வேள்வியும் தமிழரும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வேள்வி என்பது தமிழ்ச் சமுதாயத்திற்குப் புதிதல்ல. சங்க காலத்திலேயே வேள்விகள் தமிழ்நாட்டில் நடைபெற்று வந்தமைக்கு சங்க நூல்களில் பல சான்றுகள் கிடைக்கின்றன.

பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி[தொகு]

ஒரு பாண்டியனுக்கு பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்றே பெயர். ‘பக்ருளியாற்று மணலினும் பல்யாண்டு வாழ்க’ என்று புறநானூற்றில் இவன் வாழ்த்துப் பெறுவதால் குமரிக்கண்டமும், பக்ருளியாறும் கடல் கொள்ளப்படுவதற்கு முன்பே நம் தமிழகத்துப் பாண்டி நாட்டினை ஆண்டவன் என்று அவனது காலத்துப் பழமை புலப்படுகிறது. நெட்டிமையார் என்ற ஒரு புறநானூற்றுப் புலவர். இப் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாராட்டிப் பாடுவதாக புறநானூற்றில் 15ஆம் பாட்டாக ஒன்று வருகிறது. அதில் அவர் கூறுகிறார். “பாண்டியனே! உன்னைப் பகத்துப் போராடித் தோற்று வசையை ஏற்றுக்கொண்டோர் பலர்; அறம், பொருள், இன்பம், வீடு என்ற நல்ல நால் வேதத்துக் கூறியவாறு வேள்வி பல செய்து முடித்து அவ்வேள்விச் சாலைகளில் நீ நட்ட யூபத்தூண்கள் பல. இதில் நின்னால் மேற்படி பகைப்புல மன்னர் வசையுற்ற தொகையோ அல்லது நீ நட்ட யூபத்தூண்களின் தொகையோ, இவற்றுள் எதன் தொகை அதிகம் என்று கூறுவது என்று தெரியவில்லையே” என்று அவனைப் பாராட்டுகிறார். நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார் ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார் நசைதர வந்தோர் பலர்கொல்? புரையில் நற்பனுவல் நால் வேதத்(து) அருஞ்சீர்த்திப் பெருங் கண்ணுறை நெய்ம்மலி ஆவுதி பொங்கல் பன்மாண் வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி யூபம் நட்ட வியன்களம் பல்கொல்?

இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி[தொகு]

இப்பாண்டியன் மட்டுமா? யாகத்துடன் இனைத்துப் பேசப்படும் ஒரு சோழமன்னனும் புறநானூற்றில் காணப்படுகிறான். அவன் பெயர் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி. இவனது காலம் மேற்கூறிய பாண்டியனுக்கு மிகப்பிற்பட்ட காலம் என்பது தெரிகிறது. இவன் சங்ககாலச் சோழ வேந்தருள் காலத்தால் பிற்பட்டவன் என புறநானூற்றுக் குறிப்புரை விளம்புவதே இதற்குச் சான்றாகும்.

வடமொழி வேள்வி புலை வேள்வி[தொகு]

புறநானூறில் கூறிய பாண்டியன் செய்த வேள்விகள் பற்றிய செய்திகள் இவன் ஆற்றிய வேள்விகள் முற்றிலும் தமிழர் வழக்கின்பாற்பட்டது என்பதைப் புலப்படுத்துகிறது. காரணம் இது நால்வேதத்திபடி செய்யப்பட்ட வேள்வி என்று குறிப்பிடும்போது, இங்கே குறிப்பிடும் நால்வேதம் நற்பனுவலான நால்வேதம் (அறம், பொருள், இன்பம், வீடு என்ற தமிழ் வேதம்) என்று அடைமொழி கொடுக்கப்படுவதால் நல்லதல்லதான வேறு ஒருவகை வேதத்தினின்றும் அருத்தாபத்தி நியாயத்தால் (பொருட்பேறு) பிரிக்கப்பட்டதே இதற்குச் சான்று ஆகும். அன்றி இவன் செய்த வேள்விகளில் நிறுவப்பட்ட வேள்வித்தூண் (யூபம்) பிற்காலத்து ஆரியர் வழக்கின்பாற்பட்ட வேள்வித்தூணுக்கு வேறானது என்பதும் புலப்படுகிறது. இங்கே வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி யூபம் நட்டான் என வருகிறது. அதாவது வேள்வி முடிந்தபின் சிறப்புற நடந்தேறிய தவவேள்விச் சிறப்பினை உலகம் அறிய ஒரு தூண் நிறுவினான் என்பது இவ்வரிகளின் பொருள். ஆனால் ஆரியர் வழக்க வேள்வியில் வேள்வித்தூண் வேள்வி முடிந்தபின் நடுவதல்ல. வேள்விக்கு முன்னே நடப்படுவது. அந்தத் தூணில் ஆற்றப்போகும் புலைவேள்வியில் பலியிடப்படும் ஆடு, மாடு, குதிரை போன்ற மிருகங்கள் கட்டி வைக்கப்படும். பலியிடப்படபோகும் மிருகங்களைக்கட்டி வைக்கப்படும் தூண் வேறு. இதில் மேற்கூறிய பாண்டியன் எழுப்பிய வேள்வித்தூண் பின்னது. இரண்டிற்கும் உள்ள பாரதூரமான வேறுபாட்டினை உய்த்துணர்க. இதுவே தமிழர் வழக்க வேள்வி என்ற ஒன்று கடல்கோளுக்குப் பின் வந்த கடைச்சங்க காலத்திற்கு முன்னேயே வழங்கி வந்தது என்பதற்குத் தனிச்சிறப்புச் சான்றாகும்.

