திருமணம் தொடர்பான குற்றங்கள்
இந்தியத் தண்டனைச் சட்டத்தில் திருமணம் தொடர்பான குற்றங்கள் (Offences relating to marriages in Indian Penal Code) சமுதாயம் நிலைத்திருக்க திருமணம் என்னும் முறை நன்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் குறிக்கோளுடன் இயற்றப்பட்டுள்ளது. திருமணத்தில் இடர் ஏற்பட்டால் குடும்பத்தில் அமைதி கெடுவது மட்டுமல்லாமல் சமுதாயத்தின் நலனும் பாதிக்கப்படும். ஆகவே சட்டம் இரண்டு வழிகளிலும் உரிமையியல் (Civil) வழியில் தீர்வைக் கொடுப்பதன் மூலமும் குற்றவியல் (Criminal) வழியில் தண்டனையைக் கொடுப்பதன் மூலமும் திருமண அமைப்பைப் பாதுகாக்கிறது. இந்திய தண்டனைச் சட்டம் தமது 20 வது பாகத்தில் இத்தகைய குற்றங்களைப் பற்றி விவரிக்கின்றது.[1]
குற்றங்கள்
[தொகு]- போலி அல்லது செல்லுபடியாகத திருமணங்கள் (பிரிவுகள் 493,496) [2]
- இருமணம் (பிரிவுகள் 494,495)
- பிறன்மனை உறவு (Adultery) (பிரிவு 497)
- குற்ற எண்ணத்துடன் திருமணமான பெண்ணைக் கடத்துதல் (பிரிவு 498)
- கணவர் அல்லது அவர் உறவினர்களால் கொடுமைப்படுத்துதல் (Cruelty by husband or relatives of husband) (பிரிவு 498 A)
போலி அல்லது செல்லுபடியாகத திருமணங்கள் (பிரிவு 438/22
[தொகு])
[தொகு]சட்டப்படி திருமணம் ஆனதாக நம்பும்படி வஞ்சித்து ஆடவர் ஒருவரால் செய்யப்படு உடனுரைவு அல்லது பாலியல் உடலுறவு குற்றமாகும்.
குற்றத்தின் உட் கூறுகளும் தண்டனையும்
[தொகு]- இத்திருமணம் தம்மைச் சட்டப்படி திருமணம் செய்தவராக ஆக்காது என்று தெரிந்திருந்தும் திருமணம் செய்தல்.
- ஏமாற்றும் எண்ணத்துடன் திருமணம் செய்தவர் செயல்பட்டிருத்தல்
- உடனுறைதல் அல்லது பாலியல் உடலுறவு கொள்ளுதல்
- இதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டணையும் அபராதமும் விதிக்கப்படும்.
இருமணம்
[தொகு]கணவன் அல்லது மனைவி இருக்கும் பொழுது இவர்களில் ஒருவர் வேறு திருமணம் செய்து கொண்டால் அத்திருமணம் வெற்று நிலையதாகிவிடும் (void) .இக்குற்றத்தைப் புரிபவருக்கு ஏழாண்டுகள் சிறை தண்டணையும் அபராதமும் விதிக்கப்படும். இதற்கு இரண்டு விதிவிலக்குகள் உள்ளன.
