ஓதரா புதுகுளங்கரா பகவதி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓதரா புதுகுளங்கரா பகவதி கோயில், இந்தியாவின் கேரளா, பத்தனம்திட்டா மாவட்டத்தில் திருவல்லாவில் ஓதரா கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான இந்துக் கோயிலாகும். இதன் மூலவர் துர்காதேவி ஆவார்.

இக்கோயில் மத்திய கேரளாவில் உள்ள முப்பது துர்க்கை கோவில்களில் ஒன்றாகும், இங்கு ஆண்டுதோறும் பண்டைய திராவிட சடங்கு கலை வடிவமான படையணி நிகழ்த்தப்பெறுகிறது. [1]பத்தனம்திட்டா, கோழஞ்சேரி, ஆரன்முலா, ரன்னி, திருவல்லா, செங்கனூர் போன்ற இடங்களில் உள்ள கோயில்களிலும் இச்சடங்கு காணப்படுகிறது.

கோலம் துள்ளல் என்பது படையணி திருவிழாவின் ஒரு முக்கியமான கூறாகும். இதில் தெய்வீக, தீய கதாபாத்திரங்கள் இயற்கையான சாயங்களைப் பயன்படுத்தி பாரம்பரிய வடிவமைப்புகளில் நிகழ்த்தப்படுகின்றன. பாரம்பரிய கலைஞர்கள் முகமூடிகளை உருவாக்குவர். பயிற்சி பெற்ற நடனக் கலைஞர்கள் அவற்றைத் தலையில் சுமந்து நடனமாடுவர். இந்நிகழ்வு பத்ரகாளி தேவியை சாந்தப்படுத்துவதற்காக நடத்தப்படுவதாகக் கூறுகின்றனர்.

யட்சி, பட்சி, மதன், மருதா, காலன் கோலம் (களரி), பைரவி உள்ளிட்ட பல வகையான கோலங்கள் இங்கு ஆடப்படுகின்றன. பெரிய அளவில் அமைந்துள்ள பத்ரகாளி தேவியின் உக்கிரமான வடிவத்தைக் குறிக்கின்ற பைரவி கோலம், ராட்சத கோலமான சட்டத்தேள் கோலம் ஆகியவைதிருவிழாவின் கடைசி நாளில் கொண்டாடப்படுகின்றன.

துணைத்தெய்வங்கள்[தொகு]

துர்க்கா தேவி இக்கோயிலின் மூலவராவார். மகாதேவன், தர்ம சாஸ்தா, கணபதி, யட்சியம்மா, பிரம்மராட்சஸ் ஆகியோர் துணைத்தெய்வங்களாக உள்ளனர்.

காணிக்கை[தொகு]

கோவிலில் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, கணபதி ஹோமம், மகாநெய்வேத்யம் சதுச்சாதம், பாயசம், போன்ற பிரசாதங்கள் உள்ளன. ஆண்டுதோறும் படையணி திருவிழாவின் போது கோலம் துள்ளலும் இங்கு உண்டு.

திருவிழாக்கள்[தொகு]

படையணி விழா, மலையாள மாதமான மீனத்தில் (மார்ச்-ஏப்ரல்) திருவாதிரை நட்சத்திர நாளுக்கு முன்னதாக 10 நாட்கள் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாவாகும்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]