உள்ளடக்கத்துக்குச் செல்

நவ துர்கைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவ துர்கைகள்
செல்வம், கல்வி, வீர அதிபதி
இடம்கைலாயம்
மந்திரம்நவ துர்கா த்யான மந்திரம்
ஆயுதம்திரிசூலம்
துணைசிவன்

நவதுர்க்கை (தேவநாகரி:नवदुर्गा) என்பது துர்க்கா தேவியின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும். சமசுகிருதத்தில் 'நவ' என்றால் ஒன்பது என பொருள்படும். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன. சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என அன்னை ஒன்பது வடிவம் கொண்டிருக்கிறாள். இந்த ஒன்பது வடிவங்களுக்கும் வட இந்தியாவில் நவராத்திரி நாட்களில் பூஜை செய்வர். இந்த ஒன்பது நாட்களும் அன்னையை முறையாக பூஜை செய்தால் அவள் அனைத்து நலன்களும் அள்ளித் தருவாள் என்பது ஐதீகம்.

இதுவே நவதுர்க்கா தியான சுலோகம் ஆகும்

சைலபுத்ரி

[தொகு]
அன்னை சைலபுத்ரி

ஒன்பது வடிவங்களில் அன்னையின் முதல் வடிவம் சைலபுத்ரி ஆகும். இவளை நவராத்திரியின் முதல் நாளில் வழிபடுகின்றனர். 'சைலபுத்ரி' என்றால் மலைமகள் என பொருள்படும். மலை அரசன் இமவானின் மகளாக இருப்பதாலும் அன்னைக்கு இவ்வாறு ஒரு பெயர் உண்டு. சதி, பார்வதி, பவானி என இவளுக்கு பெயர்கள் உள்ளன. ஹிமவானின் மகளாக உள்ளதால் ஹேமாவதி என்ற பெயரும் இவளுக்கு உண்டு. இவளின் முன் அவதாரத்தில் இவள் தட்சனின் மகளாக பிறந்ததால் 'தாட்சாயினி' என்றும் கூறுவர். இவளே பார்வதியாகப் பிறந்து சிவனைத் திருமணம் செய்து கொண்டாள்.

இவள் ஒன்பது சக்ரங்களில் முதல் சக்கரம் மூலாதாரமாக இருக்கிறாள். யோகிகள் தங்களுடைய யோக சாதனைகளை இவளை வணங்கியே துவங்குவர். அதனால் இவளே முதல் சக்தியாகப் போற்றப்படுகிறாள். இவளின் வாகனம் நந்தி (காளை). இவளின் ஆயுதம் சூலம் ஆகும்.

இவளுக்கான தியான மந்திரம்:

"விருஷபம் (நந்தியின்) மேல் ஏரி வருபவளும், சூலத்தை ஆயுதமாக கொண்டவளும், மூன்றாம் பிறையைத் தன்னுடைய கிரீடமாகக் கொண்டவளும், பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரும் யஷஷ்வின்யாம் ஷைல புத்ரி தேவியை வணங்குகின்றேன்"

சைல புத்ரி கோவில்கள்: A-40, மர்ஹின காட், உத்தர பிரதேசம், இந்தியா

பிரம்மச்சாரிணி

[தொகு]
மாதா பிரம்மச்சாரிணி

நவராத்திரியின் இரண்டாம் நாளில் அன்னை பிரம்மச்சாரிணியாக வணங்கப்படுகிறாள். 'பிரம்ம' என்றால் தபஸ் என்று பொருள். பிரம்மச்சாரிணி என்றால் 'தப சாரிணி' என பொருள்படும். இவள் மிகவும் எளிமையாக காட்சி தருபவள். இவளின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படும். அன்னைக்கு வாகனம் ஏதும் இல்லை. பூமியில் நடப்பவளாக இவள் காட்சிபடுத்தப்படுகிறாள்.

இவள் இமாலயத்தில் பிறந்தாள் என கூறுவர். சிவபெருமானை திருமணம் செய்யும் பொருட்டு பல ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தாள். இவளின் தவ உகரம் மூன்று உலகங்களிலும் எதிரொலித்தது. இறுதியில் சிவன் இவளை மணம் புரிந்தார்.

