புரோமின் சோதனை
புரோமின் சோதனை (Bromine test) என்பது கரிம வேதியியலில் நிறைவுறாப் பண்பு அதாவது கார்பன் கார்பன் இரட்டைப் பிணைப்பு அல்லது முப்பினைப்பு மற்றும் பீனால்கள் ஆகியவற்றின் இருப்பைக் கண்டறிய உதவும் ஒரு சோதனையாகும்.
சோதிக்கப்பட வேண்டிய மாதிரி உப்பு, இருகுளோரோமீத்தேன் அல்லது கார்பன் நாற்குளோரைடு போன்ற கரிமக் கரைப்பானில் உள்ள தனிமநிலை புரோமினுடன் சேர்த்து சூடுபடுத்தப்படுகிறது. இவ்வினையில் புரோமினுடைய ஆழ்ந்த பழுப்புநிறம் மறைந்து போனால் அம்மாதிரி உப்பு அநேகமாக ஒரு இரட்டைப் பிணைப்பு அல்லது முப்பிணைப்பு அல்லது பீனால் சேர்மமாக இருக்கலாம். தொடர்ந்து வெண்மை நிறத்தில் வீழ்படிவு உருவாகுமேயானால் அது புரோமினேற்றம் அடைந்த பீனால் என்பது உறுதிப்படுகிறது. அதிகமான புரோமின் வினையில் பங்கேற்று நிறம் குறைந்த கரைசல் தோன்றினால் அது அதிகமான நிறைவுறாத்தன்மை அதாவது முப்பிணைப்பு உள்ள ஒரு சேர்மமாக இருக்கும் எனக் கருதலாம்[1].
பழுப்பு நிறம் மறையவில்லை எனில் , அநேகமாக அம்மாதிரி உப்பு ஒரு ஆல்க்கீன் ஆக இருக்கலாம். ஏனெனில் ஆல்க்கீன் தனிமநிலை புரோமினுடன் வினைபுரியாது அல்லது மிக மெதுவாக வினைபுரியும். எனவே, ஆல்க்கீனின் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள அடுத்ததாக பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அளவறி பகுப்பாய்வு முறையில் அயோடின் மதிப்பு[2] கண்டறிவதன் மூலமாகவும் நிறைவுறாப் பண்பை உறுதிப்படுத்தமுடியும்.
புரோமின் சோதனை ஒரு எளிய பண்பறி பகுப்பாய்வு சோதனையாகும். தெரியாத சேர்மங்கள் மற்றும் கட்டமைப்புத் தோற்றங்கள் ஆகியனவற்றை கண்டறிந்து உறுதிப்படுத்திக் கொள்ள, அணுக்கரு காந்த ஒத்ததிர்வு மற்றும் அகச்சிவப்பு நிறமாலையியல் போன்ற நவீன சோதனை முறைகள் தற்காலத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Systematic Identification of Organic Compounds" R.L. Shriner, C.K.F. Hermann, T.C. Morrill, D.Y. Curtin, and R.C. Fuson John Wiley & Sons, 1997 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-59748-1
- ↑ "Alkene Classification Tests". Chemistry Gravity Waves. பார்க்கப்பட்ட நாள் 2016-01-11.