உள்ளடக்கத்துக்குச் செல்

அடிப்பந்துத் தொப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீல நிறமான அடிப்பந்துத் தொப்பி ஒன்று.

அடிப்பந்துத் தொப்பி (Baseball Cap) நீளமானதும், வளைந்த அல்லது தட்டையானதுமான முன் மறைப்பைக் கொண்ட மென்மையான தொப்பி ஆகும். தொப்பியின் மேற்பகுதியின் முன்புறத்தில் அடிப்பந்துக் குழுவினரின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். தொப்பியின் பின்புறத்தில், பல்வேறு அளவுகளுள்ள தலைகளுக்கு இறுக்கமாகப் பொருந்த அணிவதற்காக மீள்தகவு நாடா பொருத்தப்பட்டிருக்கும் அல்லது நெகிழியினால் செய்யப்பட்ட அளவுமாற்றி இருக்கும்.

அடிப்பந்துத் தொப்பி, மரபுவழியாக அடிப்பந்து வீரர்கள் அணியும் சீருடையின் ஒரு பகுதி. முன்மறைப்பு முன்புறம் நோக்கியிருக்குமாறு இத் தொப்பியை அணிவது வழக்கம். இது கண்களைச் சூரிய ஒளியிலிருந்து மறைத்துக் காக்கின்றது. தற்காலத்தில் விளையாட்டு வீரர்கள் மட்டுமன்றிப் பொதுவாக எல்லோருமே முறைசாரா உடைகளுடன் இத் தொப்பியை அணிகிறார்கள்.[1][2][3]

வரலாறு

[தொகு]

1860 ஆம் ஆண்டில், புரூக்லின் எக்செல்சியர்சு என்னும் அடிப்பந்துக் குழுவினர் தற்கால வட்ட வடிவ மேற்புறம் கொண்ட தொப்பியின் மூதாதையான ஒருவகைத் தொப்பியை அணிந்தனர். 1900 ஆண்டளவில், இந்த புரூக்லின் பாணித் தொப்பி மக்களிடையே புகழ்பெற்று விளங்கியது. 1940 களில், விறைப்பூட்டுவதற்காகத் தொப்பியின் உட்புறம் இறப்பர் பொருத்தப்பட்டது. இதுவே நவீன அடிப்பந்துத் தொப்பியின் தொடக்கம் எனலாம். வீரர்களின் கண்களை வெய்யிலில் இருந்து காப்பதற்காகத் தொப்பியில் முன்மறைப்பு வடிவமைக்கப்பட்டது. தொடக்க கால முன்மறைப்புக்கள் நீளம் குறைந்தவையாக இருந்தன. விளையாட்டுக் குழுவினரை அடையாளம் காண்பதில் இத் தொப்பிகள் இன்றும் முக்கியமானவையாக இருக்கின்றன. சிறப்பாக தொப்பிகளில் பொறிக்கப்படும் சின்னம் அல்லது பெயரின் முதல் எழுத்துக்கள் இதற்கு உதவுகின்றன. அதே வேளை தொப்பியின் நிறங்களும், விளையாட்டுக் குழுவின் தெரிவு செய்யப்பட்ட நிறங்களைக் கொண்டு அமைந்திருப்பது குழுக்களை மிகவும் இலகுவாக அடையாளம் காண உதவுகின்றது.

படைத்துறையில்

[தொகு]
அரச கடற்படையில் கப்டனுக்கான தொப்பி

படைத்துறையிலும் சில அலுவலரின் சீருடைகளில் இத்தகைய தொப்பிகள் அடங்குகின்றன. சிறப்பாக ஐக்கிய அமெரிக்கக் கடற்படையிலும், ஐக்கிய அமெரிக்கக் கரையோரக் காவற்படையிலும் இவ்வாறான தொப்பிகளை அணிந்த அலுவலர்களைக் காண முடியும். இவ்வலுவலர்களின் தொப்பிகளில் அவர்கள் சார்ந்த படைப்பிரிவின் சின்னம் இருக்கும். அத்துடன், அலுவலர்களின் பணி தரம் என்பவற்றைப் பொறுத்து அவர்கள் அணியும் தொப்பிகளின் நிறமும் வேறுபடும். எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்க நீர்மூழ்கிப் படையில் பயிற்சிக் கண்காணிப்பாளர்களின் சீருடையின் ஒரு பகுதியாகச் சிவப்பு நிறமான அடிப்பந்து வகைத் தொப்பிகளை அணிகின்றனர். இது போலவே ஐக்கிய அமெரிக்க படையில், வான்குடைப் பேணுனர் அணியும் தொப்பிகள் ஐவப்பு நிறமானவை ஆகவும், வான்குடைப் பயிற்றுனர்கள் அணியும் அடிப்பந்து வகைத் தொப்பிகள் கறுப்பு நிறமானவையாகவும் உள்ளன. ஐக்கிய அமெரிக்கக் காவல் துறையிலும் வழமையாக அணியும் தொப்பிகளுக்குப் பதிலாகச் சில சமயங்களில் நடைமுறைக்கு உகந்தவையான அடிப்பந்து வகைத் தொப்பிகளை அணியும் வழக்கம் உண்டு. இவை நடைமுறைக்கு உகந்தவையாகவும், மலிவானவையாகவும் இருப்பதால் பல தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் தமது காவலர்களுக்கு அடிபந்து வகைத் தொப்பிகளைச் சீருடையின் ஒரு பகுதியாக வழங்குகின்றன.

உலகின் பல பகுதிகளிலும் ஆயுதம் ஏந்திய காவற்படையினரும் அடிப்பந்துத் தொப்பிகளை அணிவது உண்டு. ஐக்கிய அமெரிக்காவில் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் உத்திகள் படையணியினரும் (SWAT), ஐக்கிய இராச்சியத்தில் சிறப்புவகைச் சுடுகலன் ஆணையத்தைச் சேர்ந்தவர்களும், முறையான தலைக் கவசம் அணிவது தேவையற்றது எனக் கருதும்போது அடிப்பந்து வகைத் தொப்பிகளை அணிவர்.

விளம்பரம்

[தொகு]

தற்காலத்தில் பல வணிக நிறுவனங்கள் தமது சின்னம் அல்லது பெயர் பொறிக்கப்பட்ட இவ்வகைத் தொப்பிகளைச் செய்வித்துத் தமது வாடிக்கையாளர்களுக்கும், பிறருக்கும் வழங்குகின்றனர். இது உற்பத்திப் பொருட்களையும் பிற வணிகச் சேவைகளையும் விளம்பரம் செய்வதற்கான ஒரு உத்தியாகப் பயன்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Definition of Bill by Merriam Webster". Merriam Webster. bill noun (1) definition 4. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
  2. Clair, Michael (9 May 2023). "The history of the baseball cap: The long, strange history of the baseball cap". MLB.com. Major League Baseball. பார்க்கப்பட்ட நாள் 24 June 2023.
  3. BBC – Happy 59th, baseball caps 18 December 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிப்பந்துத்_தொப்பி&oldid=3752087" இலிருந்து மீள்விக்கப்பட்டது