யூர்ட்
யூர்ட் (Yurt) என்பது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைத் துணியாலான, இடத்துக்கிடம் மாற்றி அமைக்கத்தக்க ஒரு வகை உறையுள் (வீடு) ஆகும். இது நடு ஆசியா மற்றும் மங்கோலியாவில் உள்ள ஸ்டெப்பிப் புல்வெளிகளில் வாழும் நாடோடி மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. [1]
சொற்பொருள்
[தொகு]யூர்ட் என்னும் சொல் தொடக்கத்தில் துர்க்கிக் மொழியிலிருந்து பெறப்பட்டது. அம்மொழியில் இச்சொல், தாய்நிலம் (homeland) என்ற தொனியில், குடியிருக்கும் இடம் (dwelling place) எனப் பொருள்படும். ரஷ்யாவில் இது யூர்ட்டா என அழைக்கப்பட்டது. ரஷ்ய மொழியிலிருந்து இச்சொல் ஆங்கில மொழிக்கு வந்தது.
அமைப்பு
[தொகு]மரத் தண்டுகளிலாலான வட்ட வடிவமான சட்டகத்தின் மேல், செம்மறி ஆட்டு உரோமத்திலிருந்து செய்யப்படும் ஒரு வகைத் துணியால் போர்த்தி இவ்வகை வீடுகளை அமைக்கிறார்கள். இவ்வினத்தவர் மேய்ப்பர்கள் ஆதலால் செம்மறி ஆடுகளின் உரோமம் இவர்களுக்கு இலகுவில் கிடைக்கத்தக்க ஒரு பொருளாகும். ஆனால், இதற்குத் தேவையான மரத்தை, இவர்கள் வாழும் மரங்களற்ற புல்வெளிகளில் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால், இவர்களின் வாழிடங்களுக்குக் கீழ்ப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளத்தாக்குப் பகுதிகளில் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள்.
வீட்டுக்கான சட்டகம், ஒன்று அல்லது இரண்டு சாளர அமைப்பு, கதவு நிலை, கூரைக்கான வளைகள், ஒரு முடி என்பவற்றைக் கொண்டிருக்கும். சில வகை யூர்ட் களில், முடியைத் தாங்குவதற்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையான தூண்களும் அமைந்திருப்பது உண்டு. சட்டகத்தின் மீது பல துண்டுகளாக இருக்கும் கம்பளி வகைத் துணியைப் போர்த்துவர். இதன் மேல் சில சமயங்களில், கிடைப்பதைப் பொறுத்து, கான்வஸ் துணியாலும் போர்த்தப்படும். கயிறுகளைப் பயன்படுத்திச் சட்டகத்தை உறுதியாக ஆக்குவர். அமைப்பு, மேலே போர்த்தப்பட்டுள்ள துணியின் பாரத்தால் நிலத்தில் உறுதியாக இருக்கிறது. தேவை ஏற்பட்டால், கூரையின் மையப்பகுதியில் இருந்து பாரமான வேறு பொருட்களைத் தொங்க விடுவதும் உண்டு. யூர்ட்டின் அளவு, நிறை, கூரை மரங்களின் அமைப்பு என்பன இடத்துக்கிடம் வேறுபடுவதையும் காணலாம்.
-
மங்கோலிய கெர் (Mongolian ger): கூரைத் தண்டுகளைப் பொருத்தத் தொடங்குதல்
-
மங்கோலிய கெர்: கூரைத் தண்டுகள் பொருத்தப்பட்ட பின்.
-
மங்கோலிய கெர்: மெல்லிய உட் போர்வை போர்த்தப்படுகிறது.
-
மங்கோலிய கெர்: கம்பளிப் போர்வையிடல்
-
மங்கோலிய கெர்: வெளிப் போர்வையிடல்
-
மங்கோலிய கெர்: போர்வைகளைக் கட்டி, அமைப்பை நிறைவாக்கல்.
-
கசாக்ஸ்தானில் ஷிம்கெண்ட் பகுதியில் உள்ள ஒரு யூர்ட்.