சூரிய ஒளிமானி
சூரிய ஒளிமானி (sun photometer) என்பது எப்போதும் சூரியனை நோக்கியே இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ள ஒரு ஒளிமானியாகும். நவீன சூரிய ஒளிமானிகள், சூரியனை நோக்கித் தானியங்கியாகத் திரும்பும் அமைப்புடன், ஒளிக்காணி (photodetector), தரவு ஈட்டல் கருவிகள், மற்றும் நிறமாலைகளைப் பிரிக்கும் கருவிகளைக் கொண்டிருக்கும். இதில் அளக்கப்படும் அலகு "அலைமாலைக் கதிர்வீச்சு" (direct-sun radiance) ஆகும்.
சூரிய ஒளிமானியை புவியின் வளிமண்டலத்தில் பயன்படுத்தும் போது அளக்கப்படும் கதிர்வீச்சும், சூரியன் நேரடியாக வெளிவிடும் கதிர்வீச்சும் (புவிக்கப்பாலான சூரிய கதிர்வீச்சு), ஒரே அளவில் இருப்பதில்லை. ஏனெனில், புவியின் வளிமண்டலத்தால் உட்கவரப்பட்டும், சிதறிடிக்கப்பட்டும் வருவதால், சூரியப் பாயம் (solar flux) குறைகிறது. எனவே அளக்கப்படும் கதிர்வீச்சு சூரியப் பாயம் (radiant flux) என்பது சூரியன் நேரடியாக வெளிவிடும் கதிர்வீச்சும், புவியின் வளிமண்டலத்தால் ஏற்படும் விளைவுகளும் இணைந்து வருவதாகும். இதன் அளவை பீரின் விதியின் (Beer's law) அடிப்படையில் அளக்கலாம்.
புவியின் வளிமண்டலத்தால் ஏற்படும் விளைவுகள் லாங்லி புறச்செருகல் (Langley extrapolation) அடிப்படையின் மூலம் நீக்கப்படுகிறது. இதன் மூலம் தரையில் அமைக்கப்பட்டுள்ள கருவிகளைக் கொண்டு புவிக்கு அப்பாலான சூரிய கதிர்வீச்சும் (extraterrestrial radiance) அளக்கப்படுகிறது. புவிக்கப்பாலான சூரிய கதிர்வீச்சு அளக்கப்பட்டதும், அதைக் கொண்டு வளிமண்டலம் ஆராயப்படுகிறது. புவி மண்டலத்தில் ஒளி ஊடுருவும் தன்மை (Optical depth) அளக்கப்படுகிறது. ஒளி நிற மாலையின் சில அலைகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, நீராவி மற்றும் ஓசோன் போன்ற பல்வேறு வாயுக்களின் வழியாகச் செலுத்தப்பட்டு, அவற்றின் ஒளி ஊடுருவும் தன்மை அளவிடப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- Glenn E. Shaw, "Sun photometry", Bulletin of the American Meteorological Society 64, 4-10, 1983.