பானு (தமிழ்ப் போராளி)
பிரிகேடியர் பானு அல்லது பானு என்று அழைக்கப்படும் சிவநாதன் சோமசேகரன்[1][2] (இறப்பு 18. மே. 2009) என்பவர் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவர். இவர் இரண்டாவது ஆனையிறவுச் சமரில் விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படைப்பிரிவை வழிநடத்தினார். சமருக்குப் பிறகு 2000 ஆம் ஆண்டில் ஆனையிறவுத் தளத்தில் விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றினார். மேலும் இவர் குட்டி ஸ்ரீ மோட்டார் படைப்பிரிவின் தளபதியாகவும் இருந்தார்.
2009-ஆம் ஆண்டு சோமசேகரன் இறந்தார்.[3]
வாழ்க்கை
[தொகு]சிவநாதன் சோமசேகரன் இலங்கை, யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். காங்கேசன்துறை சீமைக்காரைத் தொழிற்சாலையில் வேலைபார்த்துவந்த நிலையில் 1983 கறுப்பு யூலை கலவரத்தைக் கண்டு கொதித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார். இந்தியாவில் விடுதலைப் புலிகளின் இரண்டாவது பாசறையில் போர்ப் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்த பின்னர் மன்னார் மாவட்ட தளபதி லெப் கர்னல் விக்டரின் குழுவில் இணைக்கப்பட்டார். விடுதலைப் புலிகளின் பல தாக்குதல் நடவடிக்கைளில் பானு ஈடுபட்டார். ஒருகட்டத்தில் மன்னார் மாவட்ட தளபதியாகப் பானு உயர்ந்தார்.[4]
1990 சனவரி முதல் நாளன்று புளொட் குழுவினருடன் நடந்த மோதலில் பானு படுகாயம் அடைந்தார். இந்தியா வந்து மருத்துவச்சிகிச்சை பெற்று உடல் நலம் பெற்று மீண்டும் இலங்கை திரும்பிய பானு யாழ் மாவட்டத் தளபதியாக நியமிக்கப்பட்டார். சிங்களப் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணக் கோட்டையை 1990 ஆண்டு விடுதலைப் புலிகள் முற்றுகை இட்டனர். இந்த தாக்குதலைப் பானு வழிநடத்தினார். இறுதியில் 1990 செப்டம்பர் 26 அன்று கோட்டை விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்தது. பிரபாகரனின் ஆணைப்படி யாழ் கோட்டையில் விடுதலைப் புலிகளின் கொடியைப் பானு ஏற்றினார்.[4]
பூநகரி படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகளால் 1991 ஆம் ஆண்டு தவளைப் பாய்ச்சல் என்ற பெயரிலான தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இச்சமரில் பானு சிறப்பாகச் செயலாற்றினார். இதைத் தொடர்ந்து பானு விடுதலைப் புலிகளின் படைத்துறை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். மண்டைதீவு படைத்தளத்தின் மீது 1995, மே, 28 அன்று கடற் புலிகளால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பானு கட்டளைத் தளபதியாகச் செயல்பட்டார். இலங்கைப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஜெயசிக்குறு தாக்குதல் நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் எதிர் சமரில் ஈடுபட்டபோது கிட்டு பீரங்கிப்படையணியின் பொறுப்பாளராகப் பானு செயல்பட்டார். ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் போது கட்டளைத் தளபதியாகப் பானு செயலாற்றினார். ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் ஆனையிறவு தளத்தை மீட்டு 2000 ஏப்ரல் 2ஆம் நாள் கடற்படைத் தளத்தில் விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றும் வாய்ப்பை பானு பெற்றார்.[4]
பல சமர்களில் ஈடுபட்ட பானு 18. மே. 2009 அன்று கொல்லப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The taking of Elephant Pass". HinduOnNet. 2000-05-13 இம் மூலத்தில் இருந்து 2008-09-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080917171521/http://www.hinduonnet.com/fline/fl1710/17100100.htm.
- ↑ "What happened to Colonel Bhanu?". AsianTribune. 2005-10-11. http://www.asiantribune.com/what-happened-colonel-bhanu.
- ↑ Fuard, Asif (24 May 2009). "The end of Eelam War IV and the end of a bloody era". The Sunday Times. https://www.sundaytimes.lk/090524/News/sundaytimesnews_24.html.
- ↑ 4.0 4.1 4.2 இறுதி வரை போராடிய பிரிகேடியர் வீரர் பானு, மார்ச் 27, 2018