பிரம்மச்சாரிணி நன்றி, அறிவு, ஞானம் ஆகியவற்றின் வடிவானவள். தன்னை வணங்குவோர்க்கு மிகுந்த பொறுமையைத் தர வல்லவள். அவர்கள் தங்களுடைய துன்பமான நேரத்திலும் மணம் தளராது இருக்க அருள்பவள். இவள் அருள் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரவல்லது.

உடல் சக்ரங்களில் இவள் 'ஸ்வாதிஷ்தானத்தில்' இருப்பவள். இரண்டாம் நாள் யோகிகள் இவளின் அனுக்ராகதால் இந்த சக்ரத்தை அடைவர்.

இவளுக்கான மந்திரம் :

"கமண்டலமும், தண்டமும் தன் தாமரைக் கரத்தில் ஏந்தியவளும் பிரம்மஸ்வரூபம் அடையும் எண்ணம் கொண்டவளுமாம் அன்னை பிரம்மச்சாரிணி எனக்கு அருள வேண்டும்."

இவளுக்கான கோவில்கள்: இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் அன்னை பிரம்மச்சாரிணியாக அருள் செய்கிறாள்.

சந்திரகாண்டா

[தொகு]
தேவி சந்திரகாண்டா

நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளில் துர்க்கையை சந்திரகாண்டா என ஆராதனை செய்கின்றனர். இதுவே அன்னையின் மூன்றாம் வடிவம் ஆகும். இவள் நீதியை நிலைநாட்டி சந்திர பிறையை அணிந்தவள். 'சந்திர' என்றால் நிலவு. 'காண்டா' என்றால் மணி என பொருள். சந்திர பிறை இவள் முன் நெற்றியில் மணி போல் இருப்பதால் இவளை 'சந்திர காண்டா' என அழைக்கின்றனர்.

இவள் மூன்று கண் கொண்டு பத்து கரங்களுடன் காட்சி தருபவள். இவளின் வாகனம் சிங்கம் ஆகும். இவளின் இரு கரங்கள் பக்தருக்கு அருள் செய்யும் விதமாக உள்ளன. இவளின் பார்வை பக்தரின் துன்பத்தை போக்கி இன்பம் தர வல்லது. சந்திர காண்டா தேவி போருக்கு தயாரான கோலத்தில் காட்சி தருபவள். அதனால் பக்தரின் துன் பத்தையும் விரைந்து தீர்த்து வைப்பாள்

இவள் உடல் சக்கரங்களில் 'மணிபூர' சக்ரத்தில் இருப்பவள். நவராத்ரியின் மூன்றாம் நாள் யோக சாதனை செய்வோர் மணிபூரா சக்ரத்தை தேவியின் அருளோடு அடைவர். இதை அடைந்தோர் தெய்வீக சப்தத்தை கேட்பர். மணிபூர சக்ரத்தில் அவர்கள் சிறிது கவனமாக இருப்பர். அதனால் சந்திர காண்டா தேவியின் அருள் அவசியமாகும்.

அன்னையின் வாகனமாம் சிங்கத்தை போல் இவளை வழிபடுவோர் வீரம் பெறுவார்கள். இவளின் அருள் கிட்டினால் பாவம் அழியும். இவள் கரத்தில் உள்ள மணியின் ஓசை பக்தரை இரட்சிக்கும். இவள் சர்வ சுபிட்சத்தையும் தந்து அருள் செய்வாள் என நம்புகின்றனர்.

இவளுக்கான தியான மந்திரம்:

"சிம்மத்தின் மீது ஏறி வருபவளும், சந்திரகாண்டா என்னும் பெயர் கொண்டவளும், கடும் கோபமும் ஆக்ரோஷமும் கொண்டவளுமாகிய தேவி சந்திரகாண்டா என் மீது கருணை பொழிய வேண்டும்”

