உள்ளடக்கத்துக்குச் செல்

சித்தார்த்தா (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தார்த்தா
முதற் பதிப்பின் அட்டை
நூலாசிரியர்ஹேர்மன் ஹெசே
உண்மையான தலைப்புSiddhartha: Eine Indische Dichtung
மொழிபெயர்ப்பாளர்ஹில்டா ரோஸ்னர்
நாடுஜெர்மனி
மொழிஜெர்மன்
வகைமெய்யியல் புதினம்
வெளியீட்டாளர்நியூ டைரக்சன், அமெரிக்கா
வெளியிடப்பட்ட நாள்
1922, 1951 (அமெரிக்கா)
ஊடக வகைஅச்சு (சாதாரன அட்டை)
பக்கங்கள்152
OCLC9766655
833.912

சித்தார்த்தா: எ இண்டியன் நாவல் ( இடாய்ச்சு மொழி: Siddhartha: Eine Indische Dichtung  ; இடாய்ச்சு: [ziˈdaʁta]  ( கேட்க) ) என்பது 1922 இல் ஹேர்மன் ஹெசே எழுதிய ஒரு புதினமாகும். இது கௌதம புத்தரின் காலத்தில் சித்தார்த்தன் என்ற மனிதனின் சுய தேடல் மிக்க ஆன்மீகப் பயணத்தைப் பற்றியதாக உள்ளது. ஹெசேயின் ஒன்பதாவது புதினமான இந்தப் புத்தகம் ஜெர்மன் மொழியில் எளிமையான, பாடல் வரிகளில் எழுதப்பட்டது. இது 1951 இல் அமெரிக்காவில் வெளியிடப்பட்டு, 1960 களில் செல்வாக்கு பெற்றது. ஹெசே அதன் முதல் பகுதியை ரோமெய்ன் ரோலண்டிற்கும் [1] , இரண்டாம் பகுதியை அவரது உறவினரான வில்ஹெல்ம் குண்டர்ட்டுக்கும் அர்ப்பணித்தார்.

சித்தார்த்தன் என்ற சொலானது சமஸ்கிருத மொழிச் சொற்களான சித்தா (அடையப்பட்டது) + அர்த்த (தேடப்பட்டது) ஆகிய இரண்டு சொற்களின் சேர்க்கை ஆகும். இதன் பொருள் "(இருத்தலின்) பொருளைக் கண்டுபிடித்தவர்" அல்லது "தன் இலக்குகளை அடைந்தவர்" என்பதாகும். [2] சித்தார்தன் என்பது உண்மையில், புத்தரின் இயற்பெயர். அவர் துறவறத்தை மேற்கொள்வதற்கு முன், கபிலவஸ்துவின் இளவரசர் சித்தார்த்த கௌதமராக இருந்தார். இந்நூலில் புத்தர் "கோதமர்" என்று குறிப்பிடப்படுகிறார். [3]

கதை

[தொகு]

பழங்கால நேபாள இராச்சியமான கபிலவஸ்துவில் கதை நடக்கிறது. சித்தார்த்தன் சாமணத் துறவியாக அலைந்து திரிந்து பிச்சைக்காரனாக ஆவதன் மூலம் ஆன்மீக ஞானம் பெறும் நம்பிக்கையில் தனது வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறான். அவனது சிறந்த நண்பரான கோவிந்தனுடன் சேர்ந்து, சித்தார்த்தன் விரதம் இருந்து, தன் உடைமைகள் அனைத்தையும் துறந்து, தீவிர தவம் செய்கிறான். இறுதியில் புகழ்பெற்றவரான புத்தர் அல்லது ஞானம் பெற்ற கௌதமரை நாடி தனிப்பட்ட முறையில் பேசுகிறான். பின்னர், சித்தார்த்தனும் கோவிந்தனும் புத்தரின் போதனைகளின் நேர்த்தியை ஒப்புக்கொள்கிறார்கள். கோவிந்தன் புத்தரின் நெறியில் உடனே இணைகிறான். ஆனால் புத்தரின் மெய்யியல், மிக உயர்ந்த ஞானம் என்றாலும், ஒவ்வொரு நபரின் அவசியமான தனிப்பட்ட அனுபவங்களைக் கணக்கில் கொள்ளாதது என்று கூறி அங்கேயும் நிலை கொள்ளவில்லை. சித்தார்த்தன் கோவிந்தனை விட்டுவிட்டு தனது தேடலை தனியாக தொடர முடிவு செய்கிறான்.