- தகுதியுடைய நீதிமன்றம் முதல் திருமணம் வெற்றுநிலையானது (void), செல்லத்தக்கது அல்ல என்று தீர்மானித்திருக்க வேண்டும்
- முன்னாள் கணவனோ மனைவியோ உயிருடன் இருப்பதற்கு தடயமில்லாமல் ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக காணாமல் போயிருக்க வேண்டும். இவ்வாறு ஒருவர் காணமால் போய் விட்டார் என்னும் தகவல் திருமண பந்தத்தில் ஈடுபடும் மற்றவருக்குத் தெரியபடுத்தியிருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் இருமணம் செய்து கொள்ளக் கூடாது என்னும் பிரிவு சென்னை மற்றும் மும்பை மாகாணங்கள் தவிர இந்தியாவின் மற்ற இடங்களுக்கு பொருந்தாமல் இருந்தது. மற்ற இடங்களில் இருமணம் செய்வது குற்றமாகக் கருதப்படவில்லை. இந்த இரு மாகாணங்களிலும் இந்து இருமணத் தடைச்சட்டப் பிரிவுகளுக்கு உட்பட்டு ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே ஒரு இந்து இருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று, 1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் படி எந்த இந்துவும் இருமணம் புரியக் கூடாது. இந்த இருமணத் தடை இந்துக்கள், புத்தமதத்தினர், சைனமதத்தினர் (Jains) சீக்கியர்கள் முதலியோருக்கும் பொருந்தும். முகமதியா்களுக்குப் பொருந்தாது. முதல் திருமணம் சட்டப்படியான திருமணமாக இல்லாமலிருந்தால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம்.
கணவன் மனைவி என்னும் சொற்களுக்குப் பொருள் சட்டப்படி மட்டுமே கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு ஆடவர் A என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுகிறார். பின்பு இருமணமாக A உயிருடனிருக்கும் பொழுது B ஐயும் திருமணம் செய்கிறார் மறுபடியும் C ஐயும் மணம் புரிகிறார். இந்த நபர் A உயிருடன் இருக்கும் பொழுது B ஐயும் C ஐயும் திருமணம் செய்தது இருமணக் குற்றம் புரிந்தது ஆகும். ஒரு வேளை C ஐத் திருமணம் புரிவதற்கு முன் A இறந்துவிட்டிருந்தால் C ஐத் திருமணம் செய்தது இருமணக் குற்றமாகாது ஏனென்றால் ‘B’ அவருக்கு சட்டப்படி மனைவி ஆகவில்லை.
மதமாற்றத்தின் விளைவு
[தொகு]மதமாற்றத்தினால் பல சிக்கல்கள் இருமணம் தவிர்ப்புச் சட்டத்தில் எழுகின்றன. திருமணமானவர் மதம் மாறிக் கொண்டு மறுமணம் புரிவதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன.
முடிவுற்ற வழக்குகளிலிருந்து கீழ்க்கண்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
- மனைவி இந்துவாக இருந்து கணவன் மதம் மாறிவிட்டாா் என்று கூறி மனைவி மறுமணம் செய்வதைக் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்துக்கள் சட்டம் ஒரு பெண் பல ஆண்களைத் திருமணம் செய்வதை அனுமதிக்காது.
- மனைவி முகமதியாராக இருந்து கணவன் மதம் மாறினால் அந்த திருமண பந்தம் சட்டப்படி கலைந்துவிடும். ஆதலால் அந்த முகமதியப் பெண் மறுமணம் செய்து கொள்ளலாம். இந்நேர்வுகளில் முகமதியர்கள் தனிச் சட்டம் முன்னுரிமை பெறும்.
- மனைவி கிருத்துவராக இருந்து கணவன் மதம் மாறினால், மனைவி மறுமணம் செய்து கொள்ளக் கூடாது. கிருத்துவக் கோட்பாட்டின்படி ஒரு ஆணும் பெண்ணும் மனமுவந்து ஒன்றாக இணைவது தான் திருமணம்.
மேலும் ஒரு கிருத்துவ ஆண் முகமதிய மதத்திற்கு மாறுவதால், தம் முதல் மனைவி உயிருடனிருக்கும் பொழுது மறுமணம் புரியக்கூடாது. இந்திய தண்டனைச் சட்டத்தை இயற்றியவர்கள் இருமணம் புரியும் பெண்களுக்குத் தண்டனை வழங்குவதை விதித்திருந்தாலும் பெண்களை ஏமாற்றும் ஆண்களைக் கடுமையாக தண்டிக்கவே விழைந்தனர்.
