இராம. பெரியகருப்பன்
தமிழண்ணல் | |
---|---|
பிறப்பு | இராம. பெரியகருப்பன் 12 ஆகத்து 1928 நெற்குப்பை, பிரிக்கப்படாத மதுரை மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 29 திசம்பர் 2015 மதுரை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 87)
தேசியம் | தமிழர் |
மற்ற பெயர்கள் | தமிழண்ணல் |
குடியுரிமை | இந்தியர் |
பணி | பேராசிரியர் |
அறியப்படுவது | தமிழறிஞர் |
வலைத்தளம் | |
https://thamizhannal.org/ |
தமிழண்ணல் என்கிற இராம. பெரியகருப்பன் (Rama Periyakaruppan, 12 ஆகத்து 1928 - 29 திசம்பர் 2015) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கியவர். தமிழ்நாட்டு அரசாங்கம் உருவாக்கிய தமிழிலக்கிய சங்கப்பலகை குறள்பீடம் என்ற அமைப்பின் துணைத்தலைவராகப் பதவிவகித்தார்.[1]
பிறப்பு
[தொகு]இன்றைய சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்ற சிற்றூரில் 12 ஆகத்து 1928 அன்று கல்யாணி - இராமசாமி இணையருக்கு மகனாகப் பிறந்தார் தமிழண்ணல். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் பெரியகருப்பன்.
கல்வி
[தொகு]பள்ளத்தூர், ஏ.ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியிலும், மேலைச்சிவபுரி, கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1948 இல் திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்று தமிழ் வித்துவான் பட்டம் பெற்றார். வசதி இல்லாததால் கல்லூரியில் சேராமல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (பொருளியல்) (1948), முதுகலைத் தமிழ்(1961) ஆகிய பட்டங்களை தனிப்படிப்பின் வழியாகத் தேர்ச்சிப்பெற்றார்.மதுரை தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கிய மரபுகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து 1969-இல் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் சி.இலக்குவனாரும், முனைவர் அ.சிதம்பரநாதனாரும் இவர்தம் ஆய்வு நெறியாளர்கள் ஆவர்[2]
குடும்பம்
[தொகு]தமிழண்ணல் அவர்களுக்கு 1954, ஆகத்து 30 இல் திருமணம் நடைபெற்றது. மனைவியின் பெயர் சிந்தாமணி. இவர்களுக்குச் சோலையப்பன், கண்ணன், மணிவண்ணன் என்ற ஆண்மக்களும், கண்ணம்மை, அன்புச்செல்வி, முத்துமீனாள் என்ற பெண்மக்களும் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்.
பணிகள்
[தொகு]13 ஆண்டுகள் காரைக்குடியில் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவரது முயற்சியையும், கடின உழைப்பையும், சங்க இலக்கியத்தில் இருந்த ஈடுபாட்டையும் பாராட்டி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த மு. வரதராசனார், பல்கலைக்கழகத்தில் பணியளித்ததோடு இரண்டே ஆண்டுகளில் இணைப்பேராசிரியராகப் பதவி உயர்வும் அளித்தார். 1981-82 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் தேசியப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
இரண்டாண்டுகள் பல்கலைக்கழக மானியக் குழுவின் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ்க்குடிமகன், கா. காளிமுத்து உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோருக்கு ஆய்வு வழிகாட்டியாகவும் சாகித்ய அகாதெமியில் 10 ஆண்டுகள் உறுப்பினராகவும் இருந்தார்.
