ஆனைக்கோட்டை தொல்லியல் களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆனைக்கோட்டை தொல்லியல் களம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண நகருக்கு வடமேற்கே ஆறு மைல் தொலைவில் நாவாந்துறை கடற்பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இங்கு இரண்டு சதுர மைல் பரப்பில் ஆறு குடியிருப்பு மையங்களும், இரண்டு ஏக்கர் பரப்பில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் அடையாளங் காணப்பட்டுள்ளன.

1980களின் ஆரம்பத்தில் நடத்தப்பட்ட மேற்பரப்பு ஆய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் களங்களில் ஆனைக்கோட்டை தொல்லியல் களமும் ஒன்று[1]. இங்கே காணப்பட்ட பெருங்கற்காலத் திட்டுக்கள் பல அயலில் உள்ள தாழ்வான பகுதிகளை நிரப்பி வீடமைக்கும் திட்டத்துக்காக மண் அள்ளப்பட்டதனால் குழப்பப்பட்டு இருந்தது.

பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆய்வுக்கொடை மூலம், அப்பல்கலைக்கழகத்தின் வராலாற்றுத் துறையினர் ஆனைக்கோட்டையில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டனர். பேராசிரியர். கா. இந்திரபாலா, பேராசிரியர் சி. க. சிற்றம்பலம், முனைவர். பொ. இரகுபதி ஆகியோர் பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் இந்த ஆய்வுகளை நடத்தினர்[2]. இங்கே ஒரு அடக்கக் குழியும் பல தொல்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அடக்கக் குழிக்குள் காணப்பட்ட எலும்புக்கூட்டின் மண்டையோட்டுக்கு அருகில் காணப்பட்ட மட்பாண்டம் ஒன்றில் காணப்பட்ட பொருட்களுள் "ஆனைக்கோட்டை முத்திரையும்" ஒன்று.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பொன்னம்பலம், இரகுபதி; யாழ்ப்பாணத்தின் முற்காலக் குடியேற்றங்கள் - ஒரு தொல்லியல் ஆய்வு, தில்லைமலர் இரகுபதி, சென்னை, 1987, பக் 66
  2. இரகுபதி, பொ., 1987. பக் 117