இலங்கை தடித்த அலகு மீன்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரண்தம்போர் தேசியப் பூங்காவில் இலங்கை தடித்த அலகு மீன்கொத்தி

இலங்கை தடித்த அலகு மீன்கொத்தி (அறிவியல் பெயர்: Pelargopsis capensis capensis) என்பது தடித்த அலகு மீன்கொத்தியி்ன் துணையினம் ஆகும்.[1] இப்பறவை நேபாளம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

இலங்கை தடித்த அலகு மீன்கொத்தியானது புறாவை விட சற்றுச் சிறியதாக சுமார் 40 செ. மீ. நீளம் கொண்டதாக இருக்கும். இதன் அலகு நாரையின் அலகுபோல பருத்து நீண்டு இரத்தச் சிவப்பாகச் சுமார் 10 செ.மீ. நீளம் இருக்கும். இதன் இந்த தடித்த அலகைக் கொண்டு பிற மீன் கொத்திகளில் இருந்து இதை எளிதில் பிரித்தறியலாம். விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் பவளச் சிவப்பாகவும் இருக்கும். இப்பறவையின் தலை பழுப்பு நிறமாக இருக்கும். உடலின் மேற்பகுதி பசுமை தோய்ந்த நீல நிறத்தில் இருக்கும். உடலின் அடிப்பகுதி மஞ்சள் தோய்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். வாலின் மேற்பகுதி நீல நிறத்திலும், அடிப்பகுதி கறுப்பாகவும் இருக்கும்.[2]

பரவலும் வாழிடமும்[தொகு]

இப்பறவை நேபாளம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பொதுவாக நீர்வளம் மிக்க பகுதிகளில் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் கேரளத்தில் மிகுதியாகவும், தமிழ்நாட்டில் கன்னியாகுமரியிலும், சாத்தனூர் அணைப்பகுதியிலும் காணப்பட்ட குறிப்பு உண்டு.[2]

நடத்தை[தொகு]

இலங்கை தடித்த அலகு மீன்கொத்தி பொதுவாக ஆற்றங்கரைகளைச் சார்ந்தகாடுகளில் நிழலில் மேலும் கீழுமாக அலைந்து திரியும். உப்பங்கழிகளை அடுத்து உள்ள தோப்புகளிலும் மரங்கள் மீதும் காணப்படுகிறது. நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள மரத்தின் கிளையில் அமர்ந்திருந்து தக்க நேரத்தில் நீரில் பாய்ந்து இரையைப் பிடிக்கும்.

இப்பறவை மீன், நண்டு, ஊர்வன, தவளை போன்றவற்றை பிடித்துத் தின்னும். மைனாவின் பொந்தருகே காத்திருந்து மைனாவைப் பிடித்து சென்றதாக குறிப்பு உள்ளது.

இவை சனவரி முதல் சூலை வரை இனப்பெருக்கம் செய்கின்றன. ஆற்றங்கரையில் நீளமாக குடைந்து வாங்கு செய்து உள்ளே முட்டை இடும். இவை நான்கு முதல் ஐந்து வரையிலான வெண்மையான முட்டைகளை இடும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gill, Frank; Donsker, David, eds. (2017). "Rollers, ground rollers & kingfishers". World Bird List Version 7.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 28 May 2017.
  2. 2.0 2.1 2.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 297-298.