சிறப்பு
[தொகு]1971 இல் குடியரசு நாளில் புதுதில்லி அனைத்து இந்திய வானொலி நிலையத்தில் நடைபெற்ற கவியரங்கில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டு இவர் செல்வம் என்ற தலைப்பில் பாடிய கவிதை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப் பெற்ற சிறப்பிற்கு உரியது. மதுரை மீனாட்சியம்மை பற்றி இவர் பாடிய பாடல்கள் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் என்ற இவர் நூலும் பரிசுபெற்ற ஒன்றாகும். தமிழக அரசால் சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்ததெடுக்கப்பட்டார். 1985 முதல் ஞானபீட விருதுக்குரிய கருத்துரைஞர் குழுவில் பணியாற்றி வருகிறார். தமிழ்நாட்டு அரசாங்கம் 2000ஆம் ஆண்டில் அமைத்த தமிழிலக்கிய சங்கப்பலகையின் குறள்பீடம் என்ற அமைப்பின் துணைத்தலைவராகப் பொறுப்புவகித்தார்.[3] 2001ஆம் ஆண்டு மே மாதம் அப்பதவியைத் துறந்தார்.[4]
பல்கலைக்கழக நல்கைக்குழு தமிழண்ணல் அவர்களை 1981-82 ஆம் கல்வியாண்டில் தேசியப் பேராசிரியராகத் தேர்வு செய்து சிறப்புச்செய்தது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்கும் சென்று தமிழ் மொழியின் தொன்மை, சிறப்பு, இலக்கியக் கொள்கைகளைப் பற்றி சொற்பொழிவாற்றிப் பிற மொழியினருக்குத் தமிழின் சிறப்பை எடுத்துரைத்தவர்.
இலங்கை, சப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று கருத்தரங்குகளில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர்.
இவர் மேற்பார்வையில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். மேனாள் தமிழக சட்டமன்ற சபாநாயகர்கள் முனைவர் தமிழ்க்குடிமகன், முனைவர் கா. காளிமுத்து உள்ளிட்டவர்கள் இவரின் நெறிப்படுத்தலில் முனைவர் பட்டம்பெற்றவர்கள். தினமணி உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் புகழ்பெற்றவைகளாகும்.
தமிழக அரசால் சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்ததெடுக்கப்பட்டார். 1985 முதல் ஞானபீட விருதுக்குரிய கருத்துரைஞர் குழுவில் பணியாற்றியவர். தமிழக அரசின் சங்க இலக்கியக்குறள் பீடத்தின் துணைத் தலைவராகவும் பணிபுரிந்தவர்.
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இவருக்கு 1989 ஆம் ஆண்டில் தமிழக அரசின் திரு.வி.க.விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெங்கடேசுவரா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். சிங்கப்பூர் அரசின் அழைப்பில் தமிழ்க்கல்விக்கு உரிய பாடநூல் எழுதும் பணியிலும் ஈடுபட்டவர்.
தமிழகப்புலவர் குழுவின் உறுப்பினராக இருந்து திறம்படப் பணிபுரிந்து வருகிறார். தமிழ்ச்சான்றோர் பேரவை தமிழ்வழிக் கல்வியை முன்னிலைப்படுத்தித் தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநோன்பு போராட்டம் நிகழ்த்திய பொழுது அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் போராட்டத் தலைமையிலிருந்து விலகிக்கொண்டபொழுது தாமே முன்வந்து தமிழ்வழிக் கல்விக்காகச் சாகும்வரை உண்ணா நோன்பில் தலைமைதாங்கி நடத்திய வரலாற்றுப் பெருமைக்கு உரியவர் நம் தமிழண்ணல் அவர்கள்.
அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் தொல்காப்பியப் பதிப்பை அறிஞர் இராமலிங்கனார், பகீரதன் ஏற்பாட்டில் பதிப்பித்துப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் அறிஞர்கள் முன்னிலையில் வெளியிட்டபொழுது தமிழுக்கு இந்நூல் கேடானது எனத் துணிந்து குரல்கொடுத்து கண்டித்தவர் தமிழண்ணல் அவர்கள்.
விருதுகள்
[தொகு]- நல்லாசிரியர் விருது
- 1989-இல் திரு. வி. க. விருது
- 1995-இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் செம்மல் விருது [5]
- மத்திய அரசின் செம்மொழி விருது
- தமிழக அரசின் கலைமாமணி விருது
- எஸ்ஆர்எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது,
- கவிதை நூலுக்காக மதுரை மீனாட்சி விருது
தமிழண்ணல் நூல்கள்
[தொகு]தமிழ் இலக்கணம்குறித்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், நூல்கள், சங்க இலக்கியம், ஒப்பிலக்கியம், நாட்டுப்புறப் பாடல்கள், ஆய்வில் துறைகள் விரிவாக அமைய பல அடிப்படை நூல்கள் எழுதியுள்ளார்.
தினமணி இதழில் வளர்தமிழ்ப் பகுதியில் உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் எழுதியவற்றை வளர்தமிழ் : உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு (நூல்) என்ற நூலில் புதிய நோக்கில் தமிழ் மொழியின் இலக்கிய வரலாற்றைப் பல கோணங்களில் விவாதிக்கிறார்.