இவளின் கோவில்கள்: சித்ரகந்த குல்லி, வாரணாசி, உத்தரப்பிரதேசம்

கூஷ்மாண்டா

[தொகு]
குஷ்மாண்டா தேவி

நவராத்திரி விழாவின் நான்காம் நாளாம் சதுர்த்தி அன்று அன்னை 'கூஷ்மாண்டா' என்ற வடிவம் கொள்கிறாள். இப்பெயர் மூன்று பகுதிகளை கொண்டது. கு, உஷ்மா, ஆண்டா என்ற இம்மூன்றும் முறையே சிறிய, வெப்பமான, உருண்டை என்ற பொருள் கொண்டது. இதை சேர்த்தால் சிறிய வெப்பமான உருண்டையான உலகை பொருளாக கொள்ளலாம். இதனால் குஷ்மாண்டா என்றால் உலகை படைத்தவள் என்ற பொருள் வரும். அன்னை ஆதிசக்தி துர்கா தேவியின் படைத்தல் உருவம் கூஷ்மாண்டா ஆகும்.

முன்னொரு காலம் பிரளயம் ஏற்பட்டு உலகெல்லாம் அழிந்து போயிற்று. எங்கும் இருள் சூழ்ந்தது. தேவி கூஷ்மாண்டா அப்போது சிரித்தாள். அதனால் இருள் விலகி ஒளி பிறந்தது என புராணங்கள் கூறுகின்றன. அதனால் இவளே படைப்பின் சக்தி என கூறுவர் .இவள் சூர்ய மண்டலத்தை இயக்குபவள் என்று கூறுவர்.

இவள் அஷ்டபுஜம் (எட்டுகரம்) கொண்டவள். இவளின் வாகனம் சிம்மம் ஆகும். இந்த சிம்மம் தர்மத்தின் வடிவம் ஆகும். இவளின் எட்டுகரங்களில் முறையே பாசம், அங்குசம், வில், சூலம் இருக்கும். இவளின் எட்டாவது கரத்தில் கலசம் உண்டு. இக்கலசம் அஷ்ட சித்தியையும், நவ நிதியையும் பக்தர்களுக்கு தர வல்லது. வட மொழியில் கூஷ்மாண்டம் என்றால் 'பூசணிக்காய்' என்று ஒரு பொருளும் உண்டு. பூசணிக்காய் போன்ற தியாகத்தால் அன்னை மகிழ்வதால் அவளுக்கு இப்பெயர் வந்தது என கூறுவர்.

உடல் சக்ரங்களில் இவள் 'அனாஹத' சக்ரத்தில் இருப்பவள். இந்நாளில் யோக சாதனை செய்வோர் இவள் அருள் கொண்டு இந்த சக்ரத்தை அடைவர். இதை அடைந்தோர் உடல், மன வலிமை பெறுவர்.

கூஷ்மாண்டா தேவியின் அருள் பாவத்தை அழித்து, இன்பத்தை தர வல்லது. இவளுக்கான தியான மந்திரம்:

"தன் தாமரை போன்ற கரங்களில் இரு கலசம் ஏந்தியவளும், தன் சிரிப்பால் உலகை சிருஷ்டித்து அதை பரிபாலனம் செய்பவளாகிய தேவி குஷ்மாண்டா என் மீது கருணை பொழிவாளாக"

கூஷ்மாண்டா கோவில்கள்: கதம்பூர், கான்பூர் நகரம், உத்தர பிரதேசம்

ஸ்கந்த மாதா

[தொகு]
ஸ்ரீ ஸ்கந்த மாதா

நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாளாம் பஞ்சமி அன்று 'ஸ்கந்த மாதா' என்று துர்க்கையை வழிபடுகின்றனர். ஸ்கந்த என்ற சொல் முருகனை குறிக்கும். மாதா என்றால் அன்னை. முருகனின் தாயாக இருப்பதால் ஸ்கந்த மாதா என்று இவளை கூறுவர். தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் பகையாக விளங்கிய தாரகாசுரனை (சூரபத்மனை) கொன்றவர் தேவசேனாபதியாகிய முருகன். அத்தகைய முருகனின் தாயான இவள் மிகவும் மதிக்கப் படுகிறாள்.

இவள் நான்கு கரங்களை கொண்டவள். இரண்டு கரங்களில் தாமரை மலரை கொண்டவள். ஒரு கரம் பக்தருக்கு ஆசி வழங்கும். இவளின் மடியில் ஸ்கந்தன் குழந்தை வடிவாக ஆறுமுகத்தோடு காட்சி தருவான். அன்னையை சிங்கம் தாங்கி நிற்கும். இவள் சில நேரங்களில் தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்பவளாக காட்சி தருவாள். அதனால் இவளை 'பத்மாசினி' என்றும் கூறுவர்.