சித்தார்த்தனின் பயணத்தின் குறுக்கே ஒரு ஆறு குறுக்கிடுகிறது. ஒரு படகோட்டியின் உதவியுடன் சித்தார்த்தன் ஆற்றைக் கடக்கிறான். நகர வாழ்க்கையை நோக்கிச் செல்லும் சித்தார்த்தன், தான் இதுவரை கண்டிராத அழகான பெண்ணான கமலாவைச் சந்திக்கிறான். வேசியான கமலா, அழகும் புத்திசாலித்தனமும் கொண்டவனாக சித்தார்த்தன் இருப்பதை கமலா பார்க்கிறாள். அனை அவள் காரியவாதியாக்க விரும்புகிறாள். சித்தார்த்தன் பொருள் சேர்ப்பதை ஒரு சமணனாக வெறுத்தாலும், அவன் இப்போது கமலாவின் ஆலோசனைகளை ஏற்கிறான். அவள் அவனை உள்ளூர் தொழிலதிபரான காமஸ்வாமியிடம் வேலைக்கு அழைத்துச் செல்கிறாள், மேலும் காமஸ்வாமி அவனை எடுபிடியாக அல்லமால் சமமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறாள். சித்தார்த்தன் எளிதில் வணிகத்தில் தேர்ச்சி பெறுகிறான். அவள் அவனுக்கு சிற்றின்பத்தை அளிக்கிறாள். ஏவல் பணியாளர்களையும், ஏராளமான செல்வத்தையும் ஈட்டுகிறான். இவ்வாறு சித்தார்த்தன் ஒரு பணக்காரனாகவும் கமலாவின் காதலனாகவும் மாறுகிறான். ஆனால் தான் தேர்ந்தெடுத்த ஆடம்பர வாழ்க்கை ஆன்மீக நிறைவு இல்லாத ஒரு விளையாட்டு என்பதை அவனது நடுத்தர வயதில் உணர்கிறான். கமலா, செல்வம் என அனைத்தையும் விட்டு நகரத்தின் பரப்பபை விட்டுவிட்டு திரும்ப சித்தார்த்தன் புறப்படுகிறான். மீண்டும் ஆறு இடைமறிக்கிறது. வாழ்க்கையில் சோர்ந்து ஏமாற்றமடைந்து, தியான தூக்கத்தில் விழுவதற்கு முன்பு தற்கொலை செய்துகொள்வதைச் சிந்தித்து, ஓம் என்ற புனித சொல்லின் உள் அனுபவத்தால் மட்டுமே காப்பாற்றப்படுகிறான். அதே படகோட்டி உதவியுடன் ஆற்றை மீண்டும் கடக்கிறான். மறுநாள் காலை, சித்தார்த்தன் கோவிந்தனுடன் சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் தொடர்பு கொள்கிறான். அவன் அந்த பகுதி வழியாக அலைந்து திரிந்த பௌத்தனாக செல்கிறான்.

