காழ்க்கலன் மூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்புறம்: கருவாலி மரத்தின் அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி மூலம் எடுக்கப்பட்ட படம்; கீழ்புறம்: ஊடுருவி எதிர்மின்னி நுண்ணோக்கி மூலம் எடுக்கப்பட்ட படம்

காழ்க்கலன் மூலகம் என்பது (ஆங்கிலம்: Vessel element) காழ் இழையத்தின் நான்கு வகை உயிரணுக்களில் ஒன்றாகும்.[1] காழ்க்கலன் மூலகம், காழ்க் குழற்போலிகள், காழ்நார்கள், காழ்ப் புடைக்கலவிழையம் முதலிய நால்வகை உயிரணுக்களும் ஒன்றிணைந்து, தொகுப்பாகச் செயற்படுகின்றன. இந்நான்கின் ஒருங்கிணைந்த தொகுப்பானது, தாவரத்திற்குத் தேவையான கனிம உப்புக்களையும், நீரையும் வேரிலிருந்து, தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் எடுத்து செல்லும் பணியைச் செய்கின்றது.

கட்டமைப்பு[தொகு]

காழ்க்கலன் மூலகங்களின் முனைகள் துளையுடன் (Perforate) காணப்படுகின்றன. இதனால் இவை துளைகளற்ற காழ்க் குழற்போலிகளிலிருந்து வேறுபடுகின்றன.[2] காழ்க்கலன் மூலகங்கள் காழ்க் குழற்போலிகளிலிருந்து விருத்தியடைந்திருக்கலாம் என நம்பப்ப்படுகின்றது.[3] இவற்றின் உயிரணு அறை, காழ்க் குழற்போலிகளின் உயிரணு அறையைக் காட்டிலும் அகன்றவை. துளைகளுடைய குறுக்கு சுவரினால் பிரிக்கப்பட்டிருக்கும் இவற்றின் உயிரணுக்கள், தாவரத்தின் நீள் அச்சுக்கு இணையாக, ஒன்றின் முனையின் மீது மற்றொன்றாக அமைந்துள்ளன. இவற்றின் முனையில் உள்ள குறுக்கு சுவர் முழுவதுமாக அழியுமாயின் ஒரு பெரிய ஓட்டை கொண்ட துளைத்தட்டு உருவாகிறது. இது ஒற்றைத்துளைத்தட்டு (Simple perforation plate) எனப்படும் . எ.கா. மாஞ்சிஃபெரா. துளைத்தட்டில் பல ஓட்டைகள் காணப்பட்டால், அது பல்துளைத்தட்டு (Multiple perforation plate) எனப்படும்.[4] எ.கா. லிரியோடென்ட்ரான். காழ்க்கலன் மூலகங்களின் இரண்டாம் உயிரணுசுவரும் காழ்க் குழற்போலிகளைப் போலவே வளையத்தடிப்பு, சுருள் தடிப்பு, ஏணித் தடிப்பு, வலைத்தடிப்பு அல்லது குழித்தடிப்புடன் காணப்படுகிறது.

பூக்கும்தாவரங்களில் நீரைக் கடத்தும் முக்கியக்கூறுகளாக, காழ்க்கலன் மூலகங்கள் உள்ளன. இவை வித்துமூடியிலிகளிலும், தெரிடொ-ஃபைட்டா (Pteridophyta) களிலும் காணப்படவில்லை. ஆனால் நீட்டம் (Gnetum) என்ற வித்துமூடியிலித் தாவரத்தில் இவை காணப்படுகின்றன. இவற்றின் முக்கியப் பணி நீரையும், கனிம உப்புக்களையும் கடத்துவதாகும். இது தாவரத்திற்கு வலிமையையும் அளிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://dbpedia.org/page/Vessel_element
  2. "American Journal of Botany". Archived from the original on 2015-04-05. பார்க்கப்பட்ட நாள் 2013-11-21.
  3. "Vessel". Encyclopædia Britannica, Inc. பார்க்கப்பட்ட நாள் சூன் 11, 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Plant anatomy Retrieved 2013-02-07.

மேலும், விவரங்கள்[தொகு]

  • Niklas, Karl J. (1997) The Evolutionary Biology of Plants. Chicago and London: The University of Chicago Press. ISBN 0-226-58082-2.
  • Schweingruber, F.H. (1990) Anatomie europäischer Hölzer - Anatomy of European woods. Eidgenössische Forschungsanstalt für Wald, Schnee und Landscaft, Birmensdorf (Hrsg,). Haupt, Bern und Stuttgart.
  • Timonen, Tuuli (2002). Introduction to Microscopic Wood Identification. Finnish Museum of Natural History, University of Helsinki.
  • Wilson, K. & D.J.B. White (1986). The Anatomy of Wood: its Diversity and variability. Stobart & Son Ltd, London
"https://ta.wikipedia.org/w/index.php?title=காழ்க்கலன்_மூலகம்&oldid=3549447" இலிருந்து மீள்விக்கப்பட்டது