இவளின் வடிவம் பக்தரை மெய்மறக்க செய்யும். இவள் தூய்மையின் வடிவானவள். இவளை வணங்குவோர் மனமும், ஆத்மாவும் அமைதி பெறும். அவர்கள் தன்னுடைய துக்கங்களை மறப்பர். வாழ்வில் இறை இன்பத்தை அனுபவிப்பர். இவளின் ஆசிகள் உண்மையான வேண்டுதல்களை நிறைவேற்றும். தன்னை நம்புவோரை இவள் என்றும் கைவிட மாட்டாள். இவளின் அருள் மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் என்று நம்புகின்றனர்.

இந்நாளில் யோகிகள் 'விசுத்தி' சக்கரத்தை அடைவர். விசுத்தி என்றால் கலப்படம் இல்லாதது, தூய்மையானது என பொருள் வரும். இவள் அருள் கொண்டு இந்த சக்ரத்தை அடைவோரின் மனம் தூய்மையான கருத்துக்களால் நிறையும். இவளை சரண் அடைந்தோரின் மனதில் இருந்து தூய்மையில்லாத கருத்துக்கள் வெளியேறி விடும்.

மற்ற எந்த தேவிகளுக்கும் இல்லாத சிறப்பு இவளுக்கு உண்டு. இவளை வழிபடும் போது நாம் முருகனையும் சேர்த்து வணங்குகிறோம். இவளின் தியான மந்திரம்

"தன் இருகரங்களில் தாமரை மலர் ஏந்தியவளும், சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பவளும், ஸ்கந்தனின் தாயாகவும் இருக்கும் தேவி துர்க்கையை நான் வணங்குகின்றேன்."

காத்யாயனி

[தொகு]
மாதா காத்யாயனி

நவராத்திரி விழாவின் ஆறாம் நாளில் துர்க்கையை காத்யாயனி என்று ஆராதனை செய்வர். முன்னொரு காலத்தில் காதா என்ற முனிவருக்கு காதயா என்ற மகன் இருந்தான். கதா முனி கடும் தவம் செய்து துர்கையை மகளாக பெற்றார். அதனால் இவளுக்கு 'காத்யாயனி' என்ற பெயர் வந்தது. இவளையே மகிஷாசுர மர்த்தினி என்று கூறுவர்.

காத்யாயினியை மக்கள் மகள் வடிவாக வணங்குகின்றனர். இவளுக்கு அன்பு அதிகம். ஆனால் இவள் தீய சக்திகளை வேரோடு அழிப்பவள். இவள் பாவம் செய்பவரையும், அரக்க சக்திகளையும் கொல்பவள். இவளின் கருணை மக்களின் துயர்களை ஓடச் செய்யும். இவள் நான்கு கரம் கொண்டவள். ஒரு கரம் தாமரை மலர் ஏந்தியும், மறு கரம் ஒளி வீசும் வாள் ஏந்தி காணப்படும். இரண்டு கைகள் பக்தருக்கு அபயம் தரும் விதத்தில் உள்ளன.

யோகிகள் இவள் அருளை துணை கொண்டு ஆறாம் சக்ரமான 'ஆக்ன்யா' சக்ரத்தை அடைவர். இந்த சக்ரத்தை முக்கண் சக்கரம் என்று கூறுவர். இவளின் தியான மந்திரம்:

ஒளி வீசும் ஹசூஜ் (வாள்) கொண்டவளும், கம்பீரமான சிம்மத்தில் ஏறி தீய சக்திகளை அழிப்பவளாம் அன்னை காத்யாயனி எனக்கு அருள் செய்ய வேண்டும்.

காத்யாயனி கோவில்கள்:

  1. சட்டர்பூர், டெல்லி
  2. காத்யாயனி அம்மன் கோவில், தஞ்சை, தமிழ்நாடு

காளராத்திரி

[தொகு]
அன்னை காளராத்திரி

நவராத்திரி துர்கா பூஜையின் ஏழாம் நாளில் காளராத்திரியை வழிபடுகின்றனர். துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில் மிகவும் பயங்கரமானது காளராத்திரி ரூபம் ஆகும். காள என்றால் நேரம், மரணம், என்றும் ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள்படும். காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும்.