சித்தார்த்தன் தனது வாழ்நாள் முழுவதும் ஆன்மீக ரீதியில் ஊக்கமளிக்கும் ஆற்றினுடனே வாழ முடிவு செய்கிறான். சித்தார்த்தன் இவ்வாறு வாசுதேவன் என்ற படகோட்டியுடன் மீண்டும் இணைகிறான் அவனுடன் அவர் ஒரு எளிமையான வாழ்க்கை முறையைத் வாழத் தொடங்குகிறான்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது புத்த சமயம் மாறிய கமலா, புத்தரின் மரணப் படுக்கையில் புத்தரைப் பார்க்க, தயக்கத்துடன் தன் இளம் மகனுடன் பயணம் செய்கிறாள். ஆற்றின் அருகே ஒரு நச்சுப் பாம்பு கமலாவை கடிக்கிறது. சித்தார்த்தன் அவளை அடையாளம் கண்டுகொண்டு அந்த பையன் தன் சொந்த மகன் என்பதை உணர்கிறான். கமலாவின் மரணத்திற்குப் பிறகு, கோபத்துடன் தன்னை எதிர்க்கும் பையனுக்கு ஆறுதல் கூறி வளர்க்க முயற்சிக்கிறான் சித்தார்த்தன். ஒரு நாள் சிறுவன் சித்தார்த்தனை விட்டு ஓடிவிடுகிறான். ஓடிப்போன மகனைக் கண்டுபிடிக்க சித்தார்த்தன் ஆசைப்பட்டாலும், வாசுதேவன் சித்தார்தன் தன் இளமைப் பருவத்தில் செய்ததைப் போலவே, சிறுவனும் தன் சொந்த பாதையைக் கண்டுபிடிக்க விடுமாறு அவனை வற்புறுத்துகிறான். சிறிது காலத்திற்குப் பிறகு வாசுதேவன் தனது வேலை முடிந்துவிட்டதாகவும், தான் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கூறி, சித்தார்த்தனை தனியாக விட்டுவிட்டு புறப்படுகிறான்.

தன் வாழ்வின் இறுதியில், கோவிந்தன் அறிவொளி பெற்ற ஒரு படகோட்டியைப் பற்றி கேள்விப்பட்டு, சித்தார்த்தனை நோக்கி வருகிறான். முதலில் அவன் தனது இளம்பருவ நண்பன் என்று அறியவில்லை. கோவிந்தன் இப்போது வயதான நிலையில் உள்ள சித்தார்த்தனிடம் ஞானம் குறித்து உரையாடுகிறான். சித்தார்த்தன் கோவிந்தனின் கேள்விகளுக்கு விடையளிக்கிறான். உரையாடலின் முடிவில் கோவிந்தனை தனது நெற்றியில் முத்தமிடுமாறு சித்தார்த்தன் கேட்டுக்கொள்கிறான் அவன் அதைச் செய்யும்போது, படகோட்டியாக உள்ள ஞானி தன் நண்பனான சித்தார்த்தனே என்பதை கோவிந்தன் உணர்கிறான். கோவிந்தன் தன் புத்திசாலியான நண்பனை வணங்குகிறான். சித்தார்த்தன் ஞானம் பெற்று பிரகாசமாக புன்னகைக்கிறான். அவன் தந்தையின் முக்கியத்துவத்தையும் அன்பையும் உணர்கிறான், அவன் ஒரு தந்தையாகி, அவனது சொந்த மகன் வெளி உலகத்தை ஆராய அவனை விட்டு வெளியேறுகிறான். இவ்வாறு அவன் வாழ்க்கையின் முழு வட்டத்தையும் அனுபவிக்கிறான்.

