உள்ளடக்கத்துக்குச் செல்

முன்-கொலம்பியக் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி.மு.1000இல் அமெரிக்காக்களில் பிழைப்பு முறைகளை சுட்டும் நிலவரைபடம்
  வேடுவர்-சேகரிப்போர்
  சிக்கலான வேளாண் குடிகள் (பழங்குடி தலைவர்களாட்சி (அ) நாகரிகங்கள்

முன்-கொலம்பியக் காலம் அல்லது கொலம்பசுக்கு முந்தையக் காலம் (pre-Columbian era) என்பது குறிப்பிடத்தக்க அளவில் ஐரோப்பியர்கள் வந்திறங்கி அமெரிக்கக் கண்டங்களில் தாக்கமேற்படுத்துவதற்கு முன்பிருந்த அமெரிக்காக்களின் வரலாற்றிலும் முன்வரலாற்றிலும் உள்ள காலப் பிரிவினைகளைக் குறிக்கும். இது பின்னைப் பழங்கற்காலத்தில் ஆசியர்கள் இடம் பெயர்ந்ததிலிருந்து நடுக்காலத்தைத் தொடர்ந்த துவக்க தற்காலத்தில் ஐரோப்பிய குடியேற்றம் வரையிலானது.

"முன்-கொலம்பியக் காலம்" என்ற சொற்றொடர் 1492இல் கொலம்பசின் கடற்பயணங்களுக்கு முந்தைய என்ற பொருள்பட்டாலும் பொதுவாக இச்சொற்றொடர் ஐரோப்பியத் தாக்கத்தால் குறிப்பிடத்தக அளவில் மாற்றமடையும் வரையிலான அமெரிக்க முதற்குடி நாகரிகங்களின் முழுமையான வரலாற்றைக் குறிக்கின்றது; இத்தகைய மாற்றம் கொலம்பிசின் காலடி பதித்ததற்கு பல்லாண்டுகள் அல்லது நூறாண்டுகள் கழித்ததாக இருக்கலாம். இக்காரணத்தால் மாற்றுச் சொற்றொடர்களாக தொடர்புக்கு முந்தைய அமெரிக்காக்கள், குடியேற்றத்திற்கு முந்தைய அமெரிக்காக்கள் அல்லது வரலாற்றுக்கு முந்தைய அமெரிக்காக்கள் என்பனவும் பயனில் உள்ளன. இலத்தீன் அமெரிக்கா பகுதிகளில் இக்காலம் முன்-இசுபானிய (Pre-Hispanic) எனப்படுகின்றது.

பல முன்-கொலம்பிய நாகரிகங்கள் குறிப்பிடத்தக்க தனிக்குறியீடுகளைக் கொண்டிருந்தன; நிரந்த குடியிருப்புக்கள், நகரங்கள், வேளாண்மை, நகரிய, நினைவுச்சின்னகட்டிட அமைப்புகள், பெரும் மண்ணாழ்வு பணிகள், சிக்கலான சமூக அடுக்கதிகாரங்களைக் கொண்டிருந்தன. இவற்றில் சில நாகரிகங்கள் முதல் நிரந்தர ஐரோப்பிய/ஆபிரிக்க மக்கள் வந்திறங்கும் முன்னரே (கி.பி 15ஆம் நூற்றாண்டு பின்பகுதி - 16ஆம் நூற்றாண்டு முன்பகுதி) மறைந்து விட்டன. இவற்றைக் குறித்த குறிப்புகள் தொல்லியல் அகழ்வாய்வுகள் மற்றும் கேள்விவழி வரலாறுகள் மூலமே பெறப்படுகின்றன. குடியேற்றக் காலத்து சமகால பிற நாகரிகங்கள் அக்கால ஐரோப்பிய வரலாற்றுப் பதிவுகளில் இடம் பெற்றுள்ளன. வெகுசில நாகரிகங்கள், மாயா நாகரிகம் போன்றவை, தங்கள் வரலாற்றுப் பதிவுகளை எழுதிவிட்டுச் சென்றுள்ளன. இவற்றை கிறித்தவ ஐரோப்பியர் தப்பிதமான நோக்குள்ளவையாகக் கருதியதால், டியோகோ டெ லாண்டா போன்றவர்கள் இந்த உரைகளை தீயிட்டுக் கொளுத்தி அழித்தனர். ஒளித்து வைக்கப்பட்டிருந்த சில ஆவணங்களே தப்பித்தன; வேறுசில எழுதப்பட்ட மொழியிலிருந்து எசுப்பானியத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு அல்லது ஒலிபெயர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டன. அக்கால நாகரிகங்களைக் குறித்தும் அவர்களது பண்பாடு, அறிவு குறித்தும் இவை மூலமே வரலாற்றாளர்கள் சற்றேனும் அறிய முடிகின்றது.

இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியில் நிலவிய அசுடெக், மாயா நாகரிகங்களும்) அந்தீசு மலைத்தொடர் பகுதியில் இருந்த (இன்கா, மோச்சே மற்றும் சிப்சா நாகரிகங்களும் குறிப்பிடத்தக்கன.

முன்-கொலம்பியக் காலத்திற்கு பின்னரும் தொல்குடி அமெரிக்கரின் பண்பாடு தொடர்ந்து முன்னேறி வருகின்றது. இவர்களில் பெரும் பாலோர் தங்கள் வழமையானச் சடங்குகளை தொடர்வதோடு புதிய பண்பாட்டுக் கூறுகளையும் தொழினுட்பங்களையும் தங்களுக்கேற்ப மாற்றிக் கொள்கின்றனர்.

காட்சியகம்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்-கொலம்பியக்_காலம்&oldid=2987578" இலிருந்து மீள்விக்கப்பட்டது