சிங்கப்பூர் அரசு பள்ளிகளுக்காக தமிழ் பாட நூல்களையும் எழுதி உள்ளார்.[6]
தமிழண்ணல் தமிழ் இலக்கியம், இலக்கணம், திறனாய்வு, நாட்டுப்புறவியல், உரை, படைப்பு எனப் பல திறத்தில் அமையும் நூற்றுக்கும் மேலான நூல்களை வழங்கியுள்ளார்.[7] அவற்றுள் சில :
- அகநானூற்றுக் காட்சிகள்
- இனிக்கும் இலக்கியம்
- வாழ்வரசி புதினம்
- நச்சுவளையம் புதினம்
- தாலாட்டு
- காதல் வாழ்வு
- பிறைதொழும் பெண்கள்
- சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கியக் கொள்கைகள் (2003)
- சங்க இலக்கிய ஒப்பீடு- இலக்கிய வகைகள் (2005)
- தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள் (2004)
- புதியநோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு
- தமிழியல் ஆய்வு (இ.முத்தையாவுடன்)
- ஆய்வியல் அறிமுகம் (இலக்குமணனுடன்)
- ஒப்பிலக்கிய அறிமுகம்
- குறிஞ்சிப்பாட்டு இலக்கியத் திறனாய்வு விளக்கம்
- தொல்காப்பியம் உரை
- நன்னூல் உரை
- அகப்பொருள் விளக்கம் உரை
- புறப்பொருள் வெண்பாமாலை உரை
- யாப்பருங்கலக் காரிகை உரை
- தண்டியலங்காரம் உரை
- சொல் புதிது சுவை புதிது
- தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்
- தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?
- பேசுவது போல் எழுதலாமா? பேச்சுத் தமிழை இகழலாமா?
- பிழை திருத்தும் மனப்பழக்கம்
- உரை விளக்கு
- தமிழ் உயிருள்ள மொழி
- தமிழ் கற்பிக்கும் நெறிமுறைகள்
- தமிழ்த்தவம்
- திருக்குறள் நுண்பொருளுரை
- இனிய தமிழ்மொழியின் இயல்புகள் முதலியன
- இனிய தமிழ்மொழியின் இருவகை வழக்குகள்
- உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்
- உலகத் தமிழிலக்கிய வரலாறு
- ஊடகங்களால் ஊரைப் பற்றும் நெருப்பு
- எழுச்சி தரும் எண்ணச்சிறகுகள்
மறைவு
[தொகு]தமிழண்ணல் மதுரை சதாசிவ நகரில் உள்ள அவரது இல்லத்தில் 2015 டிசம்பர் 29 செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.[8]
குறிப்புகளும் மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://tamil.oneindia.com/news/2001/05/22/peedam.html?story=2
- ↑ http://tamil.oneindia.com/news/tamilnadu/veteran-tamil-scholar-thamizhannal-passes-away-243394.html
- ↑ சு. சமுத்திரம், என் பார்வையில் கலைஞர், பக்.175 - 177
- ↑ குறள்பீடம் பதவிகளிலிருந்து தமிழண்ணல், சமுத்திரம் ராஜினாமா 2001 மே 22
- ↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்122
- ↑ "மத்திய அரசின் செம்மொழி விருது பெற்ற தமிழறிஞர் தமிழண்ணல் மரணம்". Archived from the original on 2016-01-01. பார்க்கப்பட்ட நாள் 2015-12-30.
- ↑ "தமிழண்ணல் நூல்கள்". தமிழண்ணல். பார்க்கப்பட்ட நாள் 27 January 2022.
- ↑ "தமிழறிஞர் தமிழண்ணல் காலமானார்". தினமணி. 30 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)
வெளியிணைப்புகள்
[தொகு]- https://www.google.co.in/search?tbo=p&tbm=bks&q=inauthor:%22%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%22&gws_rd=ssl
- Tamil literary scholar honoured, தி இந்து, நாள்: ஆகஸ்டு 6, 2008
- Tamil scholars honoured தி இந்து, நாள்: மார்ச் 30, 2011
- ஐராவதம் மகாதேவன், தமிழண்ணல் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தொல்காப்பியர் விருது