மோகன் ரானடே
மோகன் ரானடே (Mohan Ranade) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இவர் கோவா விடுதலை இயக்கத்தில் பங்கேற்று பதினான்கு ஆண்டுகள் போர்த்துகீசிய சிறையில் இருந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]மோகன் ரானடே 1930 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று [1] இந்தியாவின் இன்றைய மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள சாங்லியில் மனோகர் ஆப்தே என்ற பெயரில் பிறந்தார். கோவா விடுதலை இயக்கத்தில் சேர்ந்தபோது மோகன் ரானடே என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். [2]
கோவா விடுதலை இயக்கம்
[தொகு]கணேசு தாமோதர் சாவர்க்கர் மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் போன்ற புரட்சிகர தலைவர்களால் ஈர்க்கப்பட்டு ரானடே 1953 ஆம் ஆண்டில் போராளிகள் அமைப்பான, ஆசாத் கோமண்டக் தளத்தில் சேர்ந்தார் [3]
அமைப்பின் உறுப்பினராக, இவர் 1954 ஆம் ஆண்டு சில்வாசாவின் விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டார். கோவா சென்றபோது, சவோய் வெரெம் கிராமத்தில் உள்ள பெண்களுக்கான மராத்தி பள்ளியில் ஆசிரியராக இவருக்கு வேலை கிடைத்தது. இவரது மாணவர்களின் கூற்றுப்படி, ரானடே மிகவும் ஊக்கமளிக்கும் ஆசிரியராக இருந்தார். சனிக்கிழமைகளில், இந்திய தேசிய உணர்வையும், காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற விருப்பத்தையும் ஏற்படுத்த மாணவர் கூட்டங்களை இவர் நடத்துவது வழக்கம். ரானடே தனது அமைப்பிற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பெறுவதற்காக காவல்துறை மற்றும் சுங்கப் புறக்காவல் நிலையங்கள், சுரங்கங்கள் மீதான பல தாக்குதல்களிலும் பங்கேற்றார். இந்தியாவின் மூவர்ணக் கொடியை அவமதித்த கோவா நாட்டைச் சேர்ந்த ஒருவரின் கொலையிலும் ரானடே பங்கேற்றார். அக்டோபர் 1955 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெடிம் காவல்துறை மீதான தாக்குதலின் போது, போர்த்துகீசிய காவல்துறையினரால் ரானடே காயமடைந்தார். காயங்களில் இருந்து மீண்ட பிறகு, இவர் விசாரணை செய்யப்பட்டு 1956 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் போர்ச்சுகலில் 26 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். [4]
கைதும் சிறைவாசமும்
[தொகு]1955 ஆம் ஆண்டு காலனித்துவ போர்த்துகீசிய காவல்துறையினரால் ரானடே கைது செய்யப்பட்டார். ரானடே போர்ச்சுகலில் விசாரிக்கப்பட்டு இருபத்தி நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இலிசுபனுக்கு அருகிலுள்ள காக்சியாசு கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டார், அங்கு இவர் ஆறு ஆண்டுகள் தனிமைச் சிறையில் இருந்தார். 1962 ஆம் ஆண்டில் இந்தியா கோவாவை விடுவித்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1969 ஆம் ஆண்டு சனவரியில் விடுதலை செய்யப்பட்டார், ரானடே மொத்தம் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அப்போதைய தமிழக முதல்வராக இருந்த அண்ணா துரை மற்றும் போப் பால் ஆகியோரின் தலையீடு இவரது விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்தது. [5] [6]
கௌரவங்கள்
[தொகு]ரானடேவுக்கு 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு 2001 சாங்க்லி பூசண்[7] விருதும் வழங்கப்பட்டது. முன்னதாக இவரது சமூகப் பணிக்காக 1986 ஆம் ஆண்டு கோவா புரசுகார் விருதும் வழங்கப்பட்டது.
பிற்கால வாழ்வு
[தொகு]கோவா விடுதலை இயக்கம் பற்றிய இரண்டு புத்தகங்களை ரானடே எழுதியுள்ளார்: முடிக்கப்படாத போராட்டம் , சாதிச்சே வான் என்பவை அவ்விரண்டு புத்தகங்களாகும். பொருளாதாரத்தில் பின்தங்கிய பின்னணியில் உள்ள மாணவர்களின் கல்விக்கு நிதியுதவி செய்யும் ஒரு தொண்டு நிறுவனத்தை புனேவில் நடத்தி வந்தார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கோவா செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராக இருந்தார். 2019 ஆம் ஆண்டு சூன் மாதம் 25 ஆம் தேதியன்று ரானடே பிற்காலத்தில் தான் வசித்து வந்த புனே நகரத்திலேயே இறந்தார். [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://english.svjjs.org/founder-president/[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2.0 2.1 "ज्येष्ठ स्वातंत्र्य सैनिक मोहन रानडे यांचे निधन"."ज्येष्ठ स्वातंत्र्य सैनिक मोहन रानडे यांचे निधन".
- ↑ Risbud, S.S., 2003. Goa's Struggle for Freedom, 1946-1961: The Contribution of National Congress (Goa) and Azad Gomantak Dal (Doctoral dissertation, Goa University).
- ↑ Raut-Desai, A.A., 2003. Voices in the Liberation Struggle: The Case of Goa (1947-61) (Doctoral dissertation, Goa University).
- ↑ Aldrovandi, C., 2018. A Senda do Dever (Satiche Vaan). InterDISCIPLINARY Journal of Portuguese Diaspora Studies, 7, pp.339-345.
- ↑ "Goa freedom fighter Mohan Ranade who spent 14 years in Portuguese jail dies in Pune".
- ↑ "Patil concerned over dwindling girls' population". May 2006. Archived from the original on 2012-02-10. பார்க்கப்பட்ட நாள் 2021-12-16.