உள்ளடக்கத்துக்குச் செல்

ஹயபுசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹயபுசா
Hayabusa
ஓவியரின் கைவண்ணத்தில் இட்டோகாவா சிறுகோளின் மீது ஹயபுசா விண்கலம் உலவுகிறது
இயக்குபவர்சப்பான் ஜாக்சா
திட்ட வகைசிறுகோளில் இருந்து மாதிரிகளைச் சேகரித்தல்
Current destination2010 சூன் 13 இல் பூமி திரும்பியது
ஏவப்பட்ட நாள்9 மே 2003
ஏவுகலம்சப்பான் எம்-வி
திட்டக் காலம்7 ஆண்டுகள், 1 மாதம், 4 நாட்கள்
தே.வி.அ.த.மை எண்2003-019A
நிறை510 கிகி (உலர் 380 கிகி)
Instruments
AMICA, LIDAR, NIRS, XRS

ஹயபுசா (Hayabusa, ஜப்பானிய மொழியில் はやぶさ 'கழுகு' என்று அர்த்தம்) என்பது சப்பானிய ஆளில்லா விண்கலம் அல்லது விண்ணுளவி. இது 25143 இட்டோகாவா என்ற பூமியை ஒத்த சிறு கோள் (Asteroid) ஒன்றின் மண் மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குக் கொண்டுவர சப்பானிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் அனுப்பப்பட்டது.

இவ்விண்கலம் 2003 மே 9 ஆம் நாள் எம். வி ராக்கெட் மூலம் (M.V. Rocket) ஜப்பானின் காகோஷிமா (Kagoshima) ஏவுகணை விண்வெளித் தளத்திலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டு ஆறு பில்லியன் மைல்கள் (5 பில்லியன் கி.மீ) சுற்றுப் பயணம் செய்து செப்டம்பர் 2005 இல் இட்டோகவா என்ற சிறுகோளை அடைந்தது. அக்கோளில் தரையிறங்கியதும், அக்கோளின் வடிவம், சுழற்சி, நிலவுருவவியல், நிறம், அடர்த்தி, வரலாறு போன்றவற்றை ஆராய்ந்தது. நவம்பர் 2005 இல் அக்கோளின் மாதிரிகளைச் சேகரிக்க முற்பட்டது. சேகரிப்பு தொழில்நுட்பம் சரியாக இயங்கியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும், ஓரளவு தூசி சேகரிப்புக் கலத்தில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனையடுத்து சேகரிப்புக் கலன் பாதுகாப்பாக மூடப்பட்டு விண்கலம் 2010, ஜூன் 13 ஆம் நாளன்று பூமிக்குத் திரும்பியது. இது தெற்கு ஆஸ்திரேலியாவின்

இவ்விண்கலம் மினெர்வா என்ற பெயருடைய ஒரு சிறு தரையிறங்கி (Mini-Lander MINERVA -Micro Nano Experimental Robot Vehicle for Asteroid) ஒன்றையும் கொண்டு சென்றது. ஆனால் அது இட்டகோவாவில் தரையிறங்கவில்லை.

ஹயபுசா உளவிய சிறுகோளின் பெயர் இட்டோகாவா என்று ஜப்பான் மொழியில் பெயரிடப்பட்டது. இக்கோளின் அளவு: (540 மீட்டர்X270 மீட்டர்X210 மீட்டர் (1800'X900'X700'). விண்ணுளவி முரண் கோளை நெருங்கிய நாள் : 2005 செப்டம்பர் மாத நடுவில். ஆனால் தளத்தில் மண் மாதிரியை உறிஞ்ச முயன்ற போது ஏற்பட்ட ஒரு கருவியின் பிழையால் திட்டமிட்டபடிப் போதிய அளவு மண் மாதிரி சிமிழில் சேமிப்பாக வில்லை என்று அஞ்சப் படுகிறது. ஓரளவு தூசி மட்டும் உள்ளே இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சோதனைக்குச் சிமிழைத் திறக்கும் போதுதான் தூசியின் இருப்பு உறுதி செய்யப்படும். ஹயபுசா விண்கலம் மண்மாதிரிகளைச் சேமித்த விண்சிமிழை தெற்கு ஆஸ்திரேலியாவின் பாலவனத் தளத்தில் பாதுகாப்பாய் இறங்கிடத் திட்டமிட்ட 'ஊமெரா இராணுவத் தளத்தில் (Woomera Military Zone) விழ வைத்தது. விண்சிமிழ் ஆஸ்திரேலியப் பாலையில் வந்திறங்கிய தேதி ஜூன் 13, 2010. வெப்பக் கவசம் பூண்ட விண்சிமிழ் (Heat-Resistant Capsule) பாராசூட் குடையால் தூக்கி வரப்பட்டு சிதையாமல் இறங்கி வீழ்ந்தது. அதே சமயத்தில் சிமிழை இறக்கிய ஹயபுசா விண்ணுளவி வெப்பக் கவசமில்லாமல் சூழ்வெளி வளிமண்டலத்தில் வரும்போது உராய்வுச் சூட்டில் எரிந்து வானத்தில் சுடர் ஒளி வீசி மறைந்தது[1]

