எட்வின் ஆல்ட்ரின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பஸ் ஆல்ட்ரின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புசு ஆல்ட்ரின்
Buzz Aldrin
எட்வின் ஆல்ட்ரின்
விண்வெளி வீரர்
தேசியம் அமெரிக்கர்
தற்போதைய நிலை இளைப்பாறியவர்
பிறப்பு சனவரி 20, 1930 (1930-01-20) (அகவை 93)
கிளென் ரிட்ஜ், நியூ ஜேர்சி,  ஐக்கிய அமெரிக்கா
வேறு தொழில் போர் விமானி
படிநிலை கேணல், ஐக்கிய அமெரிக்க விமானப் படை
விண்பயண நேரம் 12 நாட்கள், 1 மணி, 52 நிமி
தெரிவு 1963 நாசா பிரிவு
பயணங்கள் ஜெமினி 12, அப்பல்லோ 11
பயண
சின்னம்

புசு ஆல்ட்ரின் (Buzz Aldrin (இயற்பெயர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின், Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 20, 1930) என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் அமெரிக்காவில் உள்ள மான்கிளேர் என்னுமிடத்தில் 1930 ஜனவரி 20ஆம் நாள் பிறந்தவர். அமெரிக்கப் படைக் கல்விக்கழகத்தில் (War Academy) 1951இல் படித்துப்பட்டம்பெற்றார். பின்னர் 1951 இல் அமெரிக்க வான்படையில் இணைந்தார். கொரியப் போரில் போர் விமானியாகப் பங்கு பற்றினார். பின்னர் மசாசுசெட்ஸ் தொழிநுட்பக் கல்லூரியில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். மீண்டும் அமெரிக்க வான்படையில் இணைந்து பணியாற்றினார்.

அப்பலோ-11 பயணத்தின் போது அல்ட்ரின் சந்திரத் தரையில் நடக்கிறார்.

அக்டோபர் 1963 இல் நாசாவினால் விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். முதன் முதலாக 1966ஆம் ஆண்டு நவம்பர் 11இல் ஜெமினி 12 விண்கலத்தில் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஐந்தரை மணிநேரம் விண்கலத்திலிருந்து வெளிவந்து நடந்தார். இதன்மூலம் வெற்றிடத்தில் மனிதன் திறம்படச் செயல்பட முடியும் என்பதை எண்பித்துக் காட்டினார்.

இறுதியில் ஜூலை 16, 1969 இல் அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் சந்திரனை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார். நான்கு நாட்களுக்குப் பின்னர் இவ்விண்கலம் நிலவில் இறங்கியது. சரியாக 02:56 UTC ஜூலை 21 (இரவு 10:56 EDT, ஜூலை 20), 1969இல், ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் கால் பதித்தார். ஆல்ட்ரின் அவரைப் பின்தொடர்ந்தார். இருவரும் சுமார் இரண்டு மணிநேரம் நிலவில் நடந்தனர். அப்போது அங்கு சிதறிக் கிடந்த கல் மாதிரிகளைச் சேகரித்தனர். நிறைய ஒளிப்படங்களை எடுத்தனர். தொடர் ஆய்வுக்கென பல்வேறு கருவிகளை நிறுவினர். பின்னர் மீண்டும் விண்கலம் திரும்பி மைக்கேல் காலின்ஸ், நீல் ஆல்டெனுடன் சேர்ந்து பூமிக்குத் திரும்பினாார். ஜூலை 24ஆம் நாளன்று பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக இறங்கினர்.

1971ஆம் ஆண்டு விண்வெளித்துறையிலிருந்து பணி ஓய்வு பெற்றார். பின்னர் விமானிப் பயிற்சிப் பள்ளித் தலைவராகத் தன் பணியைத் தொடர்ந்தார். 1972இல் அங்கிருந்தும் ஓய்வு பெற்றார். ‘பூமிக்குத் திரும்பினோம்' எனும் நூலைத் தன் விண்வெளிப் பயண அனுபவ அடிப்படையில் எழுதியுள்ளார்.

அல்ட்ரினால் எடுக்கப்பட்ட சந்திரத்தரையில் அவரது காலடியின் புகைப்படம்., ஜூலை 20, 1969.

"பஸ்" (Buzz) என்ற பெயரிலேயே அவர் பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். 1988இல் இவர் தனது பெயரை "பஸ் ஆல்ட்ரின்" என அதிகாரபூர்வமாக மாற்றிக் கொண்டார்[1][2].

மேற்கோள்கள்[தொகு]

  1. BuzzAldrin.com - About Buzz Aldrin: FAQ, retrieved 2008-06-09
  2. "Buzz Aldrin Quick Facts - Quick Facts - MSN Encarta". http://encarta.msn.com/media_461577285/Buzz_Aldrin_Quick_Facts.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Buzz Aldrin
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வின்_ஆல்ட்ரின்&oldid=3770213" இருந்து மீள்விக்கப்பட்டது