மனிதன் நிலவில் இறங்கிய நிகழ்வு குறித்த சதிக் கோட்பாடுகள்
1969-ஆம் ஆண்டு மனிதன் முதன் முறையாக நிலவில் இறங்க போகிறான் என்று ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்தது. இதனை அடுத்து அந்த நிகழ்வினை உலகம் முழுமைக்கும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் செய்தது. ஆனால் இந்த மனிதன் நிகழ்வில் இறங்கிய நிகழ்வு ஒரு பொய்யான நாடகம் என்று பல்வேறு குழுக்கள் விவாதித்து வருகின்றன. அத்தகையோர் முன்வைக்கும் வாதங்களே மனிதன் நிலவில் இறங்கிய நிகழ்வின் சதிக் கோட்பாடுகள் (Moon landing conspiracy theories) எனப்படுகின்றன. 1969 முதல் 1975 வரையிலும் நிலவிற்கு ஆறு மனிதர்களை அனுப்புவதாக செய்த ஆராய்ச்சிகள் அனைத்தும் பொய் என்றும் அப்போல்லோவின் விண்வெளி வீரர்கள் அங்கு செல்லவில்லை என்றும் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இந்தக் கருத்தை முன்வைத்து வாதாடுபவர்கள் நாசா வேண்டுமென்றே பொதுமக்களை ஏமாற்றும் நோக்குடன் நிகழாத பொய்யான செய்தியை பரப்பியதாக விவாதிக்கிறனர். அவர்களின் விவாதத்திற்கு சான்றாக நாசா வெளியிட்ட புகைப்படங்களையும், நிகழ்படத் துணுக்குகளையுமே முன்வைக்கின்றனர்.
அப்போல்லோ திட்டம் பற்றிய ஏராளமான மூன்றாம் தரப்பு நடுநிலைச் சான்றுகள் உள்ள போதிலும் இந்த சதிக்கோட்பாடுகளை நம்புவோர் பலர் உள்ளனர். அமெரிக்காவில் 6 முதல் 20 சதவீதம் மக்களும் உருசியாவில் 28% சதவீதம் மக்களும் மனிதன் நிலவில் கால் பதித்தது சோடிக்கப்பட்ட நிகழ்வு என்று நம்புவதாகக் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தோற்றம்
[தொகு]பில் கேசிங் என்பவர் எழுதி வெளியிட்ட "வீ நெவெர் வென்ட் டு தி மூன்" (We Never Went to the Moon: America's Thirty Billion Dollar Swindle) என்கிற புத்தகம் தான் இந்த கருத்தை வலியுறுத்தி நிலவிறக்க நிகழ்வினை மறுத்து பேசிய முதல் நூலாகும். இந்த புத்தகம் 1974-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 1969 ஆம் ஆண்டு நீல் ஆர்ம்ஸ்ட்ராங்-ம், பஸ் ஆல்ட்ரின்-ம் நிலவில் காலடி பதித்த நிலவிறக்கம் என்கிற செய்தியை தி ஃபிளாட் எர்த் சொசைட்டி என்கிற அமைப்பு தான் முதன் முதலாக மறுப்பு தெரிவித்து நாசா இந்த விஷயத்தில் பொய் சொல்கிறதென்றும் மக்களை ஏமாற்றுகின்றனர் என்றும் வாதாடியது. நாசா இந்த நிலவிறக்க நிகழ்விற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை ஹாலிவுட்டின் டிஸ்னி நிறுவனத்தின் துணையுடன் பொய்யாக நிகழ்த்திகாட்டியதென்று கூறியது. இதற்கு ஆர்தர் சி. கிளார்க் என்பவர் வரிவடிவமும் இயக்குனராக ஸ்டான்லி குப்ரிக் இருந்தார் என்றும் கூறியது. இந்த மறுப்பு மைய கருத்தை ஃபோலக்லோரிஸ்ட் லிண்டா டெக் போன்ற பலர் வலியுறுத்தினர்.
காரணங்கள்
[தொகு]இந்த நிலவிறக்கம் என்பது பொய் என்று வாதாடியவர்கள் அப்போதைய அமெரிக்க அரசாங்கமும், நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகமும் இதை செய்ததற்கு காரணமாக பல்வேறு கருத்துகளை கூறுகின்றன.
விண்வெளி போட்டி மனப்பான்மை
[தொகு]அந்த காலகட்டத்தில் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்கவிற்கும் இடையிலான விண்வெளி சாதனை போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்கிற மனப்பான்மையை தனது உயிர் மூச்சாக அன்றைய அமெரிக்க அரசு வைத்திருந்தது. சந்திரனுக்கு செல்வதென்பது அன்றைய காலகட்டத்தில் மிகவும் செலவு பிடிக்கதக்கதும் அதிக ஆபத்தானதுமாகும். அதற்கு எடுத்துகாட்டாக அன்றைய அமெரிக்க அதிபரான ஜான் எஃப். கென்னடி கூறிய பிரபலமான கருத்தே சான்றாகும். அன்றைய சூழலில் இருந்த பனிப்போரே இந்த நிலவிறக்க நிகழ்விற்கு முக்கிய காரணமாகும்.