உள்ளடக்கத்துக்குச் செல்

கோட்டக்கல் வெங்கட்ட தேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெங்கட்ட தேவர் கோயில் (Venkitta Thevar Temple) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், மலப்புறம் மாவட்டத்தின், கோட்டக்கல்லில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

ஒரு பழைய கோட்டையின் இடிபாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள வெங்கட்ட தேவர் கோயில் 19 ஆம் நூற்றாண்டு கோயில் கட்டிடக்கலைக்கு ஒரு மாதிரியாகும். இந்தக் கோயில் கருவறை முகமண்டபம் ஆகியவை சதுர வடிவத்தில் அமைந்துள்ளன. கோயிலின் முதன்மைத் தெய்வங்களாக சிவனும் பார்வதியும் இருக்க, பரிவார தெய்வங்களாக பிள்ளையார், ஐப்பன் போன்றோர் உள்ளனர். இந்தக் கோயில் சுவர் ஓவியங்கள் நிறைந்ததாக உள்ளது. இங்கு குறைந்தபட்சம் 64 சுவர் ஓவியங்களைக் காண இயலும். சிவனை விழபடு துறவிகள் ஓவியம், சிவனும் பார்வதியும் காட்டில் காட்சியளிக்கும் ஓவியம், பூவுமலா எனப்படும் பூக்கள் ஓவியம், பட்சிமலா எனப்படும் பறவைகள் ஓவியம், பசுபதி அஸ்திரத்தை வழிபடும் அர்சுணன் ஒவியம் என பலவகையான ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த சுவரோவியங்கள் மலையாள ஆண்டான 1053 ( கி.பி. 1878) இல் முடிக்கப்பட்டன என்பது எழுதப்பட்டுள்ளது.

கோயிலின் மேற்கு மற்றும் கிழக்கு நுழைவாயில்களில் பாரம்பரிய இரண்டு நிலை இராசகோபுரங்கள் உள்ளன. கோயில் வளாகத்தில் நாலம்பலம், நமஸ்கரமண்டபம், அக்ரசலா போன்றவை உள்ளன. இந்த கோயில் சாமுத்திரி அரச குடும்பத்தின் ஒரு கிளையான கிழக்கே கோயிலகம் அறக்கட்டளைக்கு சொந்தமானது.

வெளி இணைப்புகள்[தொகு]