அசோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசோல்கள் (Azoles) என்பவை ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட பல்லின வளையச் சேர்மங்கள் ஆகும். இவற்றில் ஒரு நைட்ரசன் அணுவும் குறைந்தபட்சம் வேறொரு கார்பன் அல்லாத அணு (அதாவது நைட்ரசன், கந்தகம் அல்லது ஆக்சிசன்) போன்றவை வளையத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றிருக்கும் [1]. ஆண்ட்செ-வைட்மான் பெயரிடல் முறையிலிருந்து இவற்றுக்கான பெயர் தோன்றுகின்றன. அரோமாட்டிக் சேர்மங்கள் இவற்றினுடைய பெற்றோர் சேர்மங்களாகும். இவற்றில் இரண்டு இரட்டைப் பிணைப்புகள் காணப்படுகின்றன. அசோலின்களும், அசோலிடின்களும் அடுத்தடுத்த ஒடுக்க வினையில் இவற்றிலிருந்து தோன்றும் ஒத்த சேர்மங்களாகும். வளையத்தின் பகுதியாக உள்ள வேற்றணுவில் இருந்து கிடைக்கும் ஒரெயொரு தனி இணை எலக்ட்ரான்கள் அசோலின் சேர்மத்தின் அரோமாட்டிக் பிணைப்பாக இருக்கிறது. ஒடுக்க வினையில் தோன்றும் அசோல்களின் பெயர்களில் பைரசோலின், பைரசோலிடின் என்று முன்னொட்டு சேர்க்கப்பட்டு அழைக்கப்படுகிறது. அசோல் வளையத்தில் இடம்பெற்றுள்ள அணுக்களுக்கு எண்ணிடுவது இரட்டைப்பிணைப்பின் பகுதியல்லாத வேற்றணுவிலிருந்து தொடங்குகிறது. பின்னர் இதைத் தொடர்ந்து அடுத்த வேற்றணுவை நோக்கிச் செல்கிறது. இமிடசோலும் மற்ற இரண்டு நைட்ரசன் கொண்ட ஐந்து உறுப்பினர் அரோமாட்டிக் பல்லினவளையச் சேர்மங்ளும் இயற்கையில் மிகப்பொதுவானவைகளாகும். இசுடிடின் போன்ற பல உயிர்மூலக்கூறுகளின் உள்ளகமாக இவை உருவாகின்றன.

சேர்ம வகைப்பாடுகள்[தொகு]

நைட்ரசன் மட்டும்
N,O சேர்மங்கள்
N,S சேர்மங்கள்

பூஞ்சை எதிர்ப்பி[தொகு]

பிளக்கொனசோல் கட்டமைப்பு

ஏற்றுக்கொள்ளக்கூடிய நச்சுத்தன்மையுடனான நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கான தேடல்களின் விளைவாக கீட்டோகொனசோல் கண்டுபிடிக்கப்பட்டது. 1980 களின் முற்பகுதியில் பூஞ்சை தொற்றுகளுக்கு அசோல் அடிப்படையிலான முதலாவது வாய்வழி சிகிச்சையை இது அளித்தது. பின்னர் டிரையசோல்களான பிளக்கொனசோல் மற்றும் இட்ரகொனசோல் முதலியன இச்சிகிச்சைக்கு பாதுகாப்பானவையாக விரிவுபடுத்தப்பட்டன. மருந்து-மருந்து இடைவினைகள், நச்சு, தடை வளர்ச்சி போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டன. வொரிகொனசோல், பொசாகொனசோல், ரவுகொனசோல் போன்ற இரண்டாம் தலைமுறை டிரையசோல்கள் நோய்களுக்கு எதிராக மேலும் சக்திவாய்ந்தவையாக உருவாக்கப்பட்டன [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Eicher, T.; Hauptmann, S. (June 2003). The Chemistry of Heterocycles: Structure, Reactions, Synthesis, and Applications (2nd ed.). John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527307206.
  2. Maertens, J. A. (2004-03-01). "History of the development of azole derivatives". Clinical Microbiology and Infection 10 Suppl 1: 1–10. doi:10.1111/j.1470-9465.2004.00841.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1198-743X. பப்மெட்:14748798. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோல்&oldid=3848606" இலிருந்து மீள்விக்கப்பட்டது