பாத்திரங்கள்

[தொகு]
  • சித்தார்த்தன் : கதாநாயகன்.
  • கோவிந்தன் : சித்தார்த்தரின் நெருங்கிய நண்பனும், கோதமரைப் பின்பற்றுபவனும்.
  • சித்தார்த்தனின் தந்தை : சித்தார்த்தனின் ஞான வேட்கையைத் திருப்திப்படுத்த முடியாத ஒரு பிராமணர்.
  • சமணர்கள் : பயண துறவிகள் சித்தார்த்தனிடம், பற்றாக்குறை ஞானத்திற்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள்.
  • கோதமர் : புத்தர், அவருடைய போதனைகள் சித்தார்தனால் நிராகரிக்கப்படுகின்றன. ஆனால் அவரது சுய அனுபவம் மற்றும் சுய ஞானத்தின் சக்தி சித்தார்த்தனால் முழுமையாகப் பாராட்டப்படுகிறது.
  • கமலா : ஒரு வேசி, சித்தார்த்தனின் சிற்றின்ப வழிகாட்டி, சித்தார்த்தனின் மகனின் தாய்.
  • காமஸ்வாமி : சித்தார்த்தருக்கு வணிகத்தில் அறிவுரை கூறும் வணிகர்.
  • வாசுதேவன் : அறிவொளி பெற்ற படகோட்டியு, சித்தார்த்தனின் ஆன்மீக வழிகாட்டி.
  • இளம் சித்தார்த்தன் : சித்தார்த்தன் மற்றும் கமலாவின் மகன். சித்தார்த்தனுன் சிறிது காலம் வாழ்ந்தாலும் அவனைவிட்டு ஓடிவிடுகிறான்.

திரைப்பட பதிப்புகள்

[தொகு]

சித்தார்த்தா என்ற பெயரிலான இதன் ஒரு திரைப்பட பதிப்பு 1972 இல் வெளியிடப்பட்டது. இதில் சசி கபூர் நடிக்க, கான்ராட் ரூக்ஸ் இயக்கினார்.

1971 ஆம் ஆண்டில், ஒரு இதன் மேற்கத்திய தழுவலாக ஜக்காரியா என்ற பெயரில் திரைப்படம் வெளியிடப்பட்டது. ஜான் ரூபின்ஸ்டீன் முதன்மைப் பாத்திரத்தில் நடித்தார். இப்படத்தை ஜார்ஜ் இங்லண்ட் இயக்கியிருந்தார். கோவிந்தனுக்கு இணையான பாத்திரமான மேத்யூவாக டான் ஜான்சன் நடித்தார்.

இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஹில்டா ரோஸ்னர் மொழிபெயர்த்த ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து பெல்லம்கொண்டா ராகவ ராவால் "சித்தார்த்தா" தெலுங்கில் மொழிபெயர்க்கபட்டது (1957)
  • ஆர். ராமன் நாயர் மலையாளத்தில் மொழிபெயர்த்தார் (1990).
  • எல் சுலோச்சனா தேவியால் சமசுகிருதத்தி்ல் மொழிபெயர்க்கபட்டது (2008)
  • பிரபாகரன் ஹெப்பர் இல்லாவால் இந்தியில் மொழிபெயர்க்கபட்டது (2012)
  • அவினாஷ் திரிபாதியினால் மராத்தியில் மொழிபெயர்க்கபட்டது (2007)
  • ஜாபர் ஆலமால் வங்க மொழியில் மொழிபெயர்க்கபட்டது (2002)
  • ஜெவிதா நரேசால் சித்தார்த்தன் தமிழில் மொழிபெயர்க்கபட்டது (2017)
  • டாக்டர் ஹரி சிங் பஞ்சாபியில் சித்தார்த்தாவை மொழிபெயர்த்தார்
  • சித்தார்த்தாவை உருது மொழியில் ஆசிஃப் ஃபார்க்கி மொழிபெயர்த்தார்
  • ஷாஹீன் புனேரி (பிப்ரவரி 2021) சித்தார்த்தாவை பாஷ்டோவில் மொழிபெயர்த்தார்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Siddhartha: eine indische Dichtung by Hermann Hesse – Project Gutenbe…". gutenberg.org. 24 May 2012. Archived from the original on 24 May 2012. பார்க்கப்பட்ட நாள் 6 April 2018.
  2. "The Life of Siddhartha Gautama". Webspace.ship.edu. பார்க்கப்பட்ட நாள் 2008-03-27.
  3. "Gotama". Il226.photobucket.com. பார்க்கப்பட்ட நாள் 2016-07-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தார்த்தா_(புதினம்)&oldid=3726564" இலிருந்து மீள்விக்கப்பட்டது