அறிஞர் அண்ணா பவளவிழா நினைவு வளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


1986 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவின் பவளவிழா ஆண்டு கொண்டாட்டத்திற்காக 1985-லேயே எம்.ஜி.ஆர் திட்டமிடப்பட்டு கணபதி ஸ்தபதியால் அறிஞர் அண்ணா பவளவிழா நினைவு வளைவு அமைக்கப்பட்டது. இது அண்ணா நகரில் தோரண வாயில் என்றும் அண்ணா வளைவு என்றும் அழைக்கப்படுகின்றது. சென்னை நகரின் முக்கிய பகுதியான அண்ணாநகருக்கு பூந்தமல்லி சாலையில் இருந்து செல்லும் நுழைவு வாயிலில் அண்ணா நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

அறிஞர் அண்ணாவின் மீது பேரன்பு கொண்டிருந்த எம்.ஜி.ஆர், அண்ணாவின் பவள விழா நினைவாக அண்ணா நகரை நிர்மானித்தார். அத்துடன் அந்த நகரின் முகப்பில் நினைவு வளைவு ஒன்றையும் அமைக்கலாம் என எண்ணினார். அதற்காக கணபதி ஸ்தபதியுடன் எம்.ஜி.ஆர் தலைமையில் ஆலோசனை 1985ல் நடந்தது. 54 அடி உயரமான வளைவினை ஸ்தபதி 105 நாட்களுக்குள்ளேயே வியக்கும் படி அமைத்து தந்தார். அண்ணா பவளவிழா ஆண்டான 1986 -ல் ஜனவரி முதல் நாளே எம்.ஜி.ஆர் இந்த வளைவினை திறந்துவைத்தார். இதற்காக சென்னை மாநகராட்சியிலிருந்து ரூ.7 லட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாய் செலவிடப்பட்டது. [1]

அகற்ற திட்டம்[தொகு]

அரும்பாக்கம் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அச்சாலையில் நெல்சன்மாணிக்கம் சாலை மற்றும் அண்ணாநகர் 3வது நிழற்சாலை சந்திப்புகளை இணைத்து, 117 கோடி ரூபாய் மதிப்பில் இரு மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த பணிக்காக, அண்ணாநகர் 3வது நிழற்சாலை நுழைவு வாயிலில் உள்ள அண்ணா வளைவு அகற்றப்பட திட்டமிடப்பட்டது.

இதற்காக பெரிய கிரேன் கொண்டு வரப்பட்டு அண்ணா வளைவு அப்படியே முழுமையாக அறுத்து எடுக்க செப்டம்பர் மாதம் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் இதில் சிரமம் ஏற்பட்டதால் அறுத்து எடுக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இதை கேள்விப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 26.9.12 அன்று அண்ணா வளைவு நேரில் சென்று பார்வையிட்டார். இதை இடிக்காமல் மாற்று பாதையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனையும் வழங்கினார். இதையொட்டி அண்ணா வளைவை மீண்டும் ஒட்டும் பணி நடைபெற்றது. 600 ஊழியர்கள் இரவு பகலாக 3 ஷிப்டாக பணியாற்றி வந்தனர். விஜய நிர்மான் என்ற தனியார் கட்டுமான நிறுவனம் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அண்ணா வளைவை புதுப்பொலிவுடன் ரூ. 67 லட்சம் செலவில் சீரமைத்தனர்.

அண்ணா வளைவினை அகற்றாமல் மாற்றுப்பாதையில் பாலம் கட்டுவதற்காக திட்டமிட்டு, அறுக்கப்பட்ட அண்ணா வளைவினை சீரமைக்கும் பணி நடைபெற்றது. ஜனவரி 4, 2013-ல் நெடுஞ்சாலைத்துறை தலைமை இன்ஜினியர் சாமுவேல் எபநேசர் மீண்டும் திறந்துவைத்தார். [2]

காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அறுக்க தெரியாத அதிகாரிகளால் அரைகுறையானது அண்ணா ஆர்ச்". Archived from the original on 2012-09-08. பார்க்கப்பட்ட நாள் 2012-09-27.
  2. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=89635[தொடர்பிழந்த இணைப்பு] நக்கீரன் இதழ் ஜனவரி 4 2013

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வார்ப்புரு:எம்.ஜி.ஆர்