அகல்யா ஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ ராம் ஜானகி மந்திர், அகல்யா ஸ்தான், அகியாரி, தர்பங்கா, பீகார்

அகல்யா ஸ்தான் (Ahalya Sthan) அல்லது அகில்யா ஆஸ்தான் என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் பீகார் மாநிலத்தின் தர்பங்கா நகரில் உள்ள அகியாரி தெற்கில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவிலாகும்.[1]

புராணக் கதை[தொகு]

இராமாயணத்தின் படி, இராமனும், இலட்சுமணனும் பிரம்மரிஷி விசுவாமித்திரரின் வேள்வியைப் பாதுகாக்க காட்டுக்குச் சென்றனர். அவர்கள் செல்லும் வழியில் ஒரு ஆளரவமற்ற இடத்தைக் கண்டார்கள். இராமன் அந்த இடத்தைப் பற்றி விசாரித்தபோது, விசுவாமித்திரர் கௌதம மகரிஷியின் மனைவி சதி அகலிகையின் கதையைச் சொன்னார். மகரிஷி தன் மனைவியுடன் இங்கு தங்கி தவம் செய்து வந்தார். ஒரு நாள் கௌதமர் தனது ஆசிரமத்தை விட்டு வெளியே சென்ற போது, அவர் இல்லாத நேரத்தில், இந்திரன் கௌதமரைப் போல் மாறுவேடத்தில் வந்தான். அகலிகை, அந்த நபரின் உண்மையான அடையாளம் தெரியாமல், இந்திரனின் ஆசைக்கு அடிபணிந்தாள். இதையறிந்த கௌதம மகரிஷி தன் மனைவியை அதே இடத்தில் கல்லாக கிடக்கும்படி சபித்தார். தன் தவறை உணர்ந்த அகலிகை சாப விமோசனம் வேண்டினார். "இராமன் இந்த இடத்திற்கு வரும்போது, உனது இயல்பு நிலைக்குத் திரும்புவாய்" என மகரிஷி கூறினார். விசுவாமித்திரர் இராமனை ஆசிரமத்திற்குள் செல்லும்படி கூறினார். இராமரின் பிரகாசம் அந்த இடத்தைப் பிரகாசமாக்கியதும், அகலிகை தனது சொந்த உடலுடன் எழுந்து நின்று இராமனை வணங்கினாள். அகலிகை மகரிஷியின் மனைவியாக இருந்ததால், இராமனும் இலட்சுமணனும் அவளுக்கு வணக்கம் செலுத்தினர்.[2]

கோவில்[தொகு]

அகலிகை ஸ்தானம் ஒரு காலத்தில் மகரிஷி கௌதமரின் ஆசிரமம் இருந்த இடமாகும். இக்கோவில், அதன் தற்போதைய கட்டமைப்பு வடிவத்தில் பொ.ச.1662-க்கும் 1682-க்கு இடையில் மகாராஜா சத்ர சிங், மகாராஜா உருத்ர சிங் ஆகியோரின் ஆட்சியின் போது கட்டப்பட்டது. இந்தியாவின் முதல் இராமன் ஜானகி கோவிலும் இதுதான்.[3] இந்தக் கோவில் கலை மற்றும் பண்டைய இந்திய கட்டிடக்கலையின் சிறந்த வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளுடன் அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே, இராமனின் மனைவியான சீதையின் பாதச்சுவடுகளை முக்கிய வழிபாட்டுப் பொருளாகக் கொண்ட தட்டையான கல் ஒன்றும் உள்ளது.[4]

திருவிழாக்கள்[தொகு]

கோவில் தினமும் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். இந்து மாதமான சித்திரையில் இராம நவமியும் (மார்ச் இறுதியில் - ஏப்ரல் தொடக்கத்தில்), மார்கழியில் விவாக பஞ்சமியும் கொண்டாடப்படுகிறது.[4]

சான்றுகள்[தொகு]

  1. "Ahalya Sthan". Archived from the original on 15 February 2022.
  2. "Ahalya Sthan - Hindu temple in Jaynagar, India". Archived from the original on 15 பிப்ரவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 28 பிப்ரவரி 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "Ahilya Asthan". Archived from the original on 15 பிப்ரவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 28 பிப்ரவரி 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. 4.0 4.1 "Darbhanga And Its Ramayana Connection". Archived from the original on 15 பிப்ரவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 28 பிப்ரவரி 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகல்யா_ஸ்தானம்&oldid=3926951" இலிருந்து மீள்விக்கப்பட்டது