அலெக்சு அந்தோனி
அலெக்சு அந்தோனி (Alex Antony) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கரையோர மீனவ கிராமமான புல்லுவிலா இவரது சொந்த ஊராகும். 26 வயதாகும் அலெக்சு 2020 ஆம் ஆண்டு டோக்கியோ கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் 4x400 மீ கலப்பு தொடரோட்ட இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அலெக்சு தன்னுடைய பள்ளிப்படிப்பை திருவனந்தபுரம் நகரத்தின் கஞ்சிரம்குளத்திலுள்ள பிகேஎசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இப்பள்ளியில் படிக்கும் போது உடற்கல்வி ஆசிரியர் பிரதீப் குமார் பயிற்சியின் கீழ் அலெக்சு 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தடகள நிகழ்வுகளுக்கு சென்றுவந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் சேர்ந்த பிறகு இவர் தனது பயிற்சியாளர் நிசாத் குமாரின் வழிகாட்டுதலின் கீழ் நிபுணர் பயிற்சியையும் வழிகாட்டலையும் பெற முடிந்தது. அலெக்சு 400 மீட்டர் ஓட்டத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
2014 ஆம் ஆண்டு கோவாவில் நடந்த ஒரு தடகளப் போட்டியில் அலெக்சு முதல் முறையாக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதே ஆண்டு நடைபெற்ற தேசிய இளையோர் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். பல்கலைக்கழக போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அலெக்சுக்கு விளையாட்டு ஒதுக்கீட்டில் இந்திய விமானப்படையில் வேலை கிடைத்தது. இதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு முதல் பட்டியாலாவில் உள்ள தேசிய தடகள அகாடமியில் பயிற்சி செய்து வந்தார். அங்கு வந்தபிறகு 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
2019 ஆம் ஆண்டில் 4x400 மீட்டர் போட்டிக்கான ஆசிய வெற்றியாளர் மற்றும் உலக வெற்றியாளர் போன்ற முக்கிய போட்டிகளில் பங்கேற்று இந்திய அணியில் அலெக்சு தனது இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.
400 மீ தொலைவை 47.83 நொடிகளில் கடந்து இரண்டாம் இடம் பெற்றதன் மூலம் இவர் ஒலிம்பிக் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டார். 4x400 மீ கலப்பு தொடரோட்ட அணியில் சர்தக் பாம்ப்ரி, ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் மற்றும் தனலட்சுமி சேகர் ஆகியோர் இவருடன் அணியில் இடம்பெற்றுள்ளனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Korah Abraham (7 July 2021). "From Thiruvananthapuram to Tokyo: Alex Antony's inspiring journey to the Olympics". The newsMinute. பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.
- ↑ Anjishnu Roy (11 July 2021). "Alex Antony - How the son of a fisherman entered Indian Air Force and eventually fulfilled his Olympics dream". The Bridge. பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.
- ↑ "Alex Antony புல்லுவில்லா டூ டோக்கியோ: மீனவ இளைஞர் அலெக்ஸ் ஆண்டனியின் பயணம்..!". Tamil.abplive. 11 July 2021. பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.