உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதி திராவிடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதி திராவிடர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
1,29,86,465[1][2](2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி)
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து, சீக்கியம், கிறிஸ்தவம், பௌத்தம், இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தேவேந்திர குல வேளாளர், பறையர் & அருந்ததியர்

ஆதி திராவிடர் (Adi Dravida) அல்லது ஆதி திராவிடர்கள் என்பது 1914 முதல் பள்ளர், பறையர் இன மக்களைக் குறிப்பதற்கு இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தினரால் பயன்படுத்தப்பட்டது. [3] 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தமிழ்நாடு மாநில மக்கள் தொகையில் சுமார் 1,29,86,465 (18%) மக்கள் பட்டியல் இனத்தவர் இருந்தனர் என்று புள்ளிவிபரம் கூறுகிறது.[4]

தோற்றம்

பறையர் சமூகத்தின் தலைவராக இருந்த அயோத்தி தாசர் தீண்டத்தகாதவர்களை "பறையர்" என்று அழைப்பது இழி வழக்கு என்று வாதாடினார். அவர் தமிழ் வரலாற்றை மாற்றியமைக்க முயன்றார், பறையர்கள் நிலத்தின் அசல் குடியிருப்பாளர்கள் என்று வாதிட்டார். ஆனால் அவர்கள் உயர் சாதியினரால் அடிபணிய வைக்கப்பட்டனர். இருப்பினும், மற்றொரு பறையர் தலைவரான இரட்டமலை சீனிவாசன், "பறையர்" என்ற வார்த்தையை பயன்படுத்துவதை பெருமையுடன் ஆதரித்து, 1892 இல் பறையர் மகாசன சபையை ("பறையர் மகாசனா சட்டமன்றம்") உருவாக்கினார். [5] அயோத்தி தாசர், மறுபுறம் "ஆதி-திராவிட" சமூகத்தை விவரிக்க "அசல் திராவிடர்கள்" என்ற அமைப்பை உருவாக்கினார். 1892 ஆம் ஆண்டில், அவர் ஒரு அமைப்பை விவரிக்க "ஆதி திராவிட சனசபை" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார், இது சீனிவாசனின் பறையர் மகாசன சபையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும், 1895 ஆம் ஆண்டில், அவர் "உர்திராவிடர்களின் மக்கள் பேரவை" யை (ஆதிதிராவிட சன சபா) நிறுவினார். இது சீனிவாசனின் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த ஒரு அமைப்பாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மைக்கேல் பெர்குண்டரின் கூற்றுப்படி, "ஆதி திராவிடர்" என்ற கருத்தை அரசியல் விவாதத்தில் அறிமுகப்படுத்திய முதல் நபர் அயோத்தி தாசர் என்பது புலனாகிறது.[3]

1886 களில் ஆதி திராவிடர்கள் "இந்துக்கள்" அல்ல என்று அறிக்கை விட்டார். அப்பிரகடனத்தைத் தொடர்ந்து 1891 இல் திராவிட மாகாசன சபையை நிறுவினார். 1891 இல் நடத்தப்பட்ட மக்கட்தொகைக் கணக்கெடுப்பில் ஆதி திராவிடர்கள் தங்களை இந்துக்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளாமல், "சாதியற்ற தமிழர்கள்" எனப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார் இவரது நடவடிக்கைகள் இலங்கையின் பௌத்தப் புத்துயிர்ப்பிப்பாளர் அனகாரிக தர்மபாலருக்குப் பெரிதும் ஊக்கமளித்தன.

அப்போதிருந்த ஒரே கட்சி இந்திய தேசிய காங்கிரசு கட்சி. அதை இரண்டு பிரிவாக பிரித்து ஒன்று வடநாட்டு காங்கிரசு, அது வங்காளின் காங்கிரசு மற்றொன்று தென்னாட்டு காங்கிரசு அது பிராமண காங்கிரசு என விமர்சித்து காங்கிரசு கட்சியை ஒதுக்கிவிட்டார். ஆக மதமாற்றம், அத்வைதம், தமிழ் சைவம், தியாசபிகல் தொடர்பு, காங்கிரசு கட்சி, அனைத்திலுமிருந்து வேறுபட்டும் பிற்போக்குத்தனத்திற்கு எதிராகவும் சுய கருத்தியலை, சுய அரசியலைத் துவக்கினார்.

ஆதி திராவிட மக்களை ஒடுக்குவதற்கு எழுப்பிய பண்பாட்டு, மதத்தடைகளை நீக்குவதுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் மெய்யான விடுதலையைக் கொண்டுவரும் என்றும் பௌத்தம் என்ற சாதி, வருண எதிர்ப்பு சமயமான பௌத்தமே அதற்கு ஏற்றது என்றும் கருதினார். பௌத்தமே ஆதி திராவிடர்களின் மூல சமயமாகவும் அவர்களின் தாழ்வு நிலைக்கு காரணமாகவும் அமைந்தது (அதாவது பெளத்ததை பின்பற்றியதால் ஆதி திராவிடர்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள்). அதே பௌத்த சமயம்தான் ஆதி திராவிடர் விடுதலைக்கும், அதிகாரம் பெறுவதற்கும் உறுதுணையாகவும் வழியாகவும் இருக்கும் எனக் கருதினார்.

