எர்கோலைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எர்கோலைன் வழிப்பொருள்கள் (Ergoline derivatives) ஆல்கலாய்டு எர்கோலைனின் வடிவமைப்புச் சட்டகத்தைக் கொண்ட வேதிச்சேர்மங்கள் ஆகும். எர்கோலைன் வழிப்பொருள்கள் இரத்த நாளச் சுருக்கத்திற்கான மருந்துப் பொருளாகவும், ஒற்றைத் தலைவலிக்கான சிகிச்சை மற்றும் துயர் குறைப்பியாகவும் காஃவீன்) உடன் இணைத்துப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் நடுக்குவாதத்திற்கான சிகிச்சையிலும் பயன்படுகிறது. சில எர்கோலைன் ஆல்கலாய்டுகள் எர்காட் பூஞ்சைகளில் காணப்படுவதோடு ரொட்டிப்பூஞ்சை நோய் என்ற நிலையிலும் ஈடுபடுகிறது. இதர எர்கோலைன் வழிப்பொருள்கள் இல்காட்சியுணர்வு மற்றும் மாயத்தோற்றங்கள் தெரிவதாக உணரும் ஒரு வித மன நோய்க்கான மருந்துகளான லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைடு ஆகியவற்றை உள்ளடக்கியதாக உள்ளன. மற்றும் சில ஆல்கலாய்டுகள் ஆர்கைநியா நெர்வோசா, இப்போமோயியோ டிரைகலர் மற்றும் இவ்றை ஒத்த தாவரங்களில் காணப்படுகிறது.[1]எர்கோலின் வழிப்பொருள்களில் மூன்று முக்கிய வகைகள் காணப்படுகின்றன. அவை, 1) லிசெர்ஜிக் அமிலத்தின் நீரில் கரையக்கூடிய அமைடுகள், 2) நீரில் கரையாத எர்கோபெப்டின்கள் மற்றும் 3) கிளாவைன் தொகுதி சேர்மங்கள் ஆகியவை ஆகும். இச்சேர்மங்கள் அடிப்படை எர்கோலின் வளையத்துடன் இணைக்கப்பட்ட டிரைபெப்டைடு அமைப்பைக் கொண்டுள்ளன.


பயன்கள்[தொகு]

இயற்கையாக காணப்படும் எர்கோனோவைன் (கருப்பை குருதிப்போக்கு தடுப்பியாகப் பயன்படுத்தப்படுவது) மற்றும் எர்கோடமீன் (ஒற்றைத் தலைவலியைக் கட்டுப்படுத்த உதவும் இரத்தநாளச் சருக்கி) இவற்றைத் தவிர்த்து, தொகுப்புமுறை வழிப்பொருள்களான மெதர்ஜின் (கருப்பை குருதிப்போக்கு தடுப்பி), ஒற்றைத் தலைவலி மருந்துகளான டைஐதரோஎர்கோடமீன் மற்றும் மெத்திசெர்ஜைடு, ஐதெர்ஜின் (டைஐதரோஎர்கோடாக்சின் மெசிலேட்டுகள்) ஆகியவையும் காணப்படுகின்றன.

இயற்கையில் கிடைக்கும் விதம்[தொகு]

எர்கோலைன் ஆல்கலாய்டுகள் கீழ்நிலை பூஞ்சைகளில் காணப்படுகின்றன. மேலும் சில இனங்கள் பூக்கும் தாவரங்களிலும், மெக்சிகன் தாவரங்களான துர்பினா கோரிம்போசா மற்றும் இபோமோயியா மூவண்ணம் ஆகியவைகளில் காணப்படுகின்றன. இத்தாவரங்களின் விதைகள் சில உளவியல் நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படும் மருந்துகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. [2]இந்த விதைகளில் உள்ள முக்கிய ஆல்கலாய்டுகள் எர்கைன் மற்றும் அதன் ஒளியியல் மாற்றியமான ஐசோர்கைன் ஆகும். மேலும் பல லைசெர்ஜிக் அமில வழிப்பொருள்கள் மற்றும் கிளாவின்கள் குறைந்த அளவுகளில் உள்ளன. ஹவாயிய உயிரினங்கள் ஆர்கைரியா நெர்வோசா இதை ஒத்த ஆல்கலாய்டுகளையும் உள்ளடக்கியுள்ளன.

வரலாறு[தொகு]

எர்கோலைன் ஆல்கலாய்டுகள் முதன்முதலில் தானியங்களைத் தாக்கி எர்கோடிசம் என்ற நோயினை உருவாக்கும் பூஞ்சைகளான எர்காட்டுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன. எர்காட் மருத்துவப் பயன்பாட்டில் ஒரு நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே, இதன் செயல்பாட்டை வேதியியல்ரீதியாக அடையாளப்படுத்தும் முயற்சிகளுக்கு வழிவகுத்தது. இந்த முயற்சி ஜி. பார்கர் மற்றும எஃப். எச். கார் ஆகியோர் எர்கோடாக்சினிலிருந்து பிரித்தெடுத்ததிலிருந்து தொடங்கியது. இந்தப் பெயர் எர்காட்டின் மருத்துவப் பயன்களைக் காட்டிலும் நச்சுத்தன்மை அதிகமாக இருந்ததால் விளைந்ததேயாகும். 1918 ஆம் ஆண்டில் ஆர்தல் இசுடோல் என்பவர் எர்கோலின் ஆல்கலாய்டுகளிலிருந்து எர்கோடமீனை நோய்தீர்க்கும் சிகிச்கைகளுக்குரிய பொருளாகப் பிரித்தெடுத்தார். ஆர்தர் இசுடோல் மற்றும் ஆல்பர்ட் ஆப்மேன் இருவரும் இது தொடர்பான ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டனர். அவர்களின் பணியின் முன்னேற்றத்தின்போது, இயற்கையாக கிடைக்கும் அனைத்து ஆல்கலாய்டுகளும் ஒற்றை கட்டுமான அலகான லிசெர்ஜிக் அமில டைஎத்திலமைடிலிருந்து பெறப்பட்டுள்ளது தெளிவாக்கப்பட்டது. 1930 களின் தொடக்கத்தில் எர்காட் ஆல்கலாய்டுகளின் அடிப்படை வேதி அமைப்பானது கண்டறியப்பட்ட பிறகு, வேதித்தொகுப்பு முறை வழிப்பொருள்களின் தீவிரமான தேடலின் நூற்றாண்டு தொடங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Juszczak, GR; Swiergiel, AH (2013). "Recreational use of D-lysergamide from the seeds of Argyreia nervosa, Ipomoea tricolor, Ipomoea violacea, and Ipomoea purpurea in Poland". J Psychoactive Drugs 45 (1): 79–93. doi:10.1080/02791072.2013.763570. பப்மெட்:23662334. 
  2. Carod-Artal, FJ (2015). "Hallucinogenic drugs in pre-Columbian Mesoamerican cultures". Neurologia 30 (1): 42–9. doi:10.1016/j.nrl.2011.07.003. பப்மெட்:21893367. http://www.elsevier.es/en-revista-neurologia-english-edition--495-pdf-S2173580814001527-S300. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்கோலைன்&oldid=2952325" இலிருந்து மீள்விக்கப்பட்டது