வசந்த் கோவரிகர்
வசந்த் கோவரிகர் Vasant Gowarikar | |
---|---|
பிறப்பு | புனே, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 25 மார்ச்சு 1933
இறப்பு | 2 சனவரி 2015 Pune, இந்தியா | (அகவை 81)
தேசியம் | இந்தியர் |
பணி | விஞ்ஞானி |
வாழ்க்கைத் துணை | சுதா கோவரிகர் |
பிள்ளைகள் | இரவாதி, அசுவினி, கல்யாணி |
வசந்த் ராஞ்சோடு கோவரிகர் (Vasant Ranchhod Gowarikar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானியாவார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் இயக்குநராகவும், 1991-1993 ஆம் ஆண்டுகளில் இந்தியப் பிரதமரின் அறிவியல் ஆலோசகராகவும் இருந்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சி, வானிலை மற்றும் மக்கள் தொகை ஆகிய துறைகளில் மதிப்புமிக்க பங்களிப்புகளை வழங்கினார். பருவமழை குறித்த வானிலை முன்னறிவிப்புக்காக இவர் நன்கு அறியப்பட்டார். ஏனெனில் பருவமழையை சரியாக கணிக்க ஓர் உள்நாட்டு வானிலை முன்னறிவிப்பு மாதிரியை உருவாக்கிய முதல் விஞ்ஞானி கோவரிகர் ஆவார்.[1][2]
தொடக்க கால வாழ்க்கை
[தொகு]கோவரிகர் இந்தியாவின் புனேவில் 1933 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 25 அன்று ஒரு மராட்டிய குடும்பத்தில் பிறந்தார். மேற்கு மகாராட்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் கல்விகற்று பட்டம் பெற்றார். பிறகு 1950 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இங்கிலாந்திற்குச் சென்று தனது நீண்ட அறிவியல் பயணத்தை தொடங்கினார். அங்கு வேதிப் பொறியியல் பிரிவில் தனது முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். பேராசிரியர் எப்.எச்.கார்னர் இவரது முனைவர் பட்ட ஆய்வுக்கு மேற்பார்வையாளராக இருந்தார். இந்த இணையின் ஒத்துழைப்ப்பால் கார்னர்-கோவரிகர் கோட்பாடு தோன்றியது. இக்கோட்பாடு திடப்பொருட்களுக்கும் திரவத்திற்கும் இடையிலான வெப்பம் மற்றும் நிறை பரிமாற்றம் பற்றிய ஒரு புதிய பகுப்பாய்வாகும்.[3]
வாழ்க்கை
[தொகு]இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் கோவரிகர் பணிபுரிந்தார். முன்னதாக கேரளாவின் தும்பாவில் உள்ள உள்ளூர் புனித மேரி மாக்டலீன் தேவாலயத்தின் கட்டிடத்தில் அலுவலகம் அமைத்து விக்ரம் சாராபாயின் கீழ் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். திண்மநிலை உந்துசக்தி உருவாக்கத்தில் கோவரிகர் ஒரு முன்னோடியாக இருந்தார். 1979 ஆம் ஆண்டுக்கும் 1985 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார்.
கோவரிகர் 1991 முதல் 1993 வரை இந்தியப் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் அறிவியல் ஆலோசகராகவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளராகவும் இருந்தார்.
புனே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட கோவரிகர் 1994 ஆம் ஆண்டு முதல் 2000 வரை மராத்தி விஞ்ஞானப் பரிசத் அமைப்பின் தலைவராக இருந்தார். 2008 ஆம் ஆண்டில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து உரங்கள் தொடர்பான ஒரு கலைக்களஞ்சியத்தை கோவரிகர் தொகுத்தார். உரங்களின் வேதியியல் கலவையை விவரிக்கும் 4,500 உள்ளீடுகள் அக்கலைக்களஞ்சியத்தில் இடம்பெற்றன. உரங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடு முதல் அவற்றின் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பரிசீலனைகள் வரை அனைத்தையும் களஞ்சியத்தில் இடம்பெற்றிருந்தன.
விருதுகள்
[தொகு]இந்திய அரசு வழங்கும் உயரிய குடிமை விருதுகளான பத்மசிறீ விருது 1984 ஆம் ஆண்டிலும் பத்ம பூசண் விருது 2008 ஆம் ஆண்டிலும் கோவரிகருக்கு வழங்கப்பட்டன.[4] இவற்றைத் தவிர ஃபை அறக்கட்டளை விருதையும் இவர் பெற்றார்.[2]
இறப்பு
[தொகு]டெங்கு மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தொடர்ந்து கோவரிகர் இந்தியாவின் புனேவிலுள்ள தீனநாத் மங்கேசுகர் மருத்துவமனையில் 2015 ஆம் ஆண்டு சனவரி 2 அன்று காலமானார்.[5][2][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vasant Gowarikar". Archived from the original on 2015-01-02. பார்க்கப்பட்ட நாள் 2020-12-31.
- ↑ 2.0 2.1 2.2 "Former ISRO chief VR Gowarikar dies in Pune". Zee News. 3 January 2015. http://zeenews.india.com/news/sci-tech/former-isro-chief-v-r-gowarikar-dies-in-pune_1523955.html.
- ↑ Vasant Gowarikar
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ Scientist Vasant Gowarikar passes away
- ↑ Scientist Vasant Gowarikar no more