ஆசிரியர் (இலக்கணம்)
Appearance
அனைவருக்கும் கல்வி என்பது உலகநெறி. இதன் அடிப்படையில் கல்வி வழங்கும் பொறுப்பினை இக்காலத்தில் அரசு மேற்கொண்டுள்ளது. இங்குக் கூறப்படுவது அதற்கு முந்தைய நிலை. ஆசிரியர், மாணாக்கர் பற்றிய செய்திகளைப் பண்டைய நூல்கள் தொகுத்துக் கூறுகின்றன.
நல்லாசிரியர் இயல்பு [1]
- கொடைக்குணம் உடைய குலத்தில் பிறந்தவர்
- இரக்கம் மற்றும் அன்பு காட்டும் அருள் உடையவர்
- தெய்வத்தன்மை கொண்டவர்
- கற்பிக்கும் கொள்கையில் உறுதிப்பாடு கொண்டவர்
- மக்களில் மேம்பட்டவர்
- பெருமை, திண்மை, தாங்கும் தன்மை ஆகியன கொண்ட நிலம் போன்ற பண்புள்ளவராய் மாணவரின் முயற்சிக்கு ஏற்பப் பலன் தருபவராதல்.
- மலை போல் அளக்கமுடியாத கல்விவளம், அசையாத் தன்மை, (மாணவன்) வறண்ட காலத்திலும் வழங்கும் தன்மை கொண்டவராதல்
- துலாக்கோல் போல எல்லா மாணாக்கரையும் சமமாக நோக்குதல்
- மலர் போல் அனைவர்க்கும் மகிழ்வும் மணமும் தருதல்
- உலகியல் அறிவு பெற்றிருத்தல்
- உயர்குணம் உடைமை
ஆகிய பாங்குகளை உடையவர் நல்லாசிரியர்.
தகுதியில்லா அல்லாசிரியர் [2]
- கற்றுத்தரும் குணம் இல்லாமை, இழிந்த பண்புகள் உடைமை, அழுக்காறு, அவா, வஞ்சம், அச்சம், மடமை போன்ற குணமுள்ளவர்.
- இறங்கும் பதநீரைக் கள்ளாக்கும் கள்ளுக்குடம் போன்றவர்
- தானே விழுந்தாலன்றி ஏறிப் பறிக்கமுடியாத கருக்குப்பனைமரம் போன்றவர்
- கொடுப்பதை வாங்கிக்கொண்டு உடைத்தால் மட்டுமே தரும் பருத்திக் குண்டிகை என்னும் உண்டியல் போன்றவர்
- ஒருவர் வீட்டு நீரால் சாய்ந்து வளர்ந்து தேங்காயை அடுத்தவர் வீட்டில் விழச் செய்யும் முடத்தெங்கு போன்றவர்
ஆசிரியர் ஆகும் தகுதி இல்லாதவர்.