எஸ். பி. எஸ். அருங்காட்சியகம், ஸ்ரீநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ்.பி.எஸ். அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பிரதாப் சிங் அருங்காட்சியகம் இந்தியாவின் காஷ்மீரின் ஸ்ரீநகரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும். 1898 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 80,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[1]

வரலாறு[தொகு]

1889 ஆம் ஆண்டில் அமர் சிங் மற்றும் எஸ்.எச். கோட்மேரி ஆகிய இருவரும் இந்திய நகரமான ஸ்ரீநகரில் ஒரு தொல்பொருள் அருங்காட்சியகத்தை நிறுவுவதற்கான முன்மொழிவை வகுத்தனர்.[2] சிங் காலனித்துவ இந்திய இராணுவத்தில் ஒரு அலுவலராக இருந்தார், கோட்மேரி ஒரு அறிஞராக இருந்தார்.[3] இந்த இருவரும் இணைந்து ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பிரதாப் சிங்கிடம்டம் ஒரு திட்டத்தை தயாரித்து அளித்தனர். பிரதாப்சிங் ஸ்ரீநகரின் ஆட்சியாளரும், அமரின் மூத்த சகோதரரும் ஆவார். மகாஜாரா இந்தத் திட்ட முன்மொழிவை ஏற்றுக்கொண்டதோடு, ஒரு அருங்காட்சியகத்தை நிறுவ அனுமதிக்க ஒப்புக்கொண்டார்; இந்தப் புதிய நிறுவனம் ஜம்மு- காஷ்மீர், பால்டிஸ்தான் மற்றும் கில்கிட் ஆகிய பகுதிகளைக் சேர்ந்த கலைப்பொருட்களைக் கொண்டதாக அமையும். இந்த அருங்காட்சியகத்தை ஜீலம் ஆற்றின் அருகே அரசுக்கு சொந்தமான ஒரு கட்டிடத்திற்குள் அமைக்க முடிவு செய்யப்பட்டது

இந்த அருங்காட்சியகத்தை அமைத்தபோது அதன் அமைப்புப் பணியை பிரித்தானிய தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஜான் மார்ஷல் (மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் எதிர்கால இயக்குநர்) மேற்கொண்டார். அவர் இந்தியாவின் தொல்பொருள் வரலாற்றைப் பாதுகாப்பதில் பணியாற்றியதற்காக புகழ்பெற்றவர் ஆவார்.[3] ஸ்ரீநகரின் பொதுக் கணக்காளரான திரு. பிளெர்ஜி என்பவர் அருங்காட்சியகத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். அருங்காட்சியகம் அதன் சேகரிப்பில் சேர்க்கப்பட்ட ஒரு பெரிய நாணயங்களின் தொகுப்பைப் பதிவுசெய்யும் பெரிய பணியினை பிளெர்ஜி மேற்கொண்டார். இந்த அருங்காட்சியகம் 1898 ஆம் ஆண்டில் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது, அதன் முதல் தொகுப்பாக மஜாரா பிரதாப்பின் அரண்மனை கருவூலத்திலிருந்து பெறப்பட்ட பொருட்கள் அமைந்தன.

சீரமைப்பு[தொகு]

1913 ஆம் ஆண்டில் இந்திய தொல்பொருள் ஆய்வாளர் தயா ராம் சாஹ்னி பாண்டெரெந்தன், பரிஹாஸ்போரா மற்றும் அவந்திபுராவில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளின்போது கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு இந்த அருங்காட்சியகத்தை மறுசீரமைத்தார்.[3] தனியார் சேகரிப்பாளர்களால் தத்தம் பொருட்களை நன்கொடையாகத் தந்ததன் மூலமாக அருங்காட்சியகத்தின் சேகரிப்பு தொடர்ந்து வளர்ந்து வந்தது; இவற்றில் பல பொருட்கள் உள்நாட்டுப்பொருள்களாகும்.[4]

ஆரம்ப காலத்தில் டோஷ்கானாவிலிருந்து பெறப்பட்ட சால்வைகள் மற்றும் போர்க்கருவிகள் காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. தயா ராம் சாஹ்னி அவர்களால் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் துறையின் சீரமைப்பிற்குப் பின்னர் பாண்டெரெந்தன், பரிஹாஸ்போரா மற்றும் அவந்திபுரா போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாரய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் அருங்காட்சியகச் சேகரிப்பில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. தொடர்ந்து, அலங்காரப்பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்கள் தனியார் சேகரிப்பிலிருந்து பெறப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. அதனதன் கால அடிப்படையில் கலைப்பொருள்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இவ்வருங்காட்சியகத்தில் நாணயவியல், ஓலைச்சுவடி, நுண் ஓவியங்கள், கருவிகள், பாத்திரங்கள், இசைக்கருவிகள், துணிவகைகள், தோல் பொருள்கள், சிற்பங்கள், பதப்படுத்தப்பட்ட பறவைகள் மற்றும் பிராணிகளின் உடல்கள் உள்ளிட்டவை காணப்படுகின்றன.[5]

தற்போதைய நிலை[தொகு]

2017ஆம் ஆண்டில், இந்த அருங்காட்சியகத்திற்கான இரண்டாவது கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.[4] இந்த புதிய கட்டிடம் தீ மற்றும் பூகம்பத்தை எதிர்கொள்ளும் வகையில் கட்டப்பட்டது, மேலும் இந்த அருங்காடசியகத்தில் பிரதாப் சிங் பயன்படுத்திய பிரபலமான பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் பழமையான கட்டிடம் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Shri Pratap Singh, Kashmir's lone museum, opens new building for public in Srinagar - Firstpost". www.firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 2018-11-16.
  2. "SPS Museum Srinagar". museu.ms (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-16.
  3. 3.0 3.1 3.2 "Department of Tourism, Jammu and Kashmir - SPS Museum". jktourism.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-16.
  4. 4.0 4.1 Valley’s lone museum opens to public. The Tribune. 12 Jun 2017. URL. https://www.tribuneindia.com/news/jammu-kashmir/valley-s-lone-museum-opens-to-public/420829.html Retrieved 2018-11-16.
  5. SPS MUSEUM