உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்தி திக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாந்தி திக்கா (Shanti Tigga) இந்திய ராணுவத்தின் முதல் பெண் வீரர் ஆவார்.[1][2] இவரது உடற்தகுதியும் திறமையும் இவரது காலத்தில் பணியாற்றிய சக ஆண் ஊழியர்களை விட அதிகமாக இருந்தது. அதைத் தொடர்ந்து இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சி முகாமில் இவருக்கு சிறந்த பயிற்சியாளர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர் அடையாளம் தெரியாத சிலரால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இவர் மே 13, 2013 அன்று இறந்து கிடந்தார்.[3]

சுயசரிதை

[தொகு]

சாந்தி திக்கா, மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட பட்டியல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பதிலிருந்த சில உறுப்பினர்களும், இவரது சமூகத்தின் பல உறுப்பினர்களும் இந்தியப் பாதுகாப்புப் படைகளின் பல்வேறு பிரிவுகளில் சேர்ந்து பணியாற்றி வந்தனர். அதுவே தனது 35 வயதில் இராணுவத்தில் சேர்ந்தபோது இவருக்கேற்பட்ட தடைகளை உடைக்கத் தூண்டியது.[4] இவர் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டார். மேலும் தனது ஆரம்பகால வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒரு இல்லத்தரசியாகவும், தாயின் பாத்திரத்திலும் கழித்தார். மேலும், இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.[1][4]

தொழில்

[தொகு]

சாந்தி திக்காவின் கணவர் இறந்தபோது, இவருக்கு இழப்பீடாக இந்திய இரயில்வேயில் ஒரு வேலை வழங்கப்பட்டது. இவர் 2005இல் இந்திய இரயில்வேயில் சேர்ந்தார். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தின் சல்சா தொடர் வண்டி நிலையத்தில் தொடர்ந்து பணியாற்றினார். 2011ஆம் ஆண்டில், பிராந்திய இராணுவத்தின் 969 இரயில்வே பொறியாளர் படைப்பிரிவில் சேர இவர் ஆணை பெற்றார்.[5] அதுவரை, பெண்கள் ஆயுதப்படைகளில் போர் அல்லாத பிரிவுகளில், அதிகாரிகளின் நிலையில் மட்டுமே சேர அனுமதிக்கப்பட்டனர்-இது திக்காவுக்குத் தெரியாது. இவர் அதைத் தெரிந்து கொண்டபோது, இந்த விதி தனக்கு "ஒரு தடையாக இருக்காது" என்று உணர்ந்தார். திக்கா, 1.3 மில்லியன் என்ற எண்ணிக்கையிலான வலுவான இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் முதல் பெண் வீரராக ஆனார்.[6]

திக்கா ஆட்சேர்ப்பு பயிற்சி முகாமில் தனது ஆண் சகாக்களை விட சிறப்பாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. 1.5 கி.மீ. தூரத்தைக் கடக்க இவர் ஆண்களை விட ஐந்து வினாடிகள் குறைவாக எடுத்துக் கொண்டார். மேலும், 50 மீட்டர் ஓட்டத்தை 12 வினாடிகளில் முடித்தார். இது உயர் அதிகாரிகளால் சிறப்பாக மதிப்பிடப்பட்டது. துப்பாக்கிகளைக் கையாளுவதன் மூலம் இவர் துப்பாக்கிச் சூடு அதிகாரிகளைக் கவர்ந்தார். மேலும் ஒரு வீரராக மிக உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றார். இவருக்கு சிறந்த பயிற்சியாளர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது.[1]

கடத்தல் மற்றும் இறப்பு

[தொகு]

மே 9, 2013 அன்று, திக்கா அடையாளம் தெரியாத குற்றவாளிகளால் கடத்தப்பட்டார். மேலும், ஒரு இரயில் தண்டவாளத்தில் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டிருந்தார். இவருக்கு ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. காவல் விசாரணை தொடங்கியது. ஒரு வாரம் கழித்து, மே 13, 2013 அன்று இரயில்வே மருத்துவமனையில் திக்கா தூக்கில் தொங்கினார்.[7] அறையிலிருந்து நீண்ட நேரம் வெளியே வராததால் உடனிருந்த இருந்த இவருடைய மகன் காவலர்களுக்கு தெரிவித்தான். இந்த வழக்கு தற்கொலை என காவல் அதிகாரிகள் முடிவு செய்தனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "10 Things You Must Know about Shanti Tigga – the First Woman Jawan of the Indian Army". thebetterindia.com portal.
  2. "Shanti Tigga becomes first woman jawan". thehindu.com portal.
  3. 3.0 3.1 "Indian Army's first woman jawan found dead in railway hospital". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 2019-03-08.
  4. 4.0 4.1 Writer, Guest (2019-03-04). "Shanti Tigga: India's First Female Jawaan | #IndianWomenInHistory". Feminism In India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-08.
  5. Gautam, Nishtha (November 30, 1999). "Shanti Tigga's tragic death should not bar the entry of women in combat roles". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-08.
  6. "Shanti Tigga becomes first woman jawan" (in en-IN). The Hindu. 2011-10-03. https://www.thehindu.com/todays-paper/shanti-tigga-becomes-first-woman-jawan/article2507913.ece. 
  7. Pillai, Shruti (2016-01-14). "The Life & Death Of Indian Army's 1st Female Jawan Is One Of India's Most Tragic Mysteries". ScoopWhoop (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-03-08.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தி_திக்கா&oldid=3462167" இலிருந்து மீள்விக்கப்பட்டது