வெங்கல் சக்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சக்கரைச் செட்டியார், சென்னையின் மேயராக 1941-1942 வரை இருந்தவர் ஆவார்.சென்னை தொழிலாளர் சங்கத்தை தோற்றுவிப்பதில் முதன்மையாக விளங்கியவர்[1]. காங்கிரஸ் கட்சியிலும், பின்னர் நீதிக்கட்சியிலும் உறுப்பினராக இருந்தார்.

பிறப்பு, ஆரம்ப வாழ்க்கை[தொகு]

1878 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் நாள் சென்னையில் பிறந்தார். இவரது தந்தையார் கேசவலு செட்டியார்; தாயார் ஆண்டாள் அம்மாள். சென்னை கிறித்துவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்று பி. ஏ. பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும் போது கல்லூரி மாணவர் தலைவராகவும் செயல்பட்டார். கிறித்துவ போதனைகளால் கவர்ந்து ஈர்க்கப்பட்ட சக்கரை செட்டியார் கிறித்துவ மதத்தைத் தழுவினார். ஆங்கிலத்தில் புலமை பெற்று விளங்கினாலும், தாய் மொழியாகிய தமிழ் மீது பற்றுக் கொண்டு, தமிழாசிரியர் 'பரிதிமாற் கலைஞரிடம்' தமிழ் பயின்றார். இரண்டு ஆண்டுகள் பெண்கள் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், 1902 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். சிறிது காலம் வழக்குரைஞராகப் பணியாற்றினார்[2].

இந்திய விடுதலைப் போராட்டம்[தொகு]

சூரத்தில் 1907ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், வ.உ.சி, மகாகவி பாரதியார், சுப்பிரமணிய அய்யர் ஆகியோரோடு சென்று கலந்து கொண்டார். இந்த மாநாட்டில்தான், காங்கிரசின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் மிதவாதிகளுக்கும், தீவரவாதிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, திலகரின் தலைமையில் அணிதிரண்ட தீவரவாதிகள் பிரிவினரோடு, சக்கரை செட்டியார் சேர்ந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தும் பணியாற்றினார். ரௌலட் சட்டத்திற்கு எதிரான போராட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம், வேல்ஸ் இளவரசர் வருகையைப் புறக்கணிப்பதற்கான போராட்டம் ஆகியவற்றைச் சென்னையில் நடத்துவதில் முக்கிய பங்காற்றினார் சக்கரை செட்டியார். தொழிற்சங்கத் தலைவராகவும் அவர் இருந்ததால், ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவாகத் தொழிலாளர்களை அணிதிரட்டினார்[2].

தொழிற்சங்கப் பணிகள்[தொகு]

'சென்னை தொழிலாளர் சங்கம்' 27-04-1918 அன்று துவக்கப்பட்டது. பி.பி. வாடியா தலைவராகவும், திரு.வி.க., சக்கரை செட்டியார் இருவரும் துணை தலைவர்களாகவும், செல்வபதி செட்டியார், ராமானுஜூலு ஆகியோர் செயலாளர்களாகவும் பொறுப்பேற்றனர்[3]. பர்மா ஆயில் கம்பெனியைச் சார்ந்த மண்ணெண்ணெய் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 1927 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போராட்டத்தில் பதினொரு தொழிலாளர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள். அப்போது, சென்னை மாநகராட்சி உறுப்பினராக சக்கரை செட்டியார் இருந்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநகராட்சி நிதியிருந்து உதவிகள் வழங்கிட ஏற்பாடு செய்தார்[2]. சக்கரை செட்டியார், முதல் மத்திய தொழிற்சங்க அமைப்பான ‘அகில இந்திய தொழிற் சங்க காங்கிரஸ் (ஏ. ஐ. டி. யு. சி) யின் தமிழ் மாநிலத் தலைவராக 1943 முதல் 1945 வரையிலும், மீண்டும் 1951 முதல் 1956 வரையிலும் பொறுப்பு வகித்தார். 1948-1949 ஆம் ஆண்டுகளில் தொழிற்சங்கங்கள் தடைசெய்யப்பட்டன.

பிற சிறப்பு அம்சங்கள்[தொகு]

  • 1922 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாரதியின் பாடல் தொகுப்பான ‘சுதேச கீதங்கள்’ என்னும் நூலுக்கு, சக்கரை செட்டியார் முன்னுரை எழுதியுள்ளார்[2][4].
  • 1956 ல் சென்னை மாகாண சட்ட மன்றத்தில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் சி.சுப்பிரமணியத்தால் முன் மொழியப்பட்டது. மேலவையில் அதனை ஆதரித்து சக்கரைச் செட்டியார் உரையாற்றினார்.

இறப்பு[தொகு]

சக்கரை செட்டியார் 1958 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி மறைந்தார்[2].

மேற்கோள்கள்[தொகு]


முன்னர்
ஜீ. ஜானகிராம் செட்டி
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1941-1942
பின்னர்
சி. தாதுலிங்க முதலியார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கல்_சக்கரை&oldid=2851932" இருந்து மீள்விக்கப்பட்டது