மதச்சார்பின்மையாதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதச்சார்பின்மையாதல் (Secularization) என்பது, ஒரு சமூகம், மதம்சார்ந்த விழுமியங்களுடனும், நிறுவனங்களுடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிலும், அவற்றுடன் சேர்ந்துகொள்வதிலும் இருந்து மதச்சார்பற்ற விழுமியங்களையும், மதச்சார்பற்ற நிறுவனங்களையும் நோக்கி மாற்றம் அடைதலைக் குறிக்கும். சமூகங்கள் முன்னேறிச் செல்லும்போது, குறிப்பாக நவீனமயமாக்கம் பகுத்தறிவுமயமாதல் ஆகியவற்றினூடாக முன்னேறும்போது, சமூக வாழ்க்கையின் எல்லா அம்சங்களின் மீதான அதிகாரங்களையும், ஆட்சியதிகாரத்தையும் மதம் இழந்துவருகிறது.[1] திருச்சபை மதகுரு ஒருவர் மீதான துறவிகளுக்கான கட்டுப்பாடுகளின் நீக்கத்தையும் மதச்சார்பின்மையாதல் என்னும் சொல் குறிக்கிறது.[2]

மதம் தனது சமூக, பண்பாட்டு முக்கியத்துவத்தை இழக்கும் வரலாற்று நடைமுறையையும் மதச்சார்பின்மையாதல் என்பது குறிக்கிறது. மதச்சார்பின்மையாதலின் விளைவாக நவீன சமூகங்களில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மதச்சார்பற்ற சமூகங்களில் மதம் பண்பாட்டு அதிகாரம் அற்றதாகவும், மத நிறுவனங்கள் மிகக் குறைவான சமூக ஆற்றலைக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன.

ஒரு கோட்பாடாகவும், வரலாற்று வழிமுறையாகவும் மதச்சார்பின்மையாதல் பல மட்டங்களிலான பொருள் தருவது. சமூகக் கோட்பாட்டாளர்களான கார்ல் மார்க்சு, சிக்மண்ட் பிராய்ட், மக்சு வெபர், எமில் டேர்க்கேம் போன்றோர் சமூகத்தின் நவீனமயமாக்கம் மத நம்பிக்கையின் வீழ்ச்சியையும் உள்ளடக்கும் என்ற எடுகோளை முன்வைத்துள்ளனர். இந்த வழிமுறைகள் குறித்த ஆய்வுகள் எவ்வாறு அல்லது எந்த அளவுக்கு மத நம்பிக்கைகள், மத நடைமுறைகள், மத நிறுவனங்கள் என்பன சமூக முக்கியத்துவத்தை இழக்கின்றன என்பது குறித்துத் தீர்மானிக்க முயல்கின்றன. நவீன சமூகத்தின் மதச்சார்பின்மையாதல், பகுதியாக பரந்த நெறிமுறைகள், ஆன்மீகம் ஆகியவை சார்ந்த தேவைகளுக்கு மக்கள் தம்மைத் தகவமைத்துக்கொள்ள முடியாமையில் தொடங்கி இயற்பிய அறிவியல்களில் விரைவான வளர்ச்சி வரையிலான காரணங்களின் விளைவு என்பது சில கோட்பாட்டாளர்களின் நிலைப்பாடு.[3]

இச்சொல்லுக்கு வரலாறு, மதம் ஆகியவை சார்ந்த வேறு பொருள்களும் உண்டு.[4] தேவாலயங்களின் சொத்துக்கள் தொடர்பில், வரலாற்று அடிப்படையில் இது, துறவி மடங்களின் நிலங்களையும் கட்டிடங்களையும் கையகப்படுத்துவதைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் எட்டாம் என்றி துறவி மடங்களைக் கலைத்தமையையும், 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சுப் புரட்சியின்போதும் மதகுருக்களை எதிர்த்த பல்வேறு ஐரோப்பிய அரசுகளாலும் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளையும் கொள்லலாம். இறுதியாகச் சொல்லப்பட்ட செயற்பாட்டினால் அங்கு வசித்த மதச் சமூகத்தினர் அடக்குமுறைகளுக்கும், நாடுகடத்தலுக்கும் உள்ளானார்கள். 19 ஆம் நூற்றாண்டில் செருமனியிலும், சுவிட்சர்லாந்திலும் இடம்பெற்ற "பண்பாட்டுப் போராட்ட"மும் (புதிதாக உருவான தேசிய அரசுகளுக்கும், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இடையிலான அதிகாரப் போட்டி) அதுபோல் பிற நாடுகளில் இடம்பெற்ற நிகழ்வுகளும் மதச்சார்பின்மையாதலின் வெளிப்பாடுகளாகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Secularization Debate", chapter 1 (pp. 3-32) of Norris, Pippa; Inglehart, Ronald (2004). Sacred and Secular. Religion and Politics Worldwide. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-83984-X; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-05-2183-984-6.
  2. http://www.thefreedictionary.com/secularization
  3. See text பரணிடப்பட்டது 2010-06-15 at the வந்தவழி இயந்திரம்
  4. Casanova, Jose (1994). Public Religions in the Modern World. University of Chicago Press, pg. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-09535-5
  5. Gould, Andrew in: Origins of Liberal Dominance: State, Church, and Party in Nineteenth-century Europe, University of Michigan Press, 1999, p. 82, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-472-11015-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதச்சார்பின்மையாதல்&oldid=3223603" இலிருந்து மீள்விக்கப்பட்டது