இந்தியப் பாரம்பரியம் பௌத்த மதமாக இருந்தது என்பதைத் தன் தமிழ்ப் புலமை மூலம் விளக்கினார்:

இந்திய என்ற சொல் 'இந்திரம்' என்பதன் திரிபு. இந்திரனாகிய புத்தனும் அவனைக் குருவாக கருதும் மக்களும் வாழும் நாட்டிற்கு 'இந்திரதேசம்' என்ற பெயர் வந்தது. ஆரியர் வருகைக்கு முன் இங்கே ஒரு தேசம் இருந்தது, அந்த தேசியத்தைப் பௌத்தம் உருவாக்கியது. அதில் பகுத்தறிவு, மனித நேயம், சமத்துவம், அறக்கருத்தொற்றுமை, மெய்யியல் மற்றும் நடைமுறை சார்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது. இதில் அன்னியரான வெளியாரின் ஊடுருவலால், படையெடுப்பால் காலப்போக்கில் அது மந்திர அல்லது மாயத்தன்மையென திரிக்கப்பட்டது என்று பண்டிதர் விளக்குகிறார். சொந்த நாட்டின் சாதியற்ற பண்பாட்டை அயல் சக்திகள், வெளியாட்கள் நசித்து திரித்துவிட்டார்கள். பிறப்பால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை அழித்து சமத்துவத்தை நோக்கி நகரும் ஓர் அரசியல் கருத்தியலை உருவாக்கும் ஒரு தேசியத்தைக் கட்டமைக்க முயற்சித்தார்.

1912 அக்டோபர் 30 தமிழன் இதழில், இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தால் இம்மண்ணிண் மைந்தர்களாம் ஆதி தமிழர்களிடம் அரசியல் அதிகாரத்தை வழங்கவேண்டுமென ஆங்கிலேயர்களிடம் (சுதந்திரத்திற்கு 35 வருடங்களுக்கு முன்) கோரிக்கை வைத்தார். "கருணை தாங்கிய பிரித்தானிய துரையவர்கள், சுதேசிகள் மீது கிருபை பாவித்து சுயராட்சியத்தை அளிப்பதாயினும் இத்தேச பூர்வக்குடிகளுக்கு அளிப்பதே கருணையாகும். நேற்றுக் குடியேறி வந்தவர்களையும், முன்னாடி குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் எனக் கருதி அவர்கள் வசம் சுயராட்சிய ஆளுகையைக் கொடுத்தால் நாடு பாழாகி சீர்கெட்டுப்போகும்" என்றார். ஆதி திராவிடர்கள் அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்தியாவில் தமிழனுக்கு கிடைக்கவேண்டிய அதிகாரத்தை துணிந்து கேட்ட ஈடு இணையற்ற மாமனிதர்.

1918 ஆம் ஆண்டில், ஆதி திராவிட மகாசன சபை, தலித் சமூகத்திற்கு பயன்படுத்தப்படும் தற்போதைய "பரையா" (பறையர் என்ற வார்த்தையை மாற்ற இந்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது.[6] மற்றொரு பறையர் சமூகத்தின் தலைவரான எம். சி. ராச்சேசு, சென்னை மாகாண தலைவர், மூலமாக அரசாங்க கோப்புகளில் "ஆதி-திராவிடர்" என்கிற வார்த்தையை உபயோகிக்கும் வழக்கம் ஏற்பட்டது. 1922இல் பறையர், பள்ளர், மாலா, மதிகா என்ற வார்த்தைகளுக்குப் பதில் ஆதி திராவிடர், ஆதி ஆந்திரர் வார்த்தைகள் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை எம்.சி.ராசா என்பவரால், சென்னை மாகாண சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.[5]

1914 இல், தமிழ்நாடு சட்ட மேலவையில் "பறையர்" என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிக்கும் சொல்லாக கருதப்பட வேண்டும் எனவும், அதற்கு மாற்றாக "ஆதி-திராவிடர்" எனவும் அழைக்கப்படும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.[7] 1920 ஆம் ஆண்டிலிருந்து 1930 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், ஈ.வெ.இராமசாமி என்பவரால் "ஆதி-திராவிடர்" என்கிற சொல் மக்களிடையே பெருமளவில் பரவியது.[3] 1940 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் நான்காம் நாள் திருவாரூரில் பெரியார் ஈ.வெ.ராமசாமி தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16வது மாகாண மாநாடு, காந்தியடிகள் பயன்படுத்திய ’அரிசன்’ எனும் வார்த்தைக்கு மாற்றாக ’ஆதிதிராவிடர்’ என்ற பெயரை ஆதிதிராவிட மக்களைக் குறிப்பிட பயன்படுத்தச் சொல்லி அரசாங்கத்தையும் பொதுமக்களையும் வேண்டிக் கொண்டது.[8]

ஆதி திராவிடர்களின் பூர்வ சரித்திரம்- கோபால செட்டியாரால் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலை ப.திருமாவேலன், தி.சிற்றரசு, பா.ரஞ்சித் ஆகியோரால் சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்டது.[9]

குறிப்புகள்

  1. "Half of India’s dalit population lives in 4 states". The Times of India. 2013-05-02. http://timesofindia.indiatimes.com/india/Half-of-Indias-dalit-population-lives-in-4-states/articleshow/19827757.cms. பார்த்த நாள்: 2018-02-12. 
  2. "Census of india 2011" (PDF). Government of India.
  3. 3.0 3.1 3.2 Bergunder 2004.
  4. "Half of India’s dalit population lives in 4 states". The Times of India. 2013-05-02. http://timesofindia.indiatimes.com/india/Half-of-Indias-dalit-population-lives-in-4-states/articleshow/19827757.cms. பார்த்த நாள்: 2018-02-12. 
  5. 5.0 5.1 Srikumar 2014.
  6. Christophe Jaffrelot (2003). India's Silent Revolution: The Rise of the Lower Castes in North India. Columbia University Press. pp. 169–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-12786-8.
  7. Bergunder 2011.
  8. நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 578-579
  9. நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்; பகுதி 1; பக்கம் 638-641
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_திராவிடர்&oldid=3833485" இலிருந்து மீள்விக்கப்பட்டது