துர்க்கையின் வடிவம் எதிரிக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடியது. இவளின் உடல் மழை மேகம் போல் கருமை நிறம் கொண்டது. இவள் நான்கு கரம் கொண்டவள். ஒரு கரத்தில் வஜ்ராயுதமும், மறுகரத்தில் வாளும் இருக்கும். மற்ற இரு கரங்கள் பக்தருக்கு அபயம் தரும். அன்னை கழுதை வாகனத்தில் ஏறி வருபவள். இவளின் பார்வை பட்டாலே பாவம் தொலையும் என்றும், பேய் பிசாசுகள் பயந்து ஓடும் என்றும் நம்புகின்றனர். பக்தருக்கு இவளின் உருவம் பயம் தராது. பக்தருக்கு நன்மை செய்வதால் இவளை 'சுபங்கரி' என்பர்.

யோகிகள் இவளின் அருள் கொண்டு ஏழாம் சக்ரமாம் 'சகஸ்ராகாரத்தை' அடைவர். கருணை உடையவளான இவளின் தியான மந்திரம்:

"நீளமான நாக்கு கொண்டு, கழுதை மீது ஏறி வருபவளும், ஆக்ரோஷமாக இருப்பவளும், பல வண்ணங்களில் ஆபரணம் அணிந்து இருப்பவளுமாகிய பயங்கரியாம் அன்னை காளராத்திரி என்னுடைய அஞ்ஞானம் என்னும் இருளை போக்கி அருள வேண்டும்"

காளராத்திரி கோவில்கள்:

  1. காளராத்திரி துர்கா ஆலயம், வாரணாசி, உத்தரப் பிரதேசம்

மகாகௌரி

[தொகு]
மகா கௌரி

நவராத்திரியின் எட்டாம் நாளாம் துர்காஷ்டமி நாளில் துர்க்கையை 'மகாகௌரி' என வழிபடுகின்றனர். மகா என்றால் பெரிய என்று பொருள். கௌரி என்றால் தூய்மையான எனப் பொருள். இவள் மிகுந்த வெண்மையாக இருப்பதால் மகா கௌரி எனப்படுகிறாள். முன்னொரு காலத்தில் பார்வதி சிவனை நோக்கி தவம் செய்த போது அவள் உடல் மண் சூழ்ந்து கருமையானது. அவளின் தவத்தால் மகிழ்ந்த ஈசன் அவளை மணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். அதற்கு முன் தேவியை அவர் கங்கை நீரால் நீராட்டினார். அதனால் தேவியின் உடல் பால் போல வெண்மையானது. இவளே மகாகௌரி.

இவள் நான்கு கரம் கொண்டவள். ஒரு கரம் சூலத்தையும், மறு கரம் மணியையும் தங்கி நிற்கும். மற்ற இரு கரங்கள் பக்தருக்கு அபயம் தரும் வகையில் உள்ளன. இவளின் வாகனம் வெண்மையான காளை ஆகும். இவளின் அருள் கிட்டினால் நம் வாழ்வு வசந்தமாகும். இவள் பக்தர்களின் பிரார்த்தனைகளை விரைவில் நிறைவேற்றுவாள் என நம்புகின்றனர்.

இவள் உடல் சக்கரங்களில் 'ஸ்வாதிஷ்டானமாய்' இருப்பவள். யோகிகள் இவளின் ஆசி கொண்டு இந்த சக்கரத்தை அடைவர். துர்க்கையின் வாகனம், ஆபரணம் என அனைத்தும் வெண்மையாக இருக்கும். இவளின் தியான மந்திரம்:

"வெண்மையான காளையின் மீது ஏறி வருபவளும், தூய்மையான வெண்ணிற ஆடை அணிந்தவளும், தூய்மையானவளும், மகாதேவரின் நாயகியாம் அன்னை மகா கௌரி எனக்கு அனைத்து நலன்களையும், வளங்களையும் தர பிரார்த்தனை செய்கிறேன்"

