தாகுர்காவ்ன் மாவட்டம்
தாகுர்காவ்ன் மாவட்டம் (Thakurgaon District) (வங்காள மொழி: ঠাকুরগাঁও জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ரங்க்பூர் கோட்டத்தில் உள்ளது. வடமேற்கு வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தாகுர்காவ்ன் நகரம் ஆகும்[1]
மாவட்ட எல்லைகள்
[தொகு]தாகுர்காவ்ன் மாவட்டத்தின் வடக்கில் பஞ்சகர் மாவட்டமும், தெற்கிலும், மேற்கிலும் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தெற்கு தினஜ்பூர் மாவட்டம் மற்றும் வடக்கு தினஜ்பூர் மாவட்டமும், கிழக்கில் பஞ்சகர் மாவட்டத்தின் ஒரு பகுதியும் எல்லையாகக் கொண்டுள்ளது. [2]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]1781.74 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தாகுர்காவ்ன் மாவட்டம் தாகுர்காவ்ன் நகராட்சி மன்றம், பீர்கஞ்ச் நகராட்சி மன்றம் மற்றும் ராணிகஞ்ச் நகராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.
இம்மாவட்டத்தின் நிர்வாக வசதிக்காக தாகுர்காவ்ன் சதர், ராணிஷோன்கோர், பலியாதங்கா, ஹரிப்பூர் மற்றும் பீர்கஞ்ச் என ஐந்து துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும் 51 உள்ளாட்சி ஒன்றியங்களும், 641 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 5100 ஆகும்.
வேளாண்மை
[தொகு]இம்மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மைத் தொழிலை ஆதாரமாகக் கொண்டுள்ளது. இங்கு தங்கோன், குலிக், நகர், திர்னொய், பத்ராஜ், உள்ளி, டிப்பா, ஜுலாய், சுர்மதி முதலிய ஆறுகள் பாய்வதா, நெல், கோதுமை, சணல், கரும்பு, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பருப்பு வகைகள், மா, பலா, பப்பாளி, தர்பூசணி பயிரிடப்படுகிறது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 2536 மில்லி மீட்டராகும். [3]
மக்கள் தொகையியல்
[தொகு]1781.74 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 13,90,042 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 7,01,281 ஆகவும், பெண்கள் 6,88,761 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 102 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 780 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 48.7 % ஆக உள்ளது.[4]இசுலாம் சமயம் மற்றும் வங்காள மொழியைப் பெரும்பாலான மக்கள் பயில்கின்றனர். இம்மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் முண்டா, போர்டா, சதல்,ஒரா, சோச், பலியா, இராஜ்வன்சி, ஹரி, புயன், காங்கு போன்ற மலைவாழ் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.
கல்வி
[தொகு]வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் [கிரேடு 1 – 5], ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட செகண்டரி பள்ளிகளும் [கிரேடு 6 – 10], இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் [கிரேடு 11 – 12], நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Abu Md. Iqbal Rumi Shah (2012). "Thakurgaon District". In Sirajul Islam and Ahmed A. Jamal (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- ↑ Thakurgaon District, Bangladesh
- ↑ Thakurgaon District, Bangladesh
- ↑ Community Report Thakurgaon Zila June 2012[தொடர்பிழந்த இணைப்பு]