திருமணத்திற்கான சான்று
[தொகு]இருமணக் குற்றம் புரிவதற்கான வழக்குகளில், குற்றம் சாட்டுபவர் திருமணம் நடைபெற்றதற்கான சான்றுகளை அளித்து திருமணம் நடைபெற்றது என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிருபிக்க வேண்டும்.
பிறன்மனை உறவு (Adultery)
[தொகு]ஒருவர் இக்குற்றம் புரிந்தார் என்பதை நிருபிக்க கீழ்கண்டவைகள் அடங்கிருக்க வேண்டும்
- ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டிருக்க வேண்டும்
- அப்பெண் வெறொருவரின் மனைவி என்று தெரிந்திருக்க வேண்டும்
- அப்பெண்ணின் கணவரின் சம்மதம் இருக்கக் கூடாது.
- அப்படிப்பட்ட உடலுறவு வன்புணா்ச்சிக் குற்றமாக இல்லாமல் இருக்க வேண்டும்
பிறன்மனை உறவு என்பது ஒரு ஆண் திருமணமான பெண்ணின் சம்மத்துடன் கணவனுக்கு தெரியமால் உடலுறவு கொள்ளுவதாகும். கணவரின் சம்மத்துடன் புரியும் தவறு குற்றமாகாது. ஆங்கிலச் சட்டப்படி பிறன்மனை உறவு என்பது குற்றவியல் சட்டமல்ல. அது உரிமையியல் வழக்காகும். தவறு இழைத்தவரின் கணவர் நட்ட ஈடுதான் கோர முடியும்.
தண்டனை
[தொகு]பிறன்மனை உறவு கொள்பவருக்கு ஜந்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். இத்தருணத்தில் மனைவி உடந்தைக் குற்றவாளியாக தண்டிப்பதற்கு உரியவராகமட்டார்.
குற்ற எண்ணத்துடன் திருமணமான பெண்ணைக் கடத்துதல் (criminal elopement seduction)
[தொகு]வேறுறொருவன் மனைவி என்று தெரிந்திருந்தும், அவள் கணவன் பொறுப்பிலிருந்து, வேறு ஒருவனுடன் கள்ள உறவு வைக்கலாம் என்ற எண்ணத்துடன் கடத்துவதோ அல்லது மறைத்து வைப்பதோ குற்றமாகும். இதற்கு இரண்டாண்டு சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.
கணவரோ அல்லது அவரது உறவினர்களோ பெண்ணைக் கொடுமைப்படுத்தல் (பிரிவு 498 A)
[தொகு]கணவரோ அவரது உறவினர்களே பெண்களைக் கொடுமைப்படுத்துவதையோ துன்பப்படுத்துவதையோ சட்டம் அனுமதிப்பதில்லை. அது குற்றமாகக் கருதி தண்டனை வழங்கப்படும் குற்றம் புரிந்த நபருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
கொடுமைப்படுத்துவது என்பது
- ஒரு பெண்ணை வேண்டும் என்றே தற்கொலை செய்யத் தூண்டுவதோ
அல்லது அப்பெண்ணின் மனநலம், உடல் நலத்திற்குத் தீங்கு விளைவித்தல் அல்லது வாழ்விற்கு தீங்கோ, அபாயமோ விளைவித்தல்.
- சட்ட விரோதமாக ஒரு பெண்ணிடமிருந்து சொத்தையோ அல்லது விலை மதிப்பற்ற பொருட்களை வாங்கும் நோக்கத்துடன் இருந்து, அதனை அப்பெண் மறுத்து தம் எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக அப்பெண்ணை துன்புறுத்துவது அல்லது தொல்லை கொடுப்பது ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ P S Athuthen Pillai, Criminal Law, N.M. Tripathi Private Limited (1998), ISBN 81-7118-069-8
- ↑ http://ncw.nic.in/acts/THEINDIANPENALCODE1860.pdf பரணிடப்பட்டது 2018-10-24 at the வந்தவழி இயந்திரம். பார்த்த நாள் 21-08-2016