உள்ளடக்கத்துக்குச் செல்

இரட்டைப் பிணைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஅ வேதியியலில், இரட்டைப் பிணைப்பு (double bond) என்பது இரண்டு வேதியியல் தனிமங்களுக்கு இடையே உள்ள ஒருவகையான பிணைப்பாகும். இப்பிணைப்பு உருவாக்கத்தில் வழக்கமான இரண்டு எதிர்மின்னிகளுக்குப் பதிலாக நான்கு பிணைப்பு எதிர்மின்னிகள் பங்கேற்கின்றன. ஆக்சிசன் மூலக்கூற்றில் இரண்டு சோடி எதிர்மின்னிகள் பங்கீடு அடைகின்றன. கரிம மூலக்கூறான எத்திலீனில் இரண்டு கார்பன் அணுக்களுக்கு இடையில் இரண்டு சோடி எதிர்மின்னிகள் பங்கீடு அடைகின்றன. எனவே, இவ்விரு நிகழ்வுகளிலும் இரட்டைப் பிணைப்புகள் உருவாகின்றன. இரண்டு கார்பன் அணுக்களுக்கு இடையே உள்ள இரட்டைப் பிணைப்புக்கு மிகப்பொதுவான உதாரணமாக ஆல்க்கீன்களைக் கூறலாம். இரண்டு தனிமங்களுக்கு இடையில் பலவகையான இரட்டைப்பிணைப்புகள் காணப்படுகின்றன. உதாரணமாக, கார்பனைல் தொகுதியில் ஒரு கார்பன் அணுவுக்கும் ஓர் ஆக்சிசன் அணுவுக்கும் இடையில் ஓர் இரட்டைப் பிணைப்பு காணப்படுகிறது. இவற்றைத்தவிர அசோச் சேர்மங்கள் (N=N), இமைன்கள் (C=N), சல்பாக்சைடுகள் (S=O) போன்றன பிற எடுத்துக்காட்டுகளாகும். இரட்டைப் பிணைப்பின் அடிப்படைக் குறியீடாக இணைப்புக் கொள்ளும் இரண்டு தனிமங்களின் குறியீடுகளுக்கு இடையில் இரண்டு சிறிய இணைகோடுகள் வரைந்து காட்டப்படுகின்றன. அச்சுவடிவில் சொல்வதென்றால் இதைச் சமக்குறிக்கு இணையாகச் சொல்லலாம்.[1][2] இரட்டைப் பிணைப்புகள் முதன்முதலில் புகழ்வாய்ந்த உருசிய வேதியியலாளர் அலெக்சாண்டர் பட்லெரோவால் வேதிக் குறியீடுகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

கார்பனுடன் இணைந்துள்ள இரட்டைப் பிணைப்புகள் ஒற்றைப் பிணைப்புகளைவிட வலிமையானவையும் குட்டையானவையுமாகும். இவற்றின் பிணைப்பு வரிசையெண் இரண்டு ஆகும். இரட்டைப் பிணைப்புகளில் உள்ள எதிர்மின்னிகளின் எண்ணிக்கையும் அதிகமென்பதால் அவை இரட்டைப் பிணைப்பின் வினைத்திறனை அதிகரிக்கச் செய்கின்றன.

இரட்டைப் பிணைப்புடன் கூடிய வேதிச் சேர்மங்கள்
எத்திலீன்
கார்பன்-கார்பன்
இரட்டைப் பிணைப்பு
அசிட்டோன்
கார்பன்-ஆக்சிசன்
இரட்டைப் பிணைப்பு
இருமீத்தைல் சல்பாக்சைடு
கந்தகம்-ஆக்சிசன்
இரட்டைப் பிணைப்பு
ஈரசீன்
நைட்ரசன்-நைட்ரசன்
இரட்டைப் பிணைப்பு

மேற்கோள்கள்

[தொகு]
  1. March, Jerry (1985), Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (3rd ed.), New York: Wiley, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-85472-7.
  2. Organic Chemistry 2nd Ed. John McMurry.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டைப்_பிணைப்பு&oldid=2747043" இலிருந்து மீள்விக்கப்பட்டது