கேசரைன் கணவாய் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கேசரைன் கணவாய் சண்டை
துனிசியப் போர்த்தொடரின் பகுதி
Kasserine Pass.jpg
கேசரைன் கணவாயில் அமெரிக்கப் படைகள் (பெப்ரவரி 26, 1943)
நாள் பெப்ரவரி 19–25, 1943
இடம் கேசரைன் கணவாய், துனிசியா
முடிவு அச்சு நாட்டு வெற்றி
பிரிவினர்
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம்
பிரான்சின் கொடி பிரான்ஸ்
ஜெர்மனியின் கொடி ஜெர்மனி
இத்தாலியின் கொடி இத்தாலி
தளபதிகள்
ஐக்கிய இராச்சியத்தின் கொடி கென்னத் ஆண்டர்சன்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி லாயிட் ஃபிரீடன்ஹால்
ஜெர்மனியின் கொடி எர்வின் ரோம்மல்
பலம்
30,000 22,000
இழப்புகள்
10,000 (6,500 அமெரிக்கர்கள்)
183 டாங்குகள்
706 பார ஊர்திகள்
2,000
34 டாங்குகள்

கேசரைன் கணவாய் சண்டை (Battle of the Kasserine Pass) என்பது இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. துனிசியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நாசி ஜெர்மனியின் படைகள் துனிசியாவில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தன.

1942 நவம்பரில் வடக்கு ஆப்பிரிக்காவில் டார்ச் நடவடிக்கையின் மூலம் அமெரிக்கப் படைகள் தரையிறங்கின. மேற்குப் பாலைவனப் போர்த்தொடரில் தோற்று துனிசியாவை நோக்கிப் பின்வாங்கிக்கொண்டிருந்த அச்சுப் படைகள் தூனிஸ் நகரை அடைவதற்குள் அந்நகரைக் கைப்பற்ற முயன்றன. ஆனால் அம்முயற்சி தோல்வியடைந்தது. அடுத்த சில மாதங்களுக்கு துனிசியப் போர்முனையில் மந்த நிலை நீடித்தது. இரு தரப்பும் அடுத்தகட்ட மோதலுக்கான ஆயத்தங்களைச் செய்தன. மேற்கு திசையில் மந்த நிலை நிலவிய போது கிழக்கு திசையிலிருந்து பிரித்தானியப் படைகள் தளபதி பெர்னார்ட் மோண்ட்கோமரியின் தலைமையில் துனிசியாவை நோக்கி முன்னேறி வந்தன. ஜனவரி 23, 1943ல் அவை லிபியாவின் தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றி, துனிசிய எல்லையில் அமைந்திருந்த மாரேத் அரண்கோடு வரை முன்னேறிவிட்டன. பெப்ரவரி 1943ல் மேற்குப் போர்க்களத்தின் மந்த நிலை முடிவுக்கு வந்தது. துனிசியாவுள் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகளை விரட்டுவதற்கு ஜெர்மானியத் தளபதி எர்வின் ரோம்மல் தலைமையிலான அச்சுப்படைகள் திட்டமிட்டன. ஃபெய்ட் கணவாய் மற்றும் சிடி பூ சிட் ஆகிய இடங்களில் அமெரிக்கப் படைகளை ரோம்மலின் படைகள் தாக்கி முறியடித்தன. இச்சண்டைகளில் அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது.

