அமெரிக்காக்களின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட அமெரிக்காவில் தாயக அமெரிக்கர் அல்லாதோர் எடுத்துக்கொண்ட நிலங்கள், 1750-2008.
1700 ஆண்டுகளிலிருந்து நடு அமெரிக்கா, கரிபியன் பகுதிகளின் அரசியல் படிமலர்ச்சி.

அமெரிக்காக்களின் வரலாறு என்பது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா, கரிபியன் ஆகிய பகுதிகள் சேர்ந்த பகுதியின் வரலாறு ஆகும். ஆசியப் பகுதிகளில் இருந்தும், ஓசானியாவில் இருந்தும் பனிக்கட்டிக் காலம் உயர்நிலையில் இருந்தபோது, முதல் மனிதர்கள் இப் பகுதிக்குள் வந்த காலத்தில் இருந்து இவ்வரலாறு தொடங்குகிறது. இக் குழுக்கள், 10 ஆம் நூற்றாண்டிலும், பின்னர் 15 ஆம் நூற்றாண்டிலும் ஐரோப்பியர் இப் பகுதிகளுக்கு வரும்வரை, பழைய உலகிலிருந்து தனிமைப்பட்டு இருந்தனர்.

இன்றைய தாயக அமெரிக்கர்களின் மூதாதையர்கள் வட அமெரிக்காவுக்குள் வந்த வேட்டுவ-உணவுசேகரிப்போர் ஆவர். மிகவும் நம்பப்படுகின்ற கோட்பாடுகளின்படி, முதல் மனிதர், பெரிங்கியாவிலுள்ள, பெரிங் நிலத்தொடுப்பு வழியாக அமெரிக்காவுக்குள் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இத்தொடுப்பு இப்போது பெரிங் நீரிணையில் குளிர்ந்த கடல் நீரினால் மூடப்பட்டுள்ளது. அண்மைக்கால ஆய்வாளர் சிலர் முதல் மனிதர்கள் 14,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்குள் வந்திருக்கலாம் என்கின்றனர். பழைய-இந்தியர் சிறு குழுக்களாக உணவுக்கான விலங்குகளைத் தொடர்ந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[1][2][3]

இவ்வாறு அமெரிக்காவுக்குள் வந்தோரால் கொண்டுவரப் பட்ட பண்பாட்டுக் கூறுகள், வட அமெரிக்காவின் இராகுவோய்ஸ் பண்பாடு, தென் அமெரிக்காவின் இன்கா பண்பாடு போன்றவையாக வளர்ச்சியடைந்தன. இவற்றுட் சில பெரிய நாகரிகங்களாகவும் வளர்ச்சி பெற்றன. பெரும்பாலும் இவை பழைய உலக நாகரிகங்களோடு ஒப்பிடும்போது காலத்தால் பிற்பட்டவையாகும். கஹோக்கியா, சப்போட்டெக், தொல்டெக், ஒல்மெக், அஸ்டெக், புரெபெச்சா, சிமோர், இன்கா என்பன முன்னேறியவையாக அல்லது நாகரிகம் அடைந்தவையாகக் கருதத் தக்கவை.


மேற்கோள்கள்[தொகு]