தொல்காப்பியத்தில் வேள்வி[தொகு]

தமிழ் இலக்கணத்தில் மிகப்பழமை வாய்ந்ததும், ஆணைச் சான்றாக கொள்ளக் கூடியதும், ஒல்காப் புகழ் பெற்றதுமான தொல்காப்பியம் பாடாண் திணையின் துறைகளை விரித்துரைக்கையில் அதில் ஒன்றாக, “கபிலைக் கண்ணிய வேள்வி நிலையும்” (86-6) என்று கூறுகிறது. வேள்வியாற்றிய பின், வேள்வி ஆற்றிய சான்றோர்க்கு கபிலநிறம் என்ற கருமை நிறப் பசுக்களைத் தானமாகக் கொடுத்தலை மேற்கூறியவாறு தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். எனவே வேள்வி என்பது தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர் வழக்கில் இருந்ததை அறிகிறோம். அதிலும் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படுவதெல்லாம் அவருக்கு முன் மிகப் பழங்காலத்திலிருந்து தொன்று தொட்டு வந்தவையாகும் என்பதற்கு அடிக்கடி அவர்தம் சூத்திரங்களில் காணப்படும் ‘என்மனார் புலவர்’ என்ற சொற்றொடர் சான்று பகரும். இப்படி எனக்கு முன்னிருந்த புலவர்கள் சொன்னார்கள் என்பது அதன் பொருள். எனவே வேள்வி தொல்காப்பியரின் காலத்திற்கு முன்னாலேயே தமிழகத்தில் வழங்கி வந்தது என்பது உறுதியாகிறது.

சங்க நூல்களில் வேள்வி[தொகு]

இன்னும் வேள்வி பற்றிய செய்திகளைக் கூறும் சங்க நூல்கள் சில. மதுரைக்காஞ்சி (494-495) ஆவுதி மண்ணி அவிர்துகில் முடித்து மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல

புறநானூறு 361 கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு அருங்கலம் நீரோடு சிதறி

கலித்தொகை 36 கேள்வி அந்தணர் கடவும் வேள்வி யாவியின் உயிர்க்கும் என் நெஞ்சே

பதிற்றுப்பத்து 70 புரையோள்கணவ பூண்கிளர் மார்ப தொலையாக் கொள்கைச் சுற்றஞ் சுற்ற வேள்வியில் கடவுள் அருத்தினை

பரிபாடல் 5 மாதிரம் அழல வெய்து அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான்

சிலப்பதிகாரம் 23 (67-70) ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர் முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி ஐம்பெரும் வேள்வியும் செய்தொழில் ஓம்பும் அறுதொழில் அந்தணர் பெறுமுறை வகுக்க

சிலப்பதிகாரம் 28 (175-178) வானவர் போற்றும் வழிநினக் களிக்கும் நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான் அருமுறை மருங்கின் அரசர்க் கோங்கிய பெருநல் வேள்வி நீ செயல் வேண்டும்.

சிலப்பதிகாரம் 28 (228-233) கைவினை முற்றிய தெய்வப் படிமத்து வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப் பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி வேள்வியும் விழாவும் நாடொறும் நிறுத்தி கடவுள் மங்கலம் செய்கென ஏவினன்

மேலே காணப்படும் சிலப்பதிகாரச் சான்றுகளில் இறுதியில் வரும் சான்று கடவுள் உருவச் சிலையை நாட்டி கும்பாபிசேகம் செய்வது பற்றி வருவது. அதற்கான வேள்வி புலை வேள்வியாக இல்லாமல் ‘புனித வேள்வியாக அங்கே பூப்பலி மட்டும் செய்யப்படுவது குறிப்பில் கொள்ளத்தக்க செய்தி. அத்துடன் இன்று நாம் கும்பாபிசேகம் என்று கூறுவதை மிக அழகிய தமிழில் இளங்கோ அடிகள் கடவுள் மங்கலம் செய்தல் என்று கூறியிருக்கிறார்.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் வேள்வி புத்தகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேள்வியும்_தமிழரும்&oldid=1830995" இருந்து மீள்விக்கப்பட்டது