அடுத்த கட்டமாக துனிசியா-அல்ஜீரிய எல்லையில் அமைந்திருந்த அட்லசு மலைத்தொடரினைக் கடந்து அல்ஜீரியாவில் அமைந்திருந்த முக்கிய அமெரிக்கப் படைநிலைகளைத் தாக்கின. பெப்ரவரி 19ம் தேதி தொடங்கிய இத்தாக்குதலில் அட்லசு மலைத்தொடரில் அமைந்திருந்த கேசரைன் கணவாய் வழியாக ஜெர்மானிய கவசப் படைகள் வேகமாக முன்னேறின. பல ஆண்டுகள் போர் அனுபவமும், திறன் வாய்ந்த தளபதிகளும் பெற்றிருந்த ஜெர்மானியப் படைப்பிரிவுகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அமெரிக்கப் படைப்பிரிவுகள் நிலைகுலைந்து சிதறின. பெப்ரவரி 20ம் தேதி கேசரைன் கணவாய் முழுவதும் அச்சுக் கட்டுப்பாட்டில் வந்தது. கணவாயை விட்டு வெளியேறி அல்ஜீரியவுக்குள் புகுந்த அவை, தாலா நகரை நோக்கி முன்னேறின. தாலா ஒரு பெரும் தளவாட வழங்கல் தளம், அதைக் கைப்பற்றினால், தனது படைகளுக்குத் தேவையான எரிபொருளையும் தளவாடங்களையும் கைப்பற்றலாம் என ரோம்மல் திட்டமிட்டார். ஆனால் இதற்குள் தோற்றோடிய அமெரிக்கர்களுள் சில படைப்பிரிவுகளும், சில சிறிய பிரெஞ்சு மற்றும் பிரித்தானியப் படைப்பிரிவுகளும் எதிர்த்தாக்குதல் நடத்தி ஜெர்மானியப் படைமுன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தின. தாலாவைக் காப்பாற்ற புதிய படைப்பிரிவுகள் பிற இடங்களில் இருந்து அனுப்பப்பட்டன. எதிர்ப்பு வலுப்பதை உணர்ந்த ரோம்மல், தனது படைப்பிரிவுகளைப் பாதுகாக்க பெப்ரவரி 25ம் தேதி கேசரைன் கணவாய் வழியாக துனிசியாவுக்குப் பின்வாங்கி விட்டார். தமது படைகள் பலவீனப்பட்டால் கிழக்கிலிருந்து பிரித்தானியப் படைகள் மாரெத் அரண்கோட்டை தாக்கக் கூடும் என்று கருதியதும் இப்பின்வாங்கலுக்குக் காரணம்.

ரோம்மலின் படைகள் பின்வாங்கிவிட்டாலும், கேசரைன் கணவாய் சண்டை அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் தோல்வியாகக் கருதப்படுகிறது. அமெரிக்க-ஜெர்மானியப் படைகளிடையே இரண்டாம் உலகப் போரில் நிகழ்ந்த முதல் பெரும் மோதல் இதுதான். போர் அனுபவம் இல்லாத புதிய அமெரிக்கப் படைகளும் தளபதிகளும், பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஜெர்மானியப் படையினருடன் மோதினர். இதில் அமெரிக்கர்கள் படுதோல்வியடைந்ததால் அவர்களது மன உறுதி குலைந்து தங்கள் ஆயுதங்களையும் தளவாடங்களையும் களத்திலேயே போட்டுவிட்டு பின்வாங்கினர். இந்தப் படுதோல்வியால் இரு விளைவுகள் நேர்ந்தன - அமெரிக்கர்களது பின்வாங்கலைக் கண்ட ஜெர்மானியத் தளபதிகள் அமெரிக்கர்களது போர்த்திறனைக் குறைத்து மதிப்பிட்டனர். எண்ணிக்கை மட்டுமே அமெரிக்கர்களின் பலமென்றும், கடுமையான தாக்குதல்களை அவர்களால் சமாளிக்க முடியாதென்றும் முடிவு செய்தனர். இந்த தப்புக்கணக்கு அடுத்து நிகழ்ந்த சண்டைகளில் ஜெர்மானியர்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

அமெரிக்கத் தரப்பில் கேசரைன் கணவாயின் படுதோல்வியால் பெரும் மாற்றங்கள் உண்டாயின. இத்தோல்வி தந்த அனுபவப் பாடங்களைக் கொண்டு படை அலகு அமைப்புகள், கட்டுப்பாட்டு முறைமைகள், உத்திகள், படைப்பயிற்சி முறைகள் ஆகியவை உடனடியாக மாற்றியமைக்கப்பட்டன. தரைப்படைப்பிரிவுகள் வான்படை மற்றும் பீரங்கிப்படைகளுடன் ஒருங்கிணைந்து தாக்க புதிய முறைகள் உருவாக்கப்பட்டன. தோற்கடிக்கப்பட்ட அமெரிக்க 2வது கோரின் தளபதி லாயிட் ஃபீரிடன்ஹால் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அதிரடித் தாக்குதலுக்குப் பெயர் பெற்ற ஜார்ஜ் பேட்டன் துனிசியாவுக்கு அனுப்பப்பட்டார்.


மேற்கோள்கள்[தொகு]

[தொடர்பிழந்த இணைப்பு]

அமைவிடம்: 35°15′35″N 8°44′33″E / 35.259594, 8.742427

"http://ta.wikipedia.org/w/index.php?title=கேசரைன்_கணவாய்_சண்டை&oldid=1715546" இருந்து மீள்விக்கப்பட்டது