கலிலேயோ, நியர்-ஷூமேக்கர் போன்ற வேறு விண்கலங்கள் சிறுகோள்களை நோக்கிச் சென்றிருந்தாலும், ஹயபுசா திட்டம் வெற்றியளித்தால், முதற்தடவையாக சிறுகோளில் இருந்து மண் மாதிரிகளை எடுத்த வந்த விண்கலம் என்ற பெருமையைப் பெறும். 2000 ஆம் ஆண்டில் நியர் சூமேக்கர் விண்கப்பல் 433 ஈரோஸ் (Astroid: 433 Eros) என்ற சிறுகோளில் கட்டுப்பாடுடன் இறங்கித் தடம் வைத்தது. ஆனால் தளவுளவியாக அது இயங்கத் தயாரிக்கப் படாததால், அதன் நகர்ச்சி நிறுத்தம் ஆனது[1].

ஹயபுசாவின் சிறப்புக்கள்[தொகு]

  • ஹயபுசா இரண்டு ஆண்டுகளுக்குப் பரிதியின் ஒளியால் இயங்கும் செனான் வாயு பயன்படும் அயன் எஞ்சின்கள் (Xenon Ion Engine, Powered By Sun) நான்கைப் பயன்படுத்தி நீண்ட தூரம் (சுமார் 6 பில்லியன் மைல்) பயணம் செய்தது. விண்கப்பல் மெதுவாகச் சென்றாலும் நீண்ட தூரம் உந்திச் செல்ல முடிந்தது. மிகக் குன்றிய ஈர்ப்பு விசை கொண்ட சிறுகோளை அண்டியதும் ஹயபுசா அதனைச் சுற்றாமல் பரிதி மையப் பாதையிலே (Heliocentric Orbit) கோள் அருகில் சென்றது.
  • சூரிய ஆற்றலைப் பயன்படுத்திய ஹயபுசா ஒரு 'சுழற்சி கன ஆழியின்' (A Rotating Flywheel) மூலம் சிறுகோளின் மிகச் சிறிய ஈர்ப்பு ஆற்றல் முற்போக்கை ஆதரவாக்கிக் கொண்டு இட்டோகாவா என்ற சிறுகோள் மீது குதித்து மிதந்தது[1].

மினெர்வா தரையிறங்கி[தொகு]

மினெர்வா என்னும் மிகச் சிறு 'சுய இயக்கு வாகனத்தைத்' (Robotic Vehicle) ஹயபுசா தூக்கிச் சென்றது. இதன் எடை 590 கிராம் (10 செ.மீ. உயரம், 12 செ.மீ. விட்டம்). 2005 நவம்பர் 12 இல் இந்த வாகனம் இட்டோகாவாவில் இறங்குவதற்கு பூமியிலிருந்து சமிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சமிக்கை ஆணை வருவதற்குள் ஹயபுசாயின் 'உயரமானி' (Altimeter) சிறுகோளிலிருந்து 44 மீட்டர் உயரம் என்று அறிந்து இயங்க ஆரம்பித்தது. மினர்வா வாகனம் சரியான உயரத்தில் இறங்காமல் ஹயபுசா மேலேறும் தருணத்தில் கீழிறங்கத் துவங்கியது. அதனால் இந்த சிறு வாகனம் இட்டோகாவாவில் இறங்க முடியவில்லை[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "ஜப்பான் விண்ணுளவி ஹயபுஸா முரண் கோள் மண்ணை எடுத்துப் பூமிக்கு மீண்டது". திண்ணை. 2010-06-20. பார்க்கப்பட்ட நாள் 2010-06-26.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹயபுசா&oldid=3872336" இலிருந்து மீள்விக்கப்பட்டது