கொழுமிய ஈரடுக்கு
கொழுமிய ஈரடுக்கு (lipid bilayer) என்பது இரு படல (அடுக்கு) கொழுமிய மூலக்கூறுகளாலான மெல்லிய சவ்வாகும். தட்டையான விரிப்புகளாக உள்ள இம்மென்படலங்கள் செல்களைச் சுற்றி தொடர் தடுப்புச் சுவர்களை உருவாக்குகின்றன. கிட்டத்தட்ட அனைத்து உயிரினங்களின், பல வைரசுகளின் உயிரணு மென்தோல்கள் கொழுமிய ஈரடுக்குகளால் உருவானது. இவ்வண்ணமே, உயிரணு உட்கருவை, பிற உள்-உயிரணு வடிவமைப்புகளைச் சுற்றிலுமுள்ள மென்படலங்களும் கொழுமிய ஈரடுக்குகளால் உருவானதேயாகும். இங்ஙனம் கொழுமிய ஈரடுக்குகளால் உருவான தடுப்புச் சுவர்கள் அயனிகள், புரதங்கள் மற்றும் பிற மூலக்கூறுகளைத் தேவையான இடத்தில் வைக்கும் அதே சமயத்தில் தேவையில்லாத இடங்களில் இம்மூலக்கூறுகள் விரவாமல் தடுக்கவும் செய்கின்றன. பெரும்பாலான, நீரில் கரையும் (நீர்-விரும்பும்) மூலக்கூறுகள் ஊடுருவமுடியாமலுள்ளத் தன்மையினால், சில நானோமீட்டர் அகலமே இருந்தாலும், கொழுமிய ஈரடுக்குகள் இப்பணிக்கு சிறந்த தகுதி வாய்ந்தவைகளாக உள்ளன.
கொழுமிய ஈரடுக்குகள் முக்கியமாக அயனிகளைக் கசியவிடாமல் தடுப்பதால், செல்கள் அயனிஏற்றி புரதங்களைக் கொண்டு மென்படல எதிர்ப்பக்கத்திற்கு அயனிகளை ஏற்றி உப்புச் செறிவுகளையும், அமிலக்காரத் தன்மையையும் ஒழுங்குப்படுத்துகின்றன.