உள்ளடக்கத்துக்குச் செல்

இளந்திரையன் (புலவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளந்திரையன் சங்ககாலப் புலவர்களில் ஒருவன். இந்தப் புலவர் அரசன் என்பதால் திரையனார் என்று கூறப்படாமல் திரையன் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் நான்கு பாடல்கள் உள்ளன. அவை நற்றிணை 94, 99, 106 மற்றும் புறநானூறு 185 எண் கொண்ட பாடல்கள்.

புலவர் அரசன்

[தொகு]

பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை நூலில் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்பவரால் சிறப்பித்துப் பாடப்பட்ட அரசன் தொண்டைமான் இளந்திரையன். இவனே இந்தப் புலவனும் ஆவான் எனக் கொள்வது பொருத்தமான முடிபு. இந்த முடிபுக்கு இவனது புறநானூற்றுப் பாடல் அரண் சேர்க்கும்.

நற்றிணை 94 தரும் செய்தி

[தொகு]

இது நெய்தல் திணைப் பாடல். தலைமகன் தலைமகளின் வீட்டுக்கு வெளிப்புறத்தில் காத்திருக்கிறான். தலைமகள் அவன் கேட்குமாறு தோழிக்குச் சொல்வது போலச் சொல்கிறாள்.

காமநோய் அலையில் மிதந்து அலைக்கழிக்கப் படும்போது தன் காமத்தை வாயால் சொல்லுதல் ஆண்மகனுக்குப் பொருந்தும். யானே பெண்மையால் தடுக்கப்பட்டுள்ளேன். என் காமத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறேன்.தோழி! அவன் என்ன மகனோ, அவனுக்கு உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறான் என் நெஞ்சு வருந்துதல் அவனுக்குத் தெரியவில்லை.

உவமை

[தொகு]

சேர்ப்பு நிலத்தில் பூத்திருக்கும் புன்னைப் பூ நகை செய்யும் கம்மியன் முத்தைக் கழுவாமல் வீட்டில் வைத்திருக்கும் மதுத்தைப்போல அரும்பு விடும்.

நற்றிணை 99 தரும் செய்தி

[தொகு]

இது முல்லத்திணைப் பாடல். திரும்புவேன் என்று அவன் சொல்லிச் சென்ற பருவம் கண்டு இதுதானா அந்தப் பருவம் என்று அவள் தோழியை வினவுகிறாள். தோழி இது அந்தப் பருவம் அன்று என்று நயமாகக் கூறித் தேற்றும் பாடல் இது.

தோழி சொல்கிறாள், இந்த மழைமேகத்துக்கு மதி இல்லை. கடலில் கண்ணீரை முகந்து சென்று சூலுற்றது. அதனை அதனால் தாங்கிக்கொள்ள முடியாமல் தள்ளிவிட்டது. அதனைப் பார்த்த பிடவம், கொன்றை, கோடல் ஆகிய பூக்களும் மடத்தனமாய்ப் பலவாகப் பூத்திருக்கின்றன. இதனை நம்பாதே.

நற்றிணை 106 தரும் செய்தி

[தொகு]

இது நெய்தல் திணைப் பாடல். அவன் பொருள் தேடிவரத் தேரில் செல்கிறான். வழியில் பழைய நினைவு ஒன்று பள்ளிச்சிடுகிறது.அதனைத் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான். அதில் அவளது மென்மை புலப்படுகிறது.

நாங்கள் கடல் திடையில் ஓடி விளையாடிக்கொண்டிருந்தோம். எங்களைக் கண்டு நண்டு தன் வலைக்குள் ஓடியது. அதன் துன்பத்தை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏன் நண்டு ஓடுகிறது என்று என்னைக் கேட்டாள். நான் சொன்னேன், நாம் சேர்ந்து விளையாடுவதைப் பார்த்து அதுவும் தன் துணையோடு விளையாடச் சென்றுவிட்டது என்றேன். உடனை அவள் ஒன்றும் பேசாமல் ஓடிப்போய் அருகில் பூத்திருந்த ஞாழல் மலர்ப் பூக்களைப் பறித்து அதன்மீது போட்டாள். அன்று நண்டின் துன்பத்தைப் பொறுக்காத அவள் இன்று என் பிரிவைப் பொறுத்திருக்க முடியுமா?

புறநானூறு 185 தரும் செய்தி

[தொகு]

இது பொருண்மொழிக் காஞ்சித் துறை சேர்ந்த பாடல். உலகியல் உண்மையைக் கூறுவது பொருண்மொழிக்காஞ்சி.

இதில் கூறப்படும் உலகியல்

[தொகு]

உலகைக் காப்பாற்றும் தேரை அரசன் ஓட்டுகிறான். அவன் மாண்பு உடையவனாக இருந்தால் அவன் நாடு துன்பம் இல்லாமல் வாழும். உலகைக் காப்பாற்றும் தேரைச் சரியாக ஓட்டத் தெரியாதவன் ஓட்டினால் அவன் நாடு பகைவர் மிதிக்கும் சேறாகித் துன்புறும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளந்திரையன்_(புலவர்)&oldid=4132442" இலிருந்து மீள்விக்கப்பட்டது