உள்ளடக்கத்துக்குச் செல்

பரிதிமாற் கலைஞர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. கோ. சூரியநாராயண சாத்திரி
பிறப்பு(1870-07-06)சூலை 6, 1870
விளாச்சேரி, மதுரை மாவட்டம், இந்தியா
இறப்புநவம்பர் 2, 1903(1903-11-02) (அகவை 33)
சென்னை, இந்தியா
பணிதமிழ்ப் பண்டிதர்
பெற்றோர்கோவிந்த சிவன், லட்சுமி அம்மாள்

பரிதிமாற் கலைஞர் எனப்படும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (சூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றியவர்.[1]

இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர்[தொடர்பிழந்த இணைப்பு] என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

2007-இல் இந்திய அஞ்சல் தலை

மதுரை அருகே விளாச்சேரி ஊராட்சி என்னும் ஊரில் கோவிந்த சிவன், இலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு மகனாக இவர் பிறந்தார். வடமொழியை தந்தையாரிடமும், தமிழை மதுரை சபாபதி முதலியாரிடமும் கற்றார். இளவயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர் பின்னாளில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ்மொழியிலும், மெய்யியலிலும் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறினார். தமிழ்மொழியின் வரலாறு மற்றும் நாடகவியல் (நாடகங்களுக்கான இலக்கணம்) உட்பட பல நூல்களை எழுதினார். கலாவதி (1898), ரூபாவதி என்ற நாடக நூல்களை எழுதி தாமே கலாவதி, ரூபாவதி எனும் பெண் பாத்திரங்களில் நடித்தார். இராவ் பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களால் திராவிட சாஸ்திரி எனச் சிறப்பிக்கப்பட்டார். தனக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர் சபாபதி முதலியாரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவர் 1898-இல் மறைந்தபோது,

மாமதுரைப் பெம்மான்மேல் மாலையெனப் பேர்புனைந்து
காமர் சிலேடை வெண்பாக் கட்டுரைத்த பாவலனே
பாமணார் கோவே நீ பாரினைவிட் டேகியது
தாமதுரை சாமீ தமியேன்செய் தீவினையோ

என்று பாடி வருந்தினார்

இது தவிர வடமொழியற்ற நல்ல தமிழ்மொழி வேண்டும் என்பதில் பெரும் முனைப்பு காட்டினார்.

இவரது நூல்கள்[தொகு]

தமிழக அரசு இவரது மரபுரிமையாளர் 19 பேருக்கு ரூபாய் 15 லட்சம் பரிவுத் தொகையாக அளித்து இவரது பதின்மூன்று நூல்களும் 2006 திசம்பர் 2 அன்று தமிழக அரசால் அரசுடமையாக்கப்பட்டன.[2]

பரிதிமாற் கலைஞர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க நூல்கள் பின்வருமாறு:

 • ரூபாவதி
 • கலாவதி
 • மான விஜயம்
 • தனிப்பாசுரத் தொகை
 • பாவலர் விருந்து
 • மதிவாணன்
 • நாடகவியல்
 • தமிழ் வியாசங்கள்
 • தமிழ் மொழியின் வரலாறு.
 • சித்திரக்கவி விளக்கம்
 • சூர்ப்ப நகை - புராண நாடகம்

பதிப்பித்த நூல்கள்[தொகு]

 • சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898)
 • மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898)
 • புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899)
 • உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901)
 • தனிப்பாசுரத்தொகை (1901)

பரிதிமாற்கலைஞரின் மறைவு[தொகு]

நவம்பர் 2, 1903-இல் பரிதிமாற் கலைஞர் மறைந்தார். 33 ஆண்டுகளே வாழ்ந்து இவர் மறைந்தபோது இவரது பேராசிரியர் மில்லர் (சுகாட்டுலாந்தைச் சேர்ந்தவர்) பின்வருமாறு புலம்பி அழுதுள்ளது அவரது ஆளுமைக்குச் சான்றாகும்:

நினைவில்லம்[தொகு]

மதுரை மாவட்டம், விளாச்சேரியில் பரிதிமாற் கலைஞர் பிறந்து, வாழ்ந்த இல்லத்தை, தமிழ்நாடு அரசு ரூ. 7.90 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து நினைவில்லமாக மாற்றி, 31 அக்டோபர் 2007 அன்று திறந்து வைத்தது. ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில், இவரது நினைவில்லத்தில் சூலைத் திங்கள் 6-ஆம் நாளன்று பரிதிமாற் கலைஞரின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.[3]

மேற்கோள்[தொகு]

 1. பரிதிமாற் கலைஞர்
 2. பரிதிமாற் கலைஞரின் நூல்கள்
 3. "பரிதிமாற் கலைஞர் நினைவில்லம்". Archived from the original on 2019-07-06. பார்க்கப்பட்ட நாள் 2019-07-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிதிமாற்_கலைஞர்&oldid=3779296" இலிருந்து மீள்விக்கப்பட்டது