பி. எஸ். செட்டியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. எஸ். செட்டியார்
1930களில் பி. எஸ். செட்டியார்
பிறப்புபி. எஸ். பக்கிரிசாமி செட்டியார்
1905
நன்னிலம், திருவாரூர் மாவட்டம், இந்தியா
இறப்பு1967 (அகவை 61–62)
தேசியம்இந்தியர்
பணிதமிழாசிரியர்
அறியப்படுவதுதமிழ்த் திரைத்துறை இதழியலின் முன்னோடி
பட்டம்பண்டிதர்
பெற்றோர்பாவாடைசாமி செட்டியார்,
கமலத்தம்மாள்

பி. எஸ். செட்டியார் என்று அழைக்கப்படும் பி. எஸ். பக்கிரிசாமி செட்டியார் (1905 – 1967) தமிழறிஞரும், தமிழாசிரியரும், இதழாசிரியரும், திரைப்படக் கதை, வசன எழுத்தாளரும், இயக்குநரும், அரசியல்வாதியும் ஆவார். சினிமா உலகம் என்ற முதலாவது தமிழ்த் திரைத்துறை மாதஇதழை நடத்தியவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பி. எஸ். செட்டியார் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1905 ஆம் ஆண்டில், பாவாடைசாமி செட்டியார் - கமலத்தம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார்.[1] தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் பண்டிதர் (வித்துவான்) தேர்வில் தேர்ச்சிபெற்று[1] சென்னையில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.[2] சிறுவர் விருந்து, செந்தமிழ்ச் செல்வி போன்ற பல நூல்களை எழுதினார். இவரது "அன்னை வாசகம்" என்ற பள்ளிகளில் துணைப்பாடமாகக் கற்பிக்கப்பட்டது.[1]

இதழாசிரியர்[தொகு]

தமிழரசு, தொழிலாளன், அமிர்த குணபோதினி ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றினார். "ஸ்வராஜ்யா" தமிழ் இதழில் பல எழுச்சிக் கட்டுரைகளை எழுதினார்.[1] சென்னையில் இருந்து 1930 இல் "சினிமா உலகம் - சினிமா ஒர்ல்ட்" என்ற தமிழ் இதழை வெளியிட்டார். இப்பத்திரிகையே தமிழ்த் திரைத்துறைப் பத்திரிகைகளின் முன்னோடி ஆகும்.[1] வெகு காலம் சென்னையிலேயே வெளிவந்த இப்பத்திரிகை போர்க்கால நெருக்கடியால் கோயம்புத்தூருக்கு மாற்றப்பட்டது.[2] கோயம்புத்தூர் வரைட்டி ஹால் வீதியில் உள்ள அவரது இல்லத்திலேயே உள்ள ஒரு சிறிய அறையில் இருந்து இவ்வார இதழை வெளியிட்டார்.[2] வெகு காலம் வரை இவ்விதழின் விலை அரையணாவாகத் தான் இருந்தது. சாதாரணத் தாளில், ரோஸ் நிறக் காகித அட்டையுடன் அது வெளிவந்து கொண்டிருந்தது.[2] திரையுலகச் செய்திகள், தமிழ்-இந்தி ஆங்கிலப் படங்கள் பற்றிய தகவல்கள், விமர்சனங்கள், கேள்வி பதில்கள் போன்றவை இடம் பெற்றிருந்தன. இப் பத்திரிகையில் 1943 இல் வல்லிக்கண்ணன் ஒன்பது மாதங்களுக்கும் மேல் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருந்தார்.[2] இப்பத்திரிகையில், திரைப்பட வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற இளங்கோவன் (ம.க.தணிகாசலம்), கவி ச. து. சு. யோகியார், பாரதிதாசன்,[2] மற்றும் விபுலாநந்த அடிகள், திரு. வி. க. முதலியோரும் எழுதினர். கண்ணதாசனின் கவிதையும் இதில்தான் முதன் முதலாகப் பிரசுரமானது. இப்பத்திரிகை 1947 வரை வெளிவந்தது.[1]

திரையுலகில்[தொகு]

1936இல் வெளியான "இராஜா தேசிங்கு" என்ற திரைப்படத்திற்கு இவர் முதன் முதலில் கதை-வசனம் எழுதினார். சி.கண்ணன் பிள்ளை தயாரிப்பில் தண்டபாணி தேசிகர் முதன் முதலாக நடித்து வெளிவந்த "திருமழிசை ஆழ்வார்" (1948) திரைப்படத்துக்குக் கதை-வசனம் எழுதி, டி. எஸ். கோட்னீ உடன் இணை இயக்குநராகவும் பணியாற்றினார்.[1] காளமேகம் என்ற திரைப்படத்திலும் இவர் பணியாற்றினார்.[2]

அரசியலில்[தொகு]

இந்திய விடுதலைக்குப்பின் செட்டியார் இரு தடவைகள் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்தார்.[1]

எழுதிய நூல்கள்[தொகு]

  • சிறுவர் விருந்து
  • செந்தமிழ்ச் செல்வி
  • பெஞ்சமின் பிராங்க்ளின் வாழ்க்கை வரலாறு
  • இந்தியப் பெரியார்
  • அறிவுலக வீரர்
  • அறிஞர் ஆர்.கே.எஸ்.
  • தியாக உள்ளம் திருவருள்
  • அயலவர் கண்ட இந்தியா
  • காப்பியக் காட்சிகள்
  • அன்னை வாசகம்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 அ.மு.அபுல் அமீன் (2011). ""சினிமா உலகம்" - பி.எஸ் (பி.எஸ்.பக்கிரிசாமி செட்டியார்)". dinamani.com. தினமணி. Archived from the original on 2022-03-16. பார்க்கப்பட்ட நாள் 25-10-2020. {{cite web}}: Check date values in: |access-date= (help)CS1 maint: unfit URL (link)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 வல்லிக்கண்ணன் (ஆகத்து 2001). வாழ்க்கைச் சுவடுகள். பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._செட்டியார்&oldid=3529371" இலிருந்து மீள்விக்கப்பட்டது