உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீதேவி (பௌத்தம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்மபாலர் ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி அல்லது பெல்டென் லாமோ (திபெத்திய மொழி) திபெத்திய பௌத்தத்தின் கெலுக் பிரிவினரால் வணங்கப்படும் தர்மபாலர் ஆவார். இவர் கௌதம புத்தரின் போதனைகளின் பாதுகாவலராக கருதப்படுகிறார். இவரை ரேமதி எனவும் அழைப்பர். உக்கிர மூர்த்தியான இவர் திபெத்தின் காவலராகவும் கருதப்படுகிறார்.

தலாய் லாமா மற்றும் பஞ்சென் லாமாவின் பாதுகாவலரான இவர் மகாகாலனின் துணை ஆவார். இவர் திபெத்திலும் மங்கோலியாவிலும் பரவலாக வணங்கப்படுகின்றார்.


தோற்றம்

[தொகு]

ஸ்ரீதேவி முற்காலத்தில் லாமோ லா-ட்ஸோ என்ற ஏரியின் காவல் தெய்வகாக இருந்ததாக கருதப்படுகிறது. இவர் முதல் தலாய் லாமாவான கெண்டுன் துருப்பின் கனவில் தோன்றி தலாய் லாமாவின் வழிமரபின் வரும் அனைவரையும் தான் காப்பாற்றுவதாக உறுதியளித்தார்.

இந்த ஏரியில் ஸ்ரீதேவியின் தோற்றம் க்யெல்மொ மக்சொர்மா என ஆழைக்கப்படுகிறது. இந்த உருவத்தில் இவர் மிகவும் அமைதியாக காணப்படுகிறார். இந்த ஏரியும் இவரது பெயரில் பல்டென் லாமா காளிதேவா என அழைக்கப்படுகிறது. இந்தப் பெயரிலிருந்து இவர் காளி தேவியின் அவதாரமாய கருதப்படுகிறார் என்பதை அறியலாம்.

சொகொர்க்யெல் மடத்தின் தெற்கே இருக்கும் மலையே ஸ்ரீதேவியின் இருப்பிடமாக கருதப்படுகிறது.


புராணக் கதைகள்

[தொகு]

சொங்ட்ஸென் கம்போ என்பவரின் ஆட்சியின் போது, ஸ்ரீதேவி அவர் முன் தோன்றி, தனக்கு ஓர் உருவத்தை நிறுவினால், அரசரின் திருலங் புண்ணிய தலத்தைக் காப்பதாக உறுதி கூறினார் எனக் கூறப்படுகிறது. மேலும் இவர் லாலுங் பெல்க்யி டோர்ஜெவை பௌத்தத்துக்கு எதிராக இருந்த அரசன் லங்தர்மாவைக் கொலை செய்யக் கூறியதாகவும் கூறப்படுகிறது. எனவே தான் இவரை லாசாவின் தர்மபாலர் எனப் போற்றுகின்றனர்.

சித்தரிப்பு

[தொகு]

எட்டு தர்மாபலர்களுள் ஒரே பெண் ஸ்ரீதேவி மட்டுமே. இவர் நீல நிறத்துடனும், சிவப்பு கூந்தலுடனும் ரத்தக் கடலை தன்னுடைய வெண் கோவேறு கழுதையின் மீதேறி கடப்பதாக சித்தரிக்கப்படுகிறார். இந்தச் சித்தரிப்பு இவரது உக்கிரப் பண்பை உருவகப்படுத்துவதாக உள்ளது. தர்மபாலர் ஆவதற்கு முன்னர் தன்னுடைய மகனையே கொன்று சேணத்தின் போர்வையாக பயன்படுத்திக்கொண்டார் எனவும் நம்பப்படுகிறது. இவர் மகாகாளியின் ஒரு தோற்றமாகவும் சரஸ்வதியின் உக்கிர அவதாரமாகவும் கருதப்படுகிறார். இவர் மூன்று கண்கள் உடையவராகவும் அவ்வப்போது ரத்தத்தை அருந்துபவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.


வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீதேவி_(பௌத்தம்)&oldid=1557108" இலிருந்து மீள்விக்கப்பட்டது