மகாகௌரி கோவில்கள்: கண்க்ஹல், ஹரித்வார், உத்தரகாண்ட் மாநிலம்

சித்திதாத்ரி

[தொகு]
அன்னை சித்திதாத்ரி

நவராத்திரி விழாவின் இறுதி நாளாம் மகா நவமி அன்று 'சித்தி தாத்ரி'யை ஆராதனை செய்வர். சித்தி என்றால் சக்தி என்றும் தாத்ரி என்றால் தருபவள் என்றும் பொருள். சித்திதாத்ரி என்றால் பக்தருக்கு அனைத்து சித்திகளையும் தருபவள் என்று பொருள். மார்கண்டேய புராணத்தின்படி எட்டு விதமான சித்திகள் -அணிமா, மகிமா, கரிமா, லஹிமா, ப்ராப்தி, பிரகாமியம், வாசித்வம், ஈசத்வம் என எட்டு விதமான சித்திகளையும் பக்தருக்கு தருபவள் இவள்.

சித்திதாத்ரி தாமரை மலரில் அமர்ந்து இருப்பவள். நான்கு கரம் கொண்டு இருக்கும் இவள் இடது கரத்தில் கதை, சக்ரம் கொண்டும், வலக் கரத்தில் தாமரை, சங்கு ஏந்தியவள். சித்திதாத்ரியின் வாகனம் சிங்கம். தேவி புராணம் சிவன் இவளை வழிபாடு செய்து அனைத்து சித்திகளையும் பெற்று 'அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என கூறுகிறது.

இவளின் அருள் யோகிகளுக்கு அனைத்து சித்திகளையும் தரும். நவராத்ரியின் எட்டு நாட்களில் மற்ற அனைத்து சித்திகளையும் அடைந்த அவர்கள் இவள் அருளால் பேரானந்தம் என்னும் பேற்றை எய்துவர்.

நவராத்திரியின் மற்ற எட்டு நாட்களில் துர்கைகளை முறைப்படி பூஜை செய்யும் பக்தன் இறுதி நாளில் சித்திதாத்ரி பூஜை செய்வான். இவளை வழிபட்டால் மனதில் உள்ள ஐயம் நீங்கும். எல்லாமும் ஒரு மகா சக்தியில் இருந்து தோன்றியதே என்ற தத்துவத்தை உணர வைப்பவள் இவள். இவளை வழிபடுவோர் பேரானந்தத்தை அடைவர். அவர்களுக்கு தேவை என்ற ஒன்று இருக்காது. அவன் அம்பிகையின் கருணை மழையில் நனைவான். அவனுக்கு வேறு எதுவும் தேவைப்படாது.

சித்திதாத்ரி தேவியை எந்நேரமும் மனிதர், தேவர், முனிவர், யட்சர், கிங்கரர் வழிபடுவர். இவள் அருள் மோட்சத்தின் பாதையை நமக்கு காட்டும். இவளுக்கான தியான மந்திரம்.

"சித்தர், கந்தர்வர், தேவர், முனிவர், மனிதர், யட்சர் என அனைவராலும் வணங்கப்படுபவளும், என்றும் வெற்றி ஒன்றையே பெறும் தேவி சித்திதாத்ரி என்னுடைய அனைத்து செயல்களிலும் ஜெயத்தை தர வேண்டும்"

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் சில துர்க்கைகள்

[தொகு]

சிவ புராணத்தில் தட்ச யாகத்தை அழிக்க வீரபத்திரருடன் பத்திரகாளி, பத்ரை, த்வரிதா, முண்டமர்த்தினி, மஹாகாளி, காத்யாயனி, வைஷ்ணவி, ஈசானி மற்றும் சாமுண்டி ஆகியோர் வந்ததாக குறிப்பிடப்படுகிறது. இவர்கள் ஒன்பது பேரும் நவ துர்க்கைகளாகவே குறிப்பிடப்படுகின்றனர்.

அதோடு மட்டுமின்றி, அக்னி புராணத்தில் உக்ரசண்டா, சண்டாவதி, பிரச்சண்டா, சண்டரூபை, சண்டநாயீகா, ருத்ரசண்டா, அதிசண்டிகை, சண்டா மற்றும் சண்டோக்ரா என்ற நவ துர்க்கைகளும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ_துர்கைகள்&oldid=3606092" இலிருந்து மீள்விக்கப்பட்டது