்.
- வெகு எளிதில் மூழ்கவும் நீந்தவும் செய்யும் நீர்க்காகங்கள், சிறிது ஆபத்து என்றாலும் தலையை மட்டும் வெளியில் நீட்டியபடி பெரிஸ்கோப்பைப் போல பார்த்த வண்ணம் நீந்தும்.
- தண்ணீரிலிருந்து வெளியேற இறகடித்தவாறு சற்று சிரமப்பட்டாலும் வெளியேறிய பிறகு தலை, கழுத்தை நேராக முன்னர் நீட்டியபடி பாதங்கள் பின்பக்கம் நீட்டியபடி வேகமாகப் பறக்கும்.
உணவு
[தொகு]- சிறிய நண்டுகள், தலைப்பிரட்டைகள், தவளைகள், மீன்கள் இவையே முக்கிய உணவு.
- இவை மூழ்கிய படியே உணவைப் பிடிக்கின்றன.
இனப்பெருக்க நடவடிக்கைகள்
[தொகு]வங்கதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள்:[3]
உடல் தோற்ற மாற்றங்கள்
[தொகு]அலகின் இருபுறமும் குஞ்சம் வைத்தாற்போல் கரும் முள்மயிர்களும் வெண்ணிற கண்ணிமை முடியும் காணப்பட்டன; கன்றிப்போன கண்ணிமைகளும் பதிவு செய்யப்பட்டன.
கூடுகள்
[தொகு]நீர்க்காகங்கள் தம் கூடுகளை குருட்டுக் கொக்குகள், சிறுவெண் கொக்குகளுடன் கட்டுகின்றன (அதாவது, அதே மரங்களில்); பிற பறவை ஆய்வாளர்களின் முடிவுகளில் கொக்குகள், பாம்புத்தாராக்கள், நாரைகள், வெளவால்கள் ஆகியவற்றுடன் கூடுகளைக் கட்டுவதாகத் தெரிகின்றது.
கூடுகள் கட்டத் தெரிவு செய்யப்படும் மரங்கள்
[தொகு]கொண்டைவாகை (Albizia procera), மா (Mangifera indica), அரச மரம் (Ficus spp.), குட்டிப்பலா (அ) பிராய் (Strebulus asper), தென்னை (Cocos nucifera) [4]
கூடு கட்ட உதவும் பொருள்கள்
[தொகு]மிளகாய் (Capsicum frutescens), Eucalyptus citriodora, கொத்தமல்லி (Coriandrum sativum), அருகம்புல் (Cynodon dactylon), Enhydra fluctuans, காட்டுத்துத்தி (Corchorus olitorius), இலந்தை (Zizyphus jujuba), மா (Mangifera indica), Polygonum spp. ஆகிய மரங்கள், செடிகளின் இலைகள், குச்சிகள் கூடு கட்டப் பயன்படுத்தப் பட்டன.
கூடு கட்டுதல்
[தொகு]ஆண், பெண் இரண்டுமே கூடு கட்ட உழைக்கின்றன. கூடு கட்டும் பொருள்களை மார்பாலும் கால்கள்/அலகாலும் முட்டுக் கொடுத்து கூடு கட்டுகின்றன. ஏறக்குறைய 8 முதல் 15 நாட்கள் எடுத்துக் கொள்கின்றன.
முட்டையிடுதல்
[தொகு]சராசரியாக நாள் ஒன்றிற்கு ஒரு முட்டை வீதம் இடப்படுகின்றது. இவ்வாய்வில் ஒரே நாளில் இரு முட்டைகள் இடப்பட்டது குறிப்பிடத்தக்கது. சராசரியாக ஒரு கூட்டில் 2 - 6 முட்டைகள் இருந்தன. முட்டைகள் நீள்வட்ட வடிவமுடையது. ஒரு முனை கூராகவும் மறுமுனை மழுங்கியும் காணப்பட்டன.
நீர்க்காகங்கள் பற்றிய சில விந்தையான தகவல்கள்
[தொகு]மீன்பிடி தொழிலில்
[தொகு]சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் நீர்க்காகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நீர்க்காகத்தின் கழுத்தில் சுருக்குக் கயிற்றைக் கட்டி விடுவர்; இதனால் பிடிக்கும் மீன்களை காகங்களால் விழுங்க இயலாது. பிறகு, அள்ளிய மீன்களுடன் படகிற்கு இழுக்கப்படும் நீர்க்காகங்களின் தொண்டையிலிருந்து மீன்களைக் கக்க வைத்து விடுவர். கூலியாக சில மீன்கள் அளிக்கப்படும். ஆனால் தற்போது முதன்மையாக மீன்பிடி தொழிலிற்கு இவ்வழக்கம் பயன்படுத்தப் படுவதில்லை; மாறாக, சுற்றுலா வரும் பயணிகளுக்கு களிப்பூட்டும் செயல்பாடாக இவ்வழக்கம் மாறி விட்டது. en:Cormorant fishing
பறக்குந்தன்மை இழந்த நீர்க்காகம்
[தொகு]பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்குழுமமான கலபகோசு தீவுகளில் காணப்படும் பெரிய நீர்க்காகங்கள் (Phalacrocorax harrisi) பரிணாம வளர்ச்சியில் பறக்குந்தன்மையை இழந்து விட்டன. இவற்றின் இறக்கைகள் குட்டையானவை. மற்றபடி, இவை நீரில் மூழ்கும், நீந்தும் திறமையை இழக்கவில்லை.
படத்தொகுப்பு
[தொகு]-
இறகுகளைக் கோதிவிடுதல்
-
இறகுகளைக் காயப் போடுதல்
-
நீர்ப்பரப்பின் மேல் பறத்தல்
-
குளித்தல்
-
சிறிய நீர்க்காக்கை
-
சிறிய நீர்க்காக்கை
-
வேட்டையின் போது
-
வேட்டைக்குப் பிறகு காய்தல்
-
பறக்கவியலாத நீர்க்காகம்
-
நீந்தும் போது
குறிப்புதவி
[தொகு]- ↑ சென்னைப் பல்கலையின் தமிழ்ப் பேரகரமுதலி [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Popular Handbook of Indian Birds By Hugh Whistler p. 491
- ↑ "Journal of Threatened Taxa" (PDF). Archived from the original (PDF) on 2012-11-01. பார்க்கப்பட்ட நாள் 2010-11-05.
- ↑ FRLHT Envis